சென்னை,
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா. இவருடைய இல்லம் சென்னை தியாகராயநகர், சிவஞானம் தெருவில் உள்ளது. இவருடைய வீட்டில் வருமானவரி சோதனை செய்வதற்காக டெல்லியில் இருந்து வந்திருப்பதாக 4 பேர் மாம்பலம் உதவி கமிஷனர் ஏ.செல்வனிடம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து உதவி கமிஷனர் போலீஸ் பாதுகாப்புடன் அவர்களை ஜெ.தீபாவின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். வருமான வரி அதிகாரிகள் என்று கூறிய அந்த 4 பேரும் தனியாக ஒரு காரில் வந்தனர். அதிகாலை 5.30 மணிக்கு ஜெ.தீபா இல்லத்துக்கு வந்தனர்.
வீட்டில் பாதுகாவலராக இருந்த சிவா, உடனடியாக வீட்டின் உள்ளே இருந்த ஜெ.தீபாவின் கணவர் மாதவனிடம் இதுகுறித்து தெரிவித்தார். இதையடுத்து மாதவன், அவர்களை உள்ளே அழைத்து பேசினார். வருமானவரி அதிகாரிகள் என்று கூறியவர்களின் ஒருவர், தான் வருமான வரித்துறை உதவி கமிஷனர் என்று கூறி அதற்கான அடையாள அட்டையையும், சோதனையிடுவதற்கான சம்மனையும் மாதவனிடம் காண்பித்தார்.
மேலும் 10 அதிகாரிகள் காலை 10 மணிக்கு வர இருக்கிறார்கள். அதுவரை நாங்கள் சோதனை செய்வோம் என்று மாதவனிடம் கூறியதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, மாதவன் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் வக்கீல் பிரிவு மாநில செயலாளர் சாமி சின்னபிள்ளையை தொடர்பு கொண்டு வரவழைத்தார். அவரும் ஜெ.தீபா இல்லத்துக்கு வந்தார். இதேபோல், தலைமை நிலைய செயலாளர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணியும் அங்கு வந்தார்.
இதற்கிடையில் வருமானவரி அதிகாரிகள் என்று கூறி வந்தவர்களில் ஒருவர் உள்ளே சென்று சோதனையிட தொடங்கினார். மற்ற 3 பேர் வெளியே நின்று கொண்டு இருந்ததாக தெரிகிறது. உள்ளே சோதனை நடத்த வந்த நபரிடம் மாதவனும், அவருடைய வக்கீல்களும் பேச்சு கொடுத்தனர். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வெளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் உள்ளே விரைந்து சென்றனர். போலீசார் அந்த நபரிடம் துருவி துருவி கேள்வி கேட்க தொடங்கியதும், அந்த மர்மநபர் காலை 9.40 மணியளவில் வீட்டின் வலதுபக்கத்தின் சுவர் அருகே அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சேர்களில் ஏறி, சுற்றுச்சுவரை தாண்டி குதித்து தப்பி ஓடினார். அதேபோல், வீட்டின் வெளியில் நின்று கொண்டு இருந்த மற்ற 3 பேரும் அங்கிருந்து சிதறி ஓடினார்கள்.
வீட்டின் உள்ளே இருந்து தாண்டி குதித்த மர்மநபர், ஜெ.தீபா இல்லத்துக்கு அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்தின் வழியாக புகுந்து, அங்கிருந்த சுற்றுச்சுவரையும் தாண்டி தியாகராயநகர் வெங்கட்நாராயணன் சாலைக்கு சென்று, அங்கு ஆட்டோவில் ஏறி தப்பினார்.
சினிமாவில் வருவது போல போலீசாரும் அவரை விடாமல் துரத்தி, தெருத் தெருவாக சென்று தேடினார்கள். இருப்பினும், அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பிவிட்டார். போலீசாருடன், பத்திரிகையாளர்களும் சாலையில் ஓடினார்கள். இதனால் வெங்கட்நாராயணன் சாலையில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
வருமான வரி அதிகாரி என்று கூறி ஜெ.தீபா வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் வைத்திருந்த அடையாள அட்டையில் அவருடைய பெயர் மிதேஷ்குமார் என்றும், வருமான வரித்துறை உதவி ஆணையர் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், அவர் கொண்டு வந்திருந்த சம்மனில் முனிசிபல் கோர்ட்டு நீதிபதி கையெழுத்து மற்றும் வருமான வரித்துறை ஆணையரின் கையெழுத்தும் போடப்பட்டு இருந்தது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மர்மநபர் கொண்டு வந்த அடையாள அட்டையும், சம்மனும் போலியானது என்றும், வருமானவரி அதிகாரி என்று சொல்லி வந்த அந்த நபர் போலியானவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் புகார் அளித்து இருக்கிறார்.
அந்த புகார் மனுவில், ‘வருமான வரி அதிகாரி என்று வந்த போலி நபர் எதற்காக வந்தார்? அவரை யாரேனும் குற்றச்செயலுக்காக அனுப்பி உள்ளார்களா? என்ன நோக்கத்துக்காக அவர் வந்தார் என்றும், மேற்படி நபரை கைது செய்து ஆள்மாறாட்டம், மோசடி மற்றும் தங்கள் விசாரணையில் கண்டறியும் குற்றச்செயலுக்காக வழக்கு பதிந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
போலி வருமானவரித்துறை அடையாள அட்டையில் இருக்கும் பெயர் தான் அந்த போலி நபரின் உண்மையான பெயரா? என்பது தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அவரையும், அவருடன் வந்த நபர்களையும் பிடிப்பதற்காக தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மர்ம ஆசாமிகள் வந்த கார் எண்ணை வைத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடக்கும் போது ஜெ.தீபா வீட்டில் இல்லை. அவர் ஆயுர்வேத சிகிச்சைக்காக வெளியூர் சென்றிருப்பதாக அவருடைய கணவர் மாதவன் தெரிவித்தார். ஏற்கனவே ஜெ.தீபா, கமிஷனர் அலுவலகத்தில் தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று புகார் அளித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகள் என்ற போர்வையில் வந்த மர்மநபர்கள் ஜெ.தீபாவை அச்சுறுத்துவதற்காக வந்தவர்களா? அல்லது அவர் வீட்டில் இல்லை என்பது தெரிந்து கொண்டு எதுவும் ஆவணங்களை தேடி வந்தார்களா? என்பது விசாரணைக்கு பின்னர் தான் தெரியவரும்.
இதுதொடர்பாக ஜெ.தீபாவை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கூறியதாவது:-
வருமானவரித்துறையில் இருந்து ஒரு அதிகாரி வந்திருப்பதாக என்னுடைய அலுவலகத்தில் இருந்து எனக்கு செல்போன் அழைப்பு வந்தது. எதற்காக வந்திருக்கிறார்? என்று கேட்டேன். இல்லத்தை சோதனை நடத்துவதற்காக வந்திருப்பதாக அலுவலக உதவியாளர் தெரிவித்தார். அப்போது செல்போனை வாங்கி பேசிய அவர்(போலி நபர்), 15 நிமிடத்துக்குள் நீங்கள் இல்லத்துக்கு வர வேண்டும் என்று கூறினார். நான் உங்களிடம் ஒரு ‘டீல்’(ஒப்பந்தம்) பேச வேண்டும். நீங்கள் வந்தால் பேசலாம். இல்லை என்றால் சம்மனை தாக்கல் செய்துவிடுவேன் என்று தெரிவித்தார்.
உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியுமா? என்றும் கேட்டார். எனக்கு தெரியாது என்று சொன்னேன். அதன்பிறகு தான், அவர் போலியான நபர் என்பது எங்களுக்கு தெரியவந்தது. வந்திருந்த நபர் என்னை மிரட்டவோ, அச்சுறுத்தவோ வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிகர் சூர்யாவும், அவருடன் நடிகை ரம்யா கிருஷ்ணனும் போலி வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து சோதனை நடத்தி கொள்ளை அடிப்பார்கள். அவர்கள் வருமான வரித்துறைக்கான அடையாள அட்டை, ‘சீல்’ ஆகியவற்றையும் போலியாக தயாரித்து இருப்பார்கள்.
அதே பாணியில் சென்னையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா வீட்டுக்கு வந்த போலி வருமான வரித்துறை அதிகாரியும் போலி அடையாள அட்டை, சம்மன் ஆகியவற்றை வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.