தேனி: ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதிக்குள் டி.டி.வி. தினகரன் அணியில் அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் கிளை கழகங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்று, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆண்டிபட்டி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

தேனியில் டி.டி.வி. தினகரன் அணி சார்பில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

தேனி மாவட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளில் பெரும்பாலானோர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். என்னை மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தவர்கள், கட்சியில் இருந்து நீக்குவதாகக் கூறவில்லை.

டி.டி.வி. தினகரன் உத்தரவுப்படி, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளை அழைத்து இங்கு செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி வருகிறேன். இதற்காக, என்னையும், கூட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களையும் அதிமுக விலிருந்து நீக்கிவிடுவார்களா?.

ஆர்.கே.நகர் தொகுதி வெற்றி மூலம் அதிமுக தொண்டர்களும், மக்களும் எங்கள் பக்கம் உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளோம். உள்ளாட்சித் தேர்தலை விரைவில் சந்திக்க உள்ளோம். வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தையும் மீட்போம். அதுவரைக்கும் தான் இந்த திட்டம் என்றவர் இந்த அரசு பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதே நாங்கள் அடைந்த வெற்றிக்கும், அடையப் போகும் வெற்றிக்கும் முக்கிய காரணம். பேருந்து கட்டணத்தை 60 சதவிகிதம் வரை உயர்த்தியிருப்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையை காட்டுகிறது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வந்தால், அமைச்சர்கள் தொகுதி பக்கம் தலை காட்ட முடியாத நிலை ஏற்படும்.

அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் மீண்டும் நமக்கு வந்து சேருவது உறுதி. அதிமுக அம்மா அணி என்ற பெயரில் கட்சி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கட்சியில் கிளை நிர்வாகிகளை நியமிக்க சம்பந்தப்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் செயலர்களிடம் படிவம் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதிக்குள் அனைத்து கிளைகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து, புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டு விடும் என்றார்.

செல்வாக்கை நிரூபிப்பாரா ஓ.பி.எஸ்.?: இந்தக் கூட்டத்தில் பேசிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட பெரியகுளம் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் கதிர்காமு, சட்டப்பேரவையில் அதிமுக அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ.கள் 18 பேரை சட்டப்பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்துள்ளார். இந்த வழக்கின் மீதான நீதிமன்ற தீர்ப்பு சில நாள்களில் வர உள்ளது.

அந்தத் தீர்ப்பில் எம்.எல்.ஏ.கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டால், நாங்கள் அனைவரும் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுவோம். தனக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாகக் கூறிக்கொள்ளும் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, அதே தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபிப்பாரா? என்றவர் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். அனைவரும் தினகரனுடன் பேரவைக்குள் செல்வோம். தினகரன் தலைமையில் ஆட்சி மாற்றம் விரைவில் வரும் என்றார்.

பகிர்