சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ1 குற்றவாளி ஜெயா இறந்துவிட்டதால், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் மற்ற குற்றவாளிகள் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சசியும், இளவரசியும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலா சிறையில் சலுகைகளை அனுபவித்து வருவதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. அதில் சசிகலா சலுகைகளை பெற்றது உண்மை என்று தெரியவந்தது. மேலும் அவரும் இளவரசியும் சிறையிலிருந்து ஷாப்பிங் சென்றுவிட்டு திரும்புவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகின. சிறையில் உள்ள சசிகலாவை யாரெல்லாம் சந்தித்திருக்கிறார்கள் என்ற தகவலை ஆங்கில ஊடகம் ஒன்று ஆர்டிஐ மூலம் கேட்டு பெற்றது. இதற்கு சிறைத் துறை அதிகாரிகள் சில தகவல்களை கொடுத்துள்ளனர். வரி ஏய்ப்பு வழக்கில் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு தான் மவுன விரதம் இருப்பதாக சசிகலா பதில் கடிதம் எழுதி இருக்கிறார். இதனால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐடி துறையினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தில் சசிகலாவின் சொந்த பந்தங்களை குறி வைத்து ஆபரேஷன் கிளின்மணி என்ற மெகா ரெய்டு அரங்கேறியது. சுமார் 5 நாட்கள் நடைபெற்ற இந்த ரெய்டின் போது சசிகலாவின் அங்காளி பங்காளி முதல் ஜோசியர் வரை என அனைவரையும் தோண்டித் துருவியது வருமான வரித்துறை. சசிகலாவின் அண்ணன் வாரிசுகளான கிருஷ்ணப்ரியா, விவேக்கிடம் வருமான வரித்துறையின் லென்ஸ் பார்வை ஆழமாக இருந்தது. வருமான வரித்துறையினர் இந்த ஆவணங்களை சரிபார்த்ததில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் ரூ. 4,500 கோடி வருவாய் ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சசிகலாவிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறையினர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிற்கு சம்மன் அனுப்பியுள்ளனர். வருமான வரித்துறையின் கடிதத்திற்கு சிறைத்துறை கண்காணிப்பாளர் மூலம் விளக்கம் அளித்துள்ள சசிகலா தாம் மவுன விரதம் இருப்பதாக பதில் எழுதியுள்ளார். ஜெயலலிதா மரண விசாரணைக்கான நீதிபதி ஆறுமுக சாமி கமிஷன், வருமான வரித்துறை என இரண்டு தரப்பின் சம்மனுக்குமே தான் மவுன விரதம் இருப்பதாக பதில் அளித்துள்ளார் சசிகலா. விசாரணைகளில் இருந்து தப்புவதற்காக முன் கூட்டியே போட்ட திட்டமா மவுன விரதம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் ஏராளமான வழக்குகளை விசாரித்த வருமான வரித்துறைக்கு சசிகலாவின் பதில் சற்றே ஆச்சரியமாக இருக்கிறது. எனினும் அவரிடம் விசாரித்தால் மட்டுமே இதில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும் என்பதால் பிப்ரவரி 10ம் தேதி வாக்கில் வருமான வரித்துறையினர் சசிகலாவிடம் விளக்கம் கேட்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எது பற்றி கேட்டாலும் வாய் திறக்காத சின்னம்மா ஒரு முடிவுக்கு வந்துள்ளார். காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் தகவல் பறிமாறப் பயன் படுத்தும் சைகை பாஷையினை (சைன் லேங்குவஜ்) சசிகலா டெலிபதியில் பயிற்சியாளர் ஒருவரிடம் கற்று வருவதாகவும். அதில் ரஜினியின் முத்திரையும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சைகை பாஷை தெரியாததால், விசாரணை அதிகாரிகள் ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் டெஃப் அண்ட் டம்ப் பள்ளி நோக்கி படை எடுத்துள்ளனர். கடந்த மாதம் 5-ம் தேதி முதல், சசிகலா மௌன விரதம் இருந்துவருவதாகக் கூறப்பட்டாலும், அவரின் இந்த விரதமே விசாரணையைத் தள்ளிப்போடும் யுக்தியாகப் பார்க்கப்படுகிறது. இதுவரை, விசாரணை என்றால் மருத்துவமனைக்குச் சென்று படுத்துக்கொள்ளும் நிலையை மாற்றி, மௌன விரதம் என்ற அஸ்திரத்தின் வழியாக விசாரணையைத் தள்ளிப்போடலாம் என்ற புதிய வழியை சசிகலா உருவாக்கியுள்ளார். ஐடி துறையையே அதிரவைத்த சசிகலா பதில் சம்மனால் சிறைத்துறை வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.