Reproduced from Vikatan

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவர்களுடன் ஒவ்வொரு முறையும் உரையாட நேரும்போதெல்லாம் மொழி, கலாசாரம், கலை, கிராமங்களுடனான பழைய நினைவுகள்… இப்படி அவர்களின் தமிழக நேசத்தை உணர முடியும். Absence make the heart grow fonder என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அப்படி இங்குள்ளவர்களைவிடப் புலம்பெயர்ந்தவர்கள் தமிழகம்மீது உணர்வோடு இருப்பது புரியும். நாடு கடந்தும் நாட்டைப் பற்றிய சிந்தனையிலேயே வாழும் அந்த நம்மவர்களின் உணர்வு, இன்று தமிழ்நாட்டுக்குள் இருக்கும் தமிழர்களுக்கும் வந்துவிட்டது. அதற்குக் காரணம், தமிழ்நாட்டின் புகழ், எங்கோ தள்ளிப்போய்விட்டது என்கிற பதற்றம். அதனால், இங்குள்ள, புலம்பெயர்ந்த தமிழர்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் யோசிக்க ஆரம்பித்திருப்பது நல்ல தொடக்கம்.

தமிழ்நாட்டின் மீதான இந்தப் பாசத்தையும் பற்றையும் செயலாக மாற்ற வேண்டும் என்பதுதான் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான என் வேண்டுகோள். அதைப்பற்றிப் பேசுவதற்குத்தான் நான் இப்போது அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். ஹார்வேர்டு மட்டுமல்ல, எங்கெல்லாம் பேச முடியுமோ, அங்கெல்லாம் போய் என் குரலை அவர்களுக்கு எட்டவைப்பேன்.

அவர்களின்பால் எனக்கு நிறைய நம்பிக்கை. காரணம் சினிமா விஷயமாக வெளிநாடு போகும்போது ‘ஏதாவது செய்யணும். நீங்க ஏன் இதைப்பற்றி ஒரு படம் எடுக்கக்கூடாது’ என்பார்கள். இப்படி நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே என்னுடன் அரசியல் பேசிக்கொண்டிருந்த நிறைய புலம்பெயர்ந்த தமிழர்களை எனக்குத் தெரியும். ‘தமிழகத்துக்கு நல்லது செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்காதா’ என்று அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

நிறைய மலையாளிகள் கேரளாவிலிருந்து வேலைதேடி வெளிநாடுகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், அது ஒரு சிறிய மாநிலம். மக்கள்தொகை பெருகும்போது அவர்கள் புலம்பெயர வேண்டிய அவசரமும் அவசியமும் இருக்கிறது. வேலைவாய்ப்புகள் எங்கெங்கெல்லாம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் போவது என்பது அவர்களுக்குப் புதுப்பழக்கம் இல்லை. கேரளாவின் பிரதான வருமானமே, இப்படிப் புலம்பெயர்ந்த கேரளிகள்மூலம் கிடைப்பதுதான். பஞ்சாப் சர்தார்களும் அப்படித்தான். சுதந்திரத்துக்கு முன்பே சென்னைக்கு வந்து மொழி தெரியாத ஊரில் தொழில் தொடங்கி நம் கண்ணெதிரே பெரிய நிறுவனங்களைக் கட்டமைத்துக் காட்டியிருக்கிறார்கள்.

இப்படித் திரைகடலோடி திரவியம் தேடுவதும் நாடு விட்டு நாடு போய் வியாபாரம் தொடங்குவதும் தமிழர்களுக்கும் புதிதல்ல.  ஆனால், அவர்கள் அங்கிருந்து பணத்தைக் கொண்டுவருவதைவிட முக்கியமானது, தங்களுடைய அறிவை இங்கு கொடுக்க வேண்டும், அதைப்பற்றிதான் நான் ஹார்வேர்டில் பேசப்போகிறேன். அங்கு அறிவுப்பிச்சை கேட்கத்தான் போகிறேன். அவர்களின் அந்த அறிவுப் பங்களிப்பு, நம்மை இன்னும் பலமுள்ளவர்களாக மாற்றும். ஐடியாவை வைத்துதானே சினிமா உட்பட அனைத்திலும் காசு பண்ணிக்கொண்டிருக்கிறோம். அப்படி அவர்கள் நல்ல ஐடியாக்களுடன் வரும்பட்சத்தில் காசுபணமெல்லாம் கண்டிப்பாக பின்னால் தானாகவே வந்து சேரும்.

‘இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது’ என்று அவர்களுக்கு ஞாபகப்படுத்தினால் போதும், பாய்ந்து அதை ஏற்றுக்கொண்டு நம் மாநிலத்துக்குத் தோள்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுதாக இருக்கிறது. அவர்கள் நமக்குத் தரும் அறிவுப்பிச்சை என்ன என்று தெரியாமல், ‘இதைத்தான் அவர்களிடம் கேட்கப்போகிறேன்’ என்று இப்போதே என்னால் அவசரக்கோலம் போட்டுவிட முடியாது. அவர்களிடம் நான் கேட்ட அறிவுப்பிச்சை, அதற்கு அவர்கள் அளித்த பதில்… அதை அடுத்த வாரம் பகிர்கிறேன்.

எண்ணூர் அனல் மின் நிலையக் கழிவுகளைப் பார்க்க நாம் போய்வந்ததும், அந்த மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து மக்களுடன் பேசினார். அப்போதே நான் அந்த ஆட்சியருக்கு நன்றி சொன்னேன். அது நல்லதுதான். ஏனெனில், ‘நாங்கள் மட்டும்தான் நல்லவை செய்வோம்’ என்று இதற்கு உரிமைப்பட்டயம் எதுவும் கிடையாதே. ‘`நம் ஊரில் கொள்கைக்கும் திட்டத்துக்குமே ஒரு குழப்பம் இருக்கிறது சார்’’ என்றார் நண்பர் ஒருவர். அவர் சொல்வது சரியானது. நல்லது செய்யவேண்டும் என்பது கொள்கை. இப்படியும் செய்யலாம், அப்படியும் செய்யலாம் என்று போடுவது திட்டம். திட்டங்களைச் செயல்படுத்தும் முறை மாறும்போது கொள்கை மாறிவிட்டதாகப் பலரும் பதறுகிறார்கள். மக்களுக்கு எது நல்லதோ அந்த நலத்திட்டங்களை நல்லவற்றுக்காகச் செய்ய வேண்டும் என்பதை ஆங்கிலத்தில் Guiding Principles என்பார்கள். அந்தக் கொள்கை எல்லோர்க்கும் பொதுவானது, அது எனக்கு மட்டும் சொந்தம் என்று சொல்லமுடியாது. எங்கள் கொள்கைகளை அடிப்படையாகக்கொண்ட திட்டங்களின் மினியேச்சர் மாடல்தான்  இந்த கிராமத் தத்தெடுப்பு.

கிராமங்களை நோக்கிப்போகிறோம் என்ற குரல் பரவலாகக் கேட்க ஆரம்பித்ததும், நாம் தத்தெடுக்க எத்தனிக்கும் கிராமங்களை எல்லாம் அரசு அதிகாரிகள் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்காக நம் ஆட்கள் யாரும் பதற்றப்படவில்லை, ஆனால், ‘நாம போயிட்டு வர்ற கிராமங்களுக்கெல்லாம் நம்மை ஃபாலோ பண்ணி அதிகாரிகள் வந்து பார்வையிட்டுட்டுப் போறாங்க சார்’ என்று எனக்குச் சுட்டிக்காட்டினார்கள். இதுவரை அதிகார வர்க்கத்தின் பார்வை படாத கிராமங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளோம் என்பது நல்லதுதானே. போராட்டம், ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம் இன்றி நல்லவற்றை நிகழ்த்திக்காட்டியிருக்கிறோம் இல்லையா, அந்த வகையில் சந்தோஷம்.

வேலை நிறுத்தம் என்றதும் சமீபத்தில் நடந்துமுடிந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நினைவுக்கு வருகிறது. நியாயமாகத் தங்களுக்கு வந்து சேரவேண்டியவை சேரவில்லை என்று ஆராய்ச்சிமணி அடித்ததற்குத் தண்டனை பெற்றிருக்கிறார்கள். அதைத் தந்தது அரசு என்பதைவிட, அதில் ஒரு முதலாளித்தனம்தான் தெரிகிறது. வேலைநிறுத்தம் செய்த ஏழு நாள்களுக்கான கூலியை நிறுத்தியது ரொம்பவே அதிகப்படியான தண்டனை. ஏற்கெனவே பென்ஷன் கொடுக்காமல் வைத்திருந்ததால் பலரின் வாழ்க்கை கெட்டுப்போய்விட்டது. இப்போது வேலையில் இருப்பவர்களுக்கு இந்த ஏழு நாள் சம்பளப் பிடிப்பு என்பது அநியாயம். அவர்கள் நல்ல உழைப்பாளிகள். எப்படியானாலும் அதை உழைத்துச் சம்பாதித்துவிடுவார்கள். ஆனால், தொழிலாளர்கள் அவ்வப்போது அடிக்கும் ஆராய்ச்சிமணிகளுக்கு அரசு அவ்வப்போது செவிசாய்த்திருந்தால் இந்த வேலை நிறுத்தமே நடந்திருக்காது, பொதுமக்களும் நம் தொழிலாளர் தோழர்களும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

இதுமாதிரியான விஷயங்களை அரசு அறிவுபூர்வமாக அணுகி, அதற்கான தீர்வுகளைக் கண்டறியலாம். இதையும் நாங்கள் மனதில் வைத்து அறிஞர்கள், விஞ்ஞானிகள் என்று பலரையும் சந்தித்து, அவர்களின் உதவியை நாடப்போகிறோம். ‘நீ யார் அதைச் செய்ய’ என்று கேட்டால், என் பெயர் தமிழன். இதைச் செய்யவில்லையென்றால் வாய்ச்சொல் வீரனாகிவிடுவேன். இப்படியான சிக்கல்களுக்கான தீர்வையும், புதுத்திட்டங்களின் வரவையும் உருவாக்கவேண்டும் என்பது என் மிகப்பெரிய அவா.

‘மாற்றுக்கட்சிகளிலிருந்து உங்கள் கட்சியில் சேர நிறைய பேர் அணுகுகிறார்கள் என்கிறார்கள். அப்படி யாரெல்லாம் உங்களிடம் பேசிவருகிறார்கள்?’ – போகும் இடமெல்லாம் இந்தக் கேள்வியும் என்னைத் துரத்துகிறது. ஆமாம், பேசிக்கொண்டிருக்கிறார்கள். ‘தண்ணீரில் காலை விட்டால் குளிருமோ’ என்று அப்படியும் இப்படியுமாகப் பதம் பார்ப்பவர்களின் பெயர்களையெல்லாம் இங்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. மக்கள்பணி செய்ய இது ஒரு வாய்ப்பு என்று நினைத்து வருபவர்களும் இருக்கிறார்கள். “இதை இப்படிச் செய்ய வேண்டும்’’ என்று என்னுடன் வாதாடுபவர்களும் எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள். ‘`அப்படிச் செய்தால் நல்லதுங்க. அப்படிச் செய்யலைனா நல்லதில்லைங்க’’ என்கிறார்கள் பலர். சந்தோஷமாக இருக்கிறது. அந்தமாதிரியான விவாதங்களுக்கெல்லாம் நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம் என்பதே எங்களின் தனிச்சிறப்பாக நினைக்கிறேன். `‘எனக்கு, நீங்க என்ன பண்ணப்போறீங்கனு சொல்லுங்க. ஆமாம், கொள்கைவிளக்கம் சொல்லுங்க. பொறுப்பைப் பற்றிக் கவலை இல்லை. என்ன வேலை கொடுத்தாலும் செய்கிறேன்’’ என்று சொல்லும் பலரைச் சந்திக்கிறேன். அது மனதுக்கு இதமாகவும் நம்பிக்கையளிக்கும் வகையிலும் உள்ளது.

ஆனால், நாங்கள் புதுச்சமையல் பண்ணிக்கொண்டிருக்கும்போது கறைபடிந்த அந்தக் கைகளையும் கொண்டுவந்து பாத்திரத்தில் ஒட்டிவிட்டுப் போய்விடுவார்களோ என்ற தயக்கமும் எங்களுக்குண்டு. அப்படிக் கறைபடிந்த கைகள் யாருடையவை என்று பார்க்கவேண்டும். அதற்காக, ஒரு கட்சியில் எல்லோருமே அப்படி இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. பல கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள நல்லவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் உழைப்பெல்லாம் பாராட்டப்படாமல், இன்னும் சொல்லப்போனால்  தண்டிக்கப்பட்டும் ஒதுக்கிவைக்கப்பட்டும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வந்தால் கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்வோம். ஏனெனில், ‘நல்ல தமிழ்நாடு உருவாக்கப்பட வேண்டும்’ என்ற எண்ணம் கொண்ட அனைவருமே என் சகோதரர்கள்தாம். ‘எக்கேடுகெட்டால் என்ன’ என்று நினைப்பவர்கள் நம் விரோதிகள். தமிழர்களை மதிக்காத அப்படிப்பட்டவர்கள் எங்களுக்குத் தேவையில்லை.

ஆனால், மாற்றுக்கட்சித் தலைவர்களிடமிருந்து இந்த `என்னுள் மையம் கொண்ட புயல்’ தொடருக்கும், புதிய கட்சி அறிவிப்புக்கும் நிறைய பின்னூட்டங்கள். ‘முன்வைத்த காலைப் பின்வைத்துவிடாதீர்கள்.’ – இது, முதன்முதலில் வந்த பின்னூட்டம். சொன்னவர், கேரள முதல்வர் பினராயி விஜயன். என்ன அரசியல் சந்தேகம் என்றாலும் அவரிடம் கேட்டுத் தெளிவு கொள்கிறேன். தவிர, இங்குள்ள மாற்றுக்கட்சித் தலைவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். நான் பேசுவது, ‘`என் கட்சியில் சேருகிறீர்களா?’’ என்று கேட்பதற்காக அல்ல. அவர்களின் நல்ல அரசியல் அனுபவத்தை நான் பெறவேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து உரையாடுகிறேன். அவர்களும், ‘`இது தெரியாமத்தான் வந்தாயா அரசியலுக்கு’’ என்று கேட்பதில்லை. ஆனால், இதைவிட மக்களைப் பற்றிய எந்தப் புரிதலும் இன்றி, பதவிக்கும் வந்து ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பவர்கள் இங்கே பலபேர் இருக்கிறார்கள்.

‘`மக்களிடமிருந்து நிதி பெற்று இவர்கள் எப்படி கட்சி நடத்தப்போகிறார்கள்’’ என்று சில அரசியல் கட்சியினர் எகத்தாளமாகச் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களும் அதைத்தானே பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆமாம், வேறுவழியில் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள், ‘இதுதான் கணக்கு’ என்று ரசீதுடன் சொல்லிவிட்டுப் பண்ணலாம் இல்லையா? நாங்கள் கேட்டால் அள்ளிக்கொடுப்பான் ஏழை. ஏனெனில், கொடுப்பது கடமை என நினைப்பவன் அவன். சம்பாதிப்பதில் பாதியைக் கொடுத்துவிடுவான். அவ்வளவு ஏன், சினிமா என்கிற கேளிக்கைக்கே அவ்வளவு செலவு செய்பவர்கள் அவர்கள்தாமே. ஒரு கூலித்தொழிலாளர் ஆர்வமாக சினிமா பார்க்கும் அளவுக்குப் பணக்காரர்கள் பார்ப்பதில்லை.

தங்களுக்குப் பிடித்த நடிகருக்காக ஒருநாள் கூலியை அப்படியே அள்ளிக் கொடுத்துவிடுகிறவர்கள் தனக்குப்பிடித்த தமிழகத்துக்காக என்னவெல்லாம் செய்யக்கூடும்? அவர்களின் இதயத்தைத் தொட்டால் வள்ளல்களாகிவிடுவார்கள். ஆனால், அவர்களின் தலையிலேயே நீங்கள் கைவைத்த பிறகு, ‘`நீ திருடன், என்கிட்ட இருந்துதானே திருடுற. அப்படின்னா அதில் எனக்கும் கொஞ்சம் கொடு’’ என்று அவர்கள் கைநீட்டத் தொடங்கிவிட்டனர். அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

‘நீ என்ன, மக்களையே வையுற’ என்று சிலர் கோஷம் போடுகிறார்கள். என் தம்பியை, என் அண்ணனை, என் பிள்ளைகளை நான் அறிவுரை சொல்லாமல் வேறு யார் சொல்வார்கள்? நானும் எல்லா அறிவுரைகளையும் கேட்டுக்கொள்பவன்தானே? ‘`இந்த சினிமா பிடிக்கலை’’ என்று நீங்கள் சொன்னால், ‘`ஓ.கே. இனிமேல் அந்தமாதிரியான படங்கள் எடுக்கலை’’ என்கிற முடிவுக்கு வருகிறேன்தானே. அந்த முடிவுதானே கலையையே வடிவமைக்கிறது. அப்படி உங்களால் நானும், என்னால் நீங்களும் முழுமையான வடிவம் பெறும் ஒரு கற்றல் முறையாகத்தான் இதைப் பார்க்கிறேனே தவிர, இது வேறல்ல.

`‘பிப்ரவரி 21-ஐ நோக்கிய பயணம் எப்படி இருக்கிறது?’’ என்று பலரும் பல தரப்பிலிருந்தும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எல்டாம்ஸ் சாலை வீடு கட்சி அலுவலகமாகியும், கலைஞன் கமல் அரசியல் மாணவனாகியும் வெகுகாலமாகிவிட்டது. ஏனெனில், நன்கு படித்தவர்களெல்லாம், ‘ஐயய்ய எதுக்குங்க அரசியல்’ என்று அது ஏதோ வெட்கப்படக்கூடிய தொழில்போல செய்துவிட்டார்கள். இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? காந்தி, பெரியார், அம்பேத்கர், ராஜாஜி, சுபாஷ் சந்திரபோஸ்… இது, இப்படி எத்தனை பெரியமனிதர்கள் இருந்த இடம். ஆனால், இதை ஏன் இப்படி திடீரென நடுத்தெருவில் விட்டுவிட்டோம் என்றுதான் புரியவில்லை.

‘நான் சத்தியாகிரக மூவ்மென்ட்டில் இருந்தவன்’ என்று என்றோ நடந்ததை இன்றும் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருக்கும் கிழவனார்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். அதில் ஒரு கிழவனார் எங்கள் அப்பா. நாட்டுக்காக உழைக்கும்போது அந்தப்பெருமை இருந்தது. இந்தியத் துணியாக இருக்கவேண்டும் என்கிற ஆர்வத்தில், கோர்ட்டுக்குப் போகும்போது, அதிக விலையாக இருந்தாலும் காதியில் கோட்டு தைத்துப்போட்டுக்கொண்டு போனவர் அவர். அதில் அவருக்கு அளவில்லாப்பெருமை இருந்தது. அந்தப் பெருமையை மீட்டெடுக்க வேண்டும்.

‘`நீங்களும் ரஜினியும் கூட்டு சேர்ந்து தேர்தலைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதா?’’  –  படி இறங்கினாலே எங்கள் இருவரையும் சேர்த்தே துரத்துகிறது இந்தக் கேள்வி. இதற்கு ரஜினி சார், ‘`காலம் பதில் சொல்லும்’’ என்று சொல்லியிருந்தார். ‘`அதையே வழிமொழிகிறேன்’’ என்று நான் சொன்னேன். உண்மையில் காலம்தான் பதில் சொல்லும். நான் கட்சி ஆரம்பிக்க வேண்டும். அவரும் கட்சியை அறிவிக்க வேண்டும். இருவரும் கொள்கை விளக்கங்கள் சொல்ல வேண்டும். அது பொருந்துகிறதா என்று பார்க்க வேண்டும். அதனால், இது இப்போது எடுக்கக்கூடிய முடிவே கிடையாது. தவிர, அது தேவையா என்பதை இருவருமே யோசிக்க வேண்டும்.

“அடுத்த படம் எப்படி இருக்கும். இதுதான் கதையாமே’’ என்று படப்பிடிப்பில் இருக்கும் எங்கள் படங்களுக்குப் பத்திரிகைகளில் வெவ்வேறு கதைகள் வரும். ‘`நல்லா இருக்குங்க. ஆனால், இதை எடுத்தால் வேறு படம்தான் எடுக்கணும். ஆனால் நான் எழுதியிருக்கும் கதை வேறு’’ என்று சொல்லியிருக்கிறேன். அதேபோல்தான் இதற்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அவரவர்களின் மனதில் ஒரு கதை ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு எது நல்லது என்பதைக் கொள்கைதான் முடிவு செய்யும். அதை விடுத்து, பெயர்களை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்க முடியாது. இது சினிமாவுக்கான நட்சத்திரத் தேர்வுபோல் கிடையாது. அதுவேறு; இதுவேறு.

பகிர்