மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கிழக்கு கோபுரம் அருகே ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதில் ஏராளமான கடைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பூஜைகள் முடிந்து வழக்கம்போல நடை சாத்தப்பட்டு வெளிப்பிரகார கதவுகள் அடைக்கப்பட்டன. இந்நிலையில், கிழக்கு ராஜகோபுரம் அருகே உள்ள ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் உள்ள கடைகளில் இருந்து இரவு கரும்புகை வெளியேறியது. இதைக்கண்ட போலீஸார் மற்றும் கோயில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள ஒரு கடையில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியுள்ளது. பிளாஸ்டிக் விளையாட்டு பொருள்கள் இருந்த அக்கடையில் தீ மளமளவெனப் பற்றி எரியத் தொடங்கியதால் தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் அருகில் இருந்த 3 கடைகளுக்கும் தீ பரவியது.
பெரியார் நிலையம், மதுரை நகர், அனுப்பானடி, தல்லாகுளம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 8-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. 200-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.
எளிதில் தீப்பிடிக்கும் சாமான்கள், மரச்சாமான்கள் அதிகளவில் இருந்ததால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
மண்டபத்தின் ஒரு பகுதியில் பரவிய தீயை அணைக்க முயற்சித்தபோது, மற்றொரு பகுதியில் தீ வேகமாக பரவியது. இதையடுத்து கோயிலின் வடக்கு பிரகாரம் வழியாகவும் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. ஆனால், அதற்குள் அங்கிருந்து தீ அடுத்த பகுதிக்கும் பரவியதால் கோயிலுக்குள் தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. பழைய திருக்கல்யாண மண்டபம் வழியாகவும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு நீண்ட குழாய்கள் மூலம் ரசாயனம் கலந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதற்கிடையே தீயின் வெப்பம் காரணமாக ஆயிரம் கால் மண்டபத்தின் மேற்கூரைகளில் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர், மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையர் நா.நடராஜன் உள்ளிட்டோர் தீயணைக்கும் பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தினர். இரவு 11 மணிக்கு தீயணைக்கும் பணிகள் தொடங்கிய நிலையில் சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பக்தர்கள் குவிந்தனர்
தீ விபத்து குறித்த அறிந்த பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர், பாஜகவினர் கோயில் முன்பு குவிந்தனர். கோயிலுக்குள் இருக்கும் கடைகளால் தான் தீவிபத்து ஏற்பட்டது. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்த்தூர் ஜீயர் கூறும்போது ஆண்டாளை கேவலப்படுத்தியதால் தெய்வக்குற்றமாகி மதுரை மீனாட்சி கோவிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று கப்ஸா நிருபரை எச்சரித்தார்.