ரஜினியின் நிறம் காவியாக இருந்தால், அவருடன் கூட்டணி இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் பிசினஸ் ஸ்கூல் ஆப் நிகழ்ச்சியிலும், வருடாந்திர இந்திய மாநாட்டிலும் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார்.

தமிழரின் பாரம்பரிய வேட்டி, சட்டையில் நிகழ்ச்சிக்கு வந்த கமல்ஹாசனை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராகப் பங்கேற்று நடிகர் கமல்ஹாசன் பேசியபோது,  ரஜினிகாந்துடன் அரசியல் கூட்டணி வைப்பீர்களா என கேட்கப்பட்டது.

அதற்கு கமல் பதிலளித்துப் பேசுகையில், ”நானும், ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்கள். ஆனால்,அரசியல் என்பது வேறு. என்னுடைய நிறம் கறுப்பு, நடிகர் ரஜினியின் நிறம் காவியாக இருக்காது என நம்புகிறேன்.

அப்படி ஒருவேளை ரஜினி அரசியலின் நிறம் காவியாக இருந்தால், அவர் அதை மாற்றிக்கொள்ளாவிட்டால், அவருடன் நான் கூட்டணி வைக்கமாட்டேன்.

தமிழகத்தில் ஊழல் இல்லாத அரசியல் சூழலை நான் விரும்புகிறேன், அரசியல்வாதிகளும் அவ்வாறே இருக்க ஆசைப்படுகிறேன். என்னுடைய படங்கள் எப்படி வித்தியாசமாக இருக்கின்றனவோ அதுபோலவே, என்னுடைய அரசியலையும் மற்றவர்களுடன் வேறுபட்டு வைத்து இருக்க விரும்புகிறேன்.

கருத்து சுதந்திரம் என்பது, ஜனநாயகத்தின் அடித்தளமாகும். அனைவருக்கும் முக்கியமான தேவையான கருத்து சுதந்திரத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும்.

என்னுடைய அரசியல் கட்சியின் பெயரை வரும் 21-ம் தேதி ராமேஸ்வரத்தில் அறிவிக்கிறேன். அதன்பின் மாநிலம் முழுவதும் நாளை நமதே என்ற பெயரில் சுற்றுப்பயணம் நிகழ்த்த இருக்கிறேன். இந்த பயணத்தில் மக்களின் தேவைகளையும், அபிலாஷைகளையும், ஆசைகளையும் கேட்டு அறிவேன்.

என்னுடைய அரசியல் பயணத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மாநிலமும், நாடும் வலிமை பெற, சக்தி பெற இந்த பயணத்தில் என்னுடன் மக்கள் கைகோக்க வேண்டும்” என்றார் கமல்

பகிர்