முன்னதாக ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கியது போல் தமிழக அரசு பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. கடந்த இடைத்தேர்தலின்போது அதிமுக வெற்றி பெற்றால் வாகாளர்களுக்கு இலவச செல்போன் மற்றும் மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. தமிழக அரசு மானிய விலை ஸ்கூட்டிகளை வரும் 24ஆம் தேதி முதல் வழங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மானிய விலையில் ஸ்கூட்டி வாங்குவதற்காக பெண்கள் லைசென்ஸ் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த மானிய விலை ஸ்கூட்டிகளை பெற தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மானிய விலையில் ஸ்கூட்டி பெற விரும்பும் பெண்கள் ஓட்டுநர் உரிமம் எனும் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். அதேபோல் மானிய ஸ்கூட்டி பெற விண்ணப்பிப்பவர்கள் ஆதார் எண்ணையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் மானிய விலையில் ஸ்கூட்டியை பெறுவதற்காக லைசென்ஸ் இல்லாத பெண்கள் லைசென்ஸ் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் காலை 8 மணிக்கே பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. வரிசையில் நின்று அவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகிறார்கள். மாநிலம் முழுவதும் பெரும்பாலான வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் இதே நிலை காணப்படுகிறது. நமது கப்சா நிருபர் நேரடி விசிட்டில் கண்ட காட்சிகள் பின்வருமாறு: பெண்கள் கூட்டம் அலைமோதுவதால் ஆர்டிஓ அலுவலகங்கள் டாஸ்மாக்குகளை போல் காணப்படுகின்றன.
அங்கே சரக்கு வாடை வீசுவதுபோல் இங்கே பெட்ரோல் வாடை வீசுகிறதாம். ஆதார் அட்டையும் கட்டாயம் என்பதால் மாநகராட்சி அலுவலகங்களிலும் மத்திய அரசுக்கு ஒரு கணிசமான தொகை வசூல் ஆகிறது. முன்பு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட பேன் மிக்சி கிரைண்டர் சில இடங்களில் தீப்பிடித்து எறிந்தன, பல பழுதடைந்தன. அப்போது எலக்ட்ரீசியன்கள் பழுது நீக்கி நன்றாக சம்பாதித்தனர். அதுபோல் இப்போது இருசக்கர வாகன மெக்கானிக்குகளுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அது போல் அம்மா உணவகங்களில் சுவரில் பதிக்க செய்த ஜெயா படம் பொறித்த டைல்ஸ்கள் வட நாட்டில் ஒரு ஓட்டலில் தரையில் ஆயிரக்கணக்கில் பதிக்கப்பட்டு மிதித்து அவமதிப்பிற்கும் கண்டனத்திற்கும் உள்ளாகின. அம்மா படம் போட்ட காலண்டர்கள் டிச.5 இறந்ததும், குப்பைக்கூடைக்கு இரையாகின. அதுபோல் மானிய விலை ஸ்கூட்டர் சீக்கிரம் தகர டப்பாவாகி காயலான்கடைக்கு வந்துவிடும் என காத்திருக்கின்றனர் பழைய பேப்பர் கடைக்காரர்கள். அவர்களுக்கும் கொண்டாட்டம் தான். மூன்று முறை முதல்வர் பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், ஆட்சியை பிடிக்க மெரினா ஜெயா சமாதியில் செய்த தர்மயுத்தம் பிசு பிசுத்துப்போனதால் ஆடிட்டர் குருமூர்த்தியின் கால் பிடித்து எடப்பாடியின் அடி வருடியாக துணை முதல்வர் பதவி வகிக்கிறார். ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள இப்படி தரை லோக்கலாக இறங்குவது தமிழக அரசியல் வாதிகளுக்கு புதிதல்ல.
இரு சக்கரவாகனத்தில் உள்ள இரண்டு சக்கரங்கள் போல் டெட்பாடியும் கூன்பாண்டியனும் மோடி என்ற வாகன ஓட்டியால் கண்மண் தெரியாமல் ஓட்டப்பட்டு மக்களை நசுக்கி துன்புறுத்துகின்றனர். வதைக்கின்றனர். சமீபத்திய பஸ் கட்டண உயர்வு கூட பெட்ரோல் விற்பனை அதிகரித்து, அம்பானி கொழிக்கத்தான். முன் சக்கரமாக எடப்பாடியும், பின்சக்கரமாக ஓபிஎஸ் சும் இருக்கும் தமிழக அரசு என்ற ஸ்கூட்டியில் பின் சக்கரம் முன் சக்கரத்தை முந்துமா அல்லது பன்ச்சர் ஆகி பாதியில் புடுங்கிக் கொண்டு ஆட்சியைக் கவிழ்க்க மீண்டும் தர்மயுத்தம் செய்யுமா? தகரடப்பா ஸ்கூட்டியைப் போல் ஆட்சி கவிழ்ந்து (அதிமுக என்ற டூவீலர்) காயலான் கடைக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார் நமது கப்சா நிருபர்.
பகிர்