சென்னை: தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடம் இல்லை என்றும், பாஜவுடன் கூட்டணி குறித்து, தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சென்னை வேப்பேரியில் உள்ள குரு சாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரியின் 27ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். கல்லூரியின் செயலாளர் கவுதம், துணைத் தலைவர் பாபுலால்ஜி முனோத் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் எம்.கே.மாலதி ஆண்டறிக்கையை வாசித்தார். இந்த விழாவில் கல்லூரியில் பயின்று சென்னை பல்கலைக்கழகம் அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு துணை முதலமைச்சர் பரிசுகளையும், பதுக்கங்களையும் வழங்கி கவுரவித்தார்.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:
போக்குவரத்து துறை தமிழக மக்களுக்காக சேவை செய்யும் துறையாகும். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு, தற்போதுதான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. டீசல் விலை மற்றும் உதிரி பாகங்களின் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவதால் பஸ் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது. போக்குவரத்துத்துறை ஊழியர்கள் அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தை 10 ஆண்டுகள் கழித்து பெறுகிற நிலை ஏற்படும். தற்போது இருக்கும் நிலையை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா விஷயங்களையும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னிடம் கலந்து பேசியே முடிவு எடுக்கிறார்.
டெல்டா விவசாயிகளுக்கு தேவையான காவிரி நீரை பெற்று தருவதற்காக தமிழக முதலமைச்சர் விரைவில், கர்நாடக முதல்வரை சந்தித்து பேச உள்ளார். 1967ம் ஆண்டுக்கு பிறகு, தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளே ஆட்சி செய்து வருகின்றன.
தேசிய கட்சிகளுக்கு, தமிழ்நாட்டில் ஒருபோதும் இடமில்லை. உள்ளாட்சி தேர்தல் வரும்போது, பாஜவுடன் கூட்டணியா என்பது குறித்து முடிவு செய்யப்படும். பொது சொத்துக்களை சேதப்படுத்தினாலோ, அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.