சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தில் உள்ள சின்னத்தில் பாம்பு நீக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் தனது ரசிகர்களை சந்தித்தார் . டிசம்பர் 31 தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவிப்பு வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. பலர் இதில் உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினி ரசிகரக்ளை சந்தித்தபோது மேடைக்கு பின்னால் இருந்த சின்னத்தில் பாபா முத்திரை மற்றும் தாமரைப் பூ இருந்தது. இதனால் ரஜினியை பாஜகதான் இயக்குவதாக பலர் விமர்சித்தனர். இதனால் தாமரை சின்னத்தை நீக்கிவிட்டு பாபா முத்திரையை மட்டும் வெளியிட்டார்.

பாபா முத்திரையை சுற்றி உள்ள பாம்பு ராமாகிருஷ்ணா மடத்தின் லோகோவில் இருக்கும் பாம்பு போல் உள்ளது என்று தென்மாவட்ட நிர்வாகிகள் கூறியுள்ளனர்.அதனால் அந்த பாம்பு படம் நீக்கப்பட்டு தற்போது ரஜினி மக்கள் மன்றம் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்மீக அரசியலை முன்னெடுப்போம் எனக்கூறிய ரஜினிகாந்த் நேர்மையான மற்றும் தர்மமான அரசியல்தான் ஆன்மீக அரசியல் என விளக்கம் அளித்தார். முன்னதாக, அரசியல் வருகையை அறிவித்தபின், வெற்றியின் அடையாளமாக பாபா முத்திரையையும் காண்பித்தார்.

ரஜினி முன்பு வைத்திருந்த முத்திரையில் இருந்த தாமரை சின்னம், உடல், மன, பேச்சு இவற்றின் தூய்மையை உணர்த்துவதாக உள்ளது. மறுபிறவி, மாற்றம், குணமடைதல், ஒழுக்கம் இவற்றை உணர்த்துவதாக பாம்பு குறியீடு உள்ளது. யோகாவில் இந்த முத்திரை அபன வாயு முத்திரை எனப்படுகிறது.

அபான வாயு முத்திரை என்பது நஞ்சு நீக்கம் மற்றும் தூய்மைபடுத்துதலுடன் தொடர்புடையது. அபான முத்திரையை கடைபிடிப்பதன் மூலம் மலச்சிக்கல், சிறுநீர் வெளியேறா நிலை, மூலம், வாய்வு உள்ளிட்ட தொல்லைகள் நீங்கும். ஹார்ட் அட்டாக் உள்ளவர்களையும் கூட இந்த முத்திரை இறப்பிலிருந்து காக்கும்.

சின்னத்திற்கு வரும் விமர்சனங்களுக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றம் செய்கிறார் ரஜினி. முதலில் தாமரையை நீக்கினார், அப்புறம் பாம்பை நீக்கினார். பாபா முத்திரையை இலுமினாட்டிகள் சின்னம் என்று சீமான் உள்ளிட்ட பலரும் விமர்சிக்கின்றனர். கடைசியில் பாபா முத்திரையையும் நீக்கிவிட்டு புது சின்னத்தை அறிவிப்பாரா ரஜினி.

பகிர்