மயிலாடுதுறை: மயூரநாதர் கோவிலில் உள்ள அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் போட்ட குருக்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அபயாம்பிகை உடனாகிய மாயூரநாதர் கோயில் உள்ளது. இங்கு மாயூரநாதர் லிங்க வடிவிலும் கோயிலின் வட பகுதியில் அபயாம்பிகை தனி சன்னதியிலும் அருள்பாலித்து வருகின்றனர்.

இந்த கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது ஆகும். இதன் நிர்வாகத்தை குருமூர்த்தி என்பவர் கண்காணித்து வருகிறார்.

அபயாம்பிகை அம்மனுக்கு நாள்தோறும் 6 கால பூஜை நடைபெற்று வருகிறது. ஒவ்வொருநாளும் குருக்கள் மாறி மாறி பூஜை செய்து வருகின்றனர்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு வந்த ராஜ் குருக்களும் அபாயம்பிகை சன்னதிக்கு 6 கால பூஜையை செய்து வருகிறார். கடந்த 2ம் தேதி தைவெள்ளி விஷேசமானது என்பதால் அன்றைய பூஜையை ராஜ்குருக்கள் செய்திருந்தார்.

மாலையில் நடைபெற்ற சந்தன அலங்காரத்திற்கு திடீரென்று சுடிதார் அணிவித்து பூஜை செய்தார். இதை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கர்ப்ப கிரகத்தில் உள்ள இந்த சுயம்பு அபயாம்பிகை சிலையை புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோலத்தை கண்ட ஒருசிலர் தங்களது செல்போனில், படம் எடுத்துள்ளனர்.

அந்த போட்டோ பேஸ்புக், வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது. மேலும் அம்மனுக்கு சுடிதார் அணிவிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில் அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த ராஜ் குருக்கள் உள்ளிட்ட இருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். ஆகம விதகளுக்கு மாறாக அம்மனுக்கு ஆடை அலங்காரம் செய்ததாக கூறி திருவாவடுதுறை ஆதினம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

பகிர்