ஜெயலலிதா மரணம், ஓ.பி.எஸ் ராஜினாமா, தர்ம யுத்தம், கூவத்தூர் கலாட்டா எனப் பரபரப்பாகத் தமிழகத்தை வைத்திருந்த சசிகலாவை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி எனக் கூறி தீர்ப்பளித்தது. சசிகலா சென்ற வருடம் இதே நாளில் சிறை சென்றது துவங்கி இன்று வரை ஒரு வருடத்தில் சசிகலாவின் டைம்லைன் இதோ…

சசிகலா

சசி சரணடைதலும், தாக்குதலும் 

`உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி நான் சரணடைய பெங்களூர் வரும்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் என்னைத் தாக்க சதித்திட்டம் தீட்டியுள்ளனர்’ என்று ஒரு புகாரை சசிகலா வழக்கறிஞர் செந்தில் மூலமாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். புகார் அடிப்படையில் பெங்களூரு சிட்டி சிவில் செஷன்ஸ் கோர்ட் எண் 48-லிருந்து பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் அருகாமையில் நீதிமன்றத்தை மாற்றினார்கள். நீதிமன்ற வளாகம் மற்றும் சிறை வளாகம் முழுவதும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

2017, பிப்ரவரி 15-ந் தேதி மாலை 5.30 மணிக்குப் பரப்பன அக்ரஹாராவில் அமைக்கப்பட்ட நீதிமன்றத்திற்கு வந்தார் சசிகலா. சசிகலா பயந்ததுபோல 30-க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் சசிகலாவுடன் வந்த  கார்களை அடித்து நொறுக்கினர். கர்நாடக போலீஸாரின் உதவியால் சசிகலாவின் கார் தப்பியது.

நீதிமன்றத்தில் வந்து நின்ற சசிகலா மற்றும் இளவரசியிடம் சுதாகரன் வரவில்லையா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு சசிகலா வழக்கறிஞர் சுதாகரன் வந்துகொண்டிருப்பதாகத் தகவல் அளித்தார். சசிகலா எங்களுக்கு ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய்கள் உள்ளதை குறிப்பிட்டுவிட்டு நாங்கள் வருமானவரி கட்டுபவர்கள், எனவே, எங்களுக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க வேண்டும். வீட்டுச் சாப்பாடு தரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். இது குறித்து சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ் முடிவு செய்வார் அதற்குள் வந்திருந்த சுதாகரனை உள்ளிட்ட மூவரையும் மருத்துவ பரிசோதனை செய்து சிறைக்கு அனுப்பி வைத்தார் நீதிபதி.

பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் ஜெயராமன், சசிகலாவுக்கு 9234, இளவரசிக்கு 9235, சுதாகரனுக்கு 9236 என்ற கைதி எண்ணை வழங்கி சிறைக்கு அழைத்துக்கொண்டார். முதலில் சசிகலா தன்னை தமிழக சிறைக்கு மாற்றுமாறு மனு கொடுத்தார். பிறகு தமிழகத்தில் எடப்பாடி வேறுவிதமான மனநிலைக்குச் சென்றதால் தனது இமேஜுக்கு கர்நாடகா சிறையே சிறந்தது என நினைத்து சிறைமாற்றம் வேண்டாம் என்று அவரே மறுத்துவிட்டார்.

சிறையில் சசியைப் பாதுகாத்த பாலகிருஷ்ணரெட்டி 

திவாகரன் உறவினர் பரத் என்பவர் ஓசூரில் விநாயகா ஹவுசிங் ஃபைனான்ஸ் நடத்தி வருகின்றார். அவர் மூலம் பாலகிருஷ்ணரெட்டி திவாகரனிடம் நெருக்கம் ஆகின்றார். 2014-ல் ஜெ.வும், சசியும் முதல்முறை சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது பாலகிருஷ்ணரெட்டி மூலம் சிறையில் சலுகைகள் கிடைக்கின்றன. அப்போது பாலகிருஷ்ணரெட்டி ஓசூர் நகராட்சி சேர்மன் என்று திவாகரன், சசிக்கு அறிமுகம் செய்து வைக்கின்றார். அதன் பிறகு கார்டன் நம்பிக்கையைப் பெற்ற பாலகிருஷ்ணரெட்டிக்கு 2016 சட்டமன்றத் தேர்தலில் எம். எல். ஏ சீட் கிடைக்கின்றது. எம். எல். ஏ ஆனதும் ஜெ, ரெட்டியை அமைச்சராக அறிவிக்கின்றார்.

மீண்டும் தண்டனை பெற்று சசிகலா சிறைக்கு வந்ததும் பெங்களூரூவில் ரெட்டியார் சமூக சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பாலகிருஷ்ணரெட்டிக்கு, கர்நாடகாவில் மூன்று முறை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் தனது சமூகத்தைச் சேர்ந்த ராமலிங்கரெட்டி மூலமாக சசிகலாவிற்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.

சசிகலா

.
சசியை சந்தித்த அமைச்சர்கள்  

முதலில் நேரடியாகவும் பிறகு ரகசியமாகவும் பல அமைச்சர்கள் சசிகலாவைச் சந்தித்து வந்தனர். அதில் அமைச்சர் எனக் குறிப்பிடாமல் சீனிவாசன், ராஜு, காமராஜ், செங்கோட்டையன் ஆகிய நான்கு பேர் பார்க்க வந்திருக்கிறார்கள் எனச் சிறைத்துறை அதிகாரிகள் தகவல் சொல்லி 25 நிமிட நேர சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் துணை சபாநாயகர் தம்பிதுரை ப்ரைவேட் காரில் வந்து சந்தித்துவிட்டுச் சென்றவர். பிறகு பா.ஜ.க. தூதுவராகச் சிறையில் சசியை சந்திக்க வந்தார்.

சசிக்கு பா.ஜ.க. தந்த அழுத்தம் 

ஒரு கட்டத்தில் பா.ஜ.க-வின் பிடி இறுகியபோது, தானும் சிறைப்பட்டதுடன், இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்ததாக தினகரனும் சிறை சென்றது சசியை மிகுந்த மனஅழுத்தத்தில் கொண்டுபோய் விட்டது. மற்ற குடும்ப உறுப்பினர்கள் மூலம் சரியான அரசியல் நகர்வுகளைக் கச்சிதமாக முடிக்க முடியவில்லை என்று மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு பி.பி-யின் அளவு கட்டுப்படுத்த முடியாமல் இரவு நேரத் தூக்கத்தை முழுமையாகத் தொலைத்து சராசரி மனுஷியாக சசி கத்திக் கதறிவிட்டார்.

சசிகிலாவின் கதறலைக் கண்டு மிரண்டுபோன இளவரசி சிறை மருத்துவர்களை அழைக்கவே, பரிசோதித்த மருத்துவர்களே அதிர்ந்துவிட்டனர். அளவிற்கு மீறிய பி.பி சசிக்கு எகிறி இருந்தது. இதை இப்படியே விட்டால் மூளை வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை செய்து, “கொஞ்ச நாட்களுக்குத் தூக்க மாத்திரை” பயன்படுத்த பரிந்துரைத்தனர். சிறை விதிமுறை அளவை மீறி கூடுதல் டோஸ் தூக்க மாத்திரை சசிகலாவிற்கு வழங்கப்பட்டது. சிறைவாசம் என்பது சசி எதிர்பார்த்ததுதான் அடுத்தடுத்து ஆட்சியிலும் கட்சியிலும் ஏற்படும் மாற்றங்கள் சசியின் பி.பி-யை அதிகரிக்க வைத்துவிட்டது.

சிறையில் சொகுசு வாழ்க்கை 

2017 மே இரண்டாவது வாரத்தில் தன்னைச் சந்திக்க வந்த அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு சில உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றார். அதன்படி பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு புதிய ஃபர்னிச்சர்கள் வந்திறங்கின. அதற்குப் பிறகு சிறைக்குள் சசிகலாவை மேடம் என்று அழைக்கப்படும் அளவுக்கு சசிகலாவுக்கு மரியாதை கூடியது. அதைவிட முக்கியம், சிறைக்குள் சசிகலா இயற்கை முறையில் விளைந்த பருத்தி துணியான ஆர்கானிக் காட்டன் உடைகளை பெங்களூரில் லீடிங் டெய்லரால் ஸ்டிச்சிங் செய்து அணிந்து வந்தார்.

அந்தச் சமயத்தில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி எந்தவிதமான மனுவும், வருகைப் பதிவும் செய்யாமல் பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் செல்வாக்குடன் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், தற்போது 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே சந்திக்க முடியும்.

ஆனாலும், சசிக்கு சிறையில் தேவையான பல முக்கியமான தேவைகள் இன்றளவும் சிறைக்கு வெகு அருகில் உள்ள அடுக்குமாடி வீட்டில் தயாராகி சிறைக்குச் செல்கின்றது. அந்த வீடு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அருகாமையில் நடந்து செல்லும் தொலைவில் உள்ள நாகாபுரத்தில் 6 அபார்ட்மென்ட்டுகள் எடுத்துள்ளனர். அதில் கம்ப்யூட்டர் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்யும் கருவிகள், ஸ்பெஷல் சமையல் அறைகள் நிறுவப்பட்டுள்ளன. சசிகலாவுக்குத் தேவையான உடைகள், மருந்துகள், உணவுகள் இந்த அபார்ட்மென்ட்டிலிருந்து சிறைக்குச் செல்கின்றது. தற்போது இங்கு சமையலர்களும் உதவியாளர்கள் சிலரும் தங்கியுள்ளனர்.

விதிகளை மீறி சசியின் சந்திப்புகள் 

விசாரணைக் கைதி என்றால் வாரத்துக்கு ஒருமுறையும், தண்டனைக் கைதி என்றால் 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே பார்வையாளராக சந்தித்துப் பேச முடியும். ஆனால், சசிகலாவை 30 நாள்களில் 14 முறை பார்வையாளர்கள் சந்தித்துப் பேசி இருப்பது தகவல் சொல்கின்றது. சிறை விதிமுறைகளின்படி விதிகளை மீறிய செயல். அதேபோல காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரைதான் சந்திக்க முடியும். ஆனால், 5 மணிக்கு மேல் சசிகலாவை சந்தித்திருப்பதும் விதி மீறலே. அதுவும் முதல் ஒரு மாதத்தில் 70 பேர் பார்வையாளர்களாக சசிகலாவை வந்து சந்தித்துள்ளனர்.

டி.ஐ.ஜி. ரூபா விசாரணை… 

கர்நாடகா சைபர் க்ரைமில் இருந்த ஐபிஎஸ் ரூபா 2017 ஜூன் 26-ந் தேதி சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக பதவி ஏற்று முதலில் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு விசிட் அடித்தார். அப்போது சிறை சி.சி.டி.வி கேமரா எண் 6, 7, 8-ல் இருந்த சில காட்சிகள் மட்டும் அழிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலுவலகம் திரும்பியவர் கண்ணில் சிறை மருத்துவர்கள் எழுதிய புகார் மனுக்கள் பட்டன. அதில் பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறை தண்டனை கைதிகளிடம் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி போதை பொருள்கள் உலவுவதாக வந்த புகார் அது.

மருத்துவர்கள் புகார் குறித்து சிறை மருத்துவர்களிடம் விசாரணையைத் தொடங்கிய ரூபா சிறையில் 25 கைதிகள் போதைக்கு அடிமையாகி பெரும் சங்கடம் உண்டாக்குவதைப் பற்றித் தெரிந்துகொண்டு, ஜூலை 10-ந் தேதி அதிரடியாக சிறையில் ரெய்டு நடத்தி., போதைப் பொருள்கள் மற்றும் சிறையில் சசிகலாவிற்காக சமையல் அறை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து சட்டத்தை மீறி நடைபெற்ற குற்றச் சம்பவங்களைக் கண்டுபிடித்தார்.

ரூபாவிடம் சிக்கிய சசி… 

இது மட்டும் இல்லாமல் சசிகலா தரப்பு சிறைக்கு அருகே வாங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தயாராகும் உணவுகள் தினமும் காரில் சிறைக்குக் கொண்டு வருவது… அவசரத் தேவைக்கு சிறையில் தனியாக ஒரு கிச்சனும் சசிக்காக ஒதுக்கப்பட்டது. இது தவிர சிறையில் சசிகலாவுக்கு சமையல் செய்ய பெண் கைதிகளுக்கான அறையை ஒதுக்கி அதில் உயர்தர உணவுப் பொருள்கள், புது மிக்சி, கிரைண்டர், மின்சார அடுப்பு, கேஸ் அடுப்பு, மூன்று செட் பிளேட், பால் காய்ச்சும் பாத்திரம் உள்ளிட்ட புது கலன்கள் என உயர் தரத்தில் பொருள்கள் இருந்துள்ளன. இவை சிறை விதிகளுக்கு உட்படாத பொருள்கள் என்பதால் புகைப்படம் எடுத்துள்ளார் டி.ஐ.ஜி. ரூபா, சமையல் செய்து கொடுத்த இரண்டு பெண்களில் ஒருவர் காவலர், மற்றொருவர் பெண் கைதி. கிருத்துவ சமூகத்தைச் சேர்ந்தவர். இவர், 3 வருடங்களாக சிறை தண்டனையில் வந்தவர். சிறையில் பேக்கரி பொருள்கள் தயாரிப்பவர் என்ற தகவல் வரை டி.ஐ.ஜி. ரூபா சேகரித்தார்.

சிறையில் ரூபாவின் அதிரடி ரெய்டு விவரம் அறிந்த சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயண ராவ் அடுத்த நாள் ஜூலை 11-ந் தேதி டி.ஐ.ஜி. ரூபாவிற்கு மெமோ கொடுத்தார். பரப்பன அக்ரஹாரா சிறை விசாரணை தனக்கு எதிராகத் திரும்புவதை உணர்ந்த ரூபா பரப்பன அக்ரஹாரா சிறையில் ரெய்டு குறித்த விசாரணையை அறிக்கையாக சிறைத்துறை ஐ.ஜி., கர்நாடக மாநில டி.ஜி.பி. மற்றும் கர்நாடக உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் சித்தராமைய்யாவுக்கும் அனுப்பி வைத்ததுடன், இதற்காக ரூ.2 கோடி அளவிற்கு லஞ்சம் பெற்றதில்  சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா, சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், துணை கண்காணிப்பாளர் அனிதா உள்ளிட்டோருக்குத் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டு அறிக்கை அளித்தார்.

கர்நாடக உள்துறை பொறுப்பையும் முதலமைச்சர் சித்தராமைய்யாவே கவனிப்பதால், ரூபாவின் அறிக்கையால் பதறிப்போய் சித்தராமைய்யா ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமாரை விசாரணை அதிகாரியாக நியமித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

வினய்குமார் விசாரணை அறிக்கை 

வினய்குமார்

சிறை குறித்த விசாரணை அறிக்கையில் சிறப்பு அதிகாரி வினய்குமார் சிறையின் விதிகளை மீறி பல்வேறு சட்டவிரோதமான சலுகைகளை சிறைக்கைதிகள் பெற்றுள்ளனர் என்று அறிக்கை கொடுத்தவர். அதில் சசிகலா தொடர்பான விதிமீறல்களைப் பார்க்கும்போது, 15 நாள்களுக்கு மூன்று பார்வையாளர்கள் என்ற விதிகளை மீறி அதிகளவு பார்வையாளர்களைச் சந்தித்தது… மாலை 5.00 மணி வரை மட்டுமே பார்வையாளர்களை சந்திக்க முடியும் என்ற விதிமுறையை மீறி இரவு 7.30 மணி வரை பார்வையாளர்களை சந்தித்துப் பேச அனுமதி அளித்தது வரை விதிமீறலாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், வினய்குமார் அறிக்கையில் பணம் கைமாறியது பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அதை பொருளாதாரக் குற்றப் பிரிவு விசாரிக்க வேண்டும் என்று தனது அறிக்கையை வினய்குமார் முடித்துக்கொண்டார்.

ரூபா மற்றும் வினய்குமார் அறிக்கைகளுக்குப் பிறகு சிறையில் விதிகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டன, இதனால் எல்லா சிசிடிவி கேமராக்களும் கண்காணிக்க ஆரம்பித்துவிட்டன. சிறைவளாகம் முழுவதும் ஜாமர் செயல்பாட்டுக்கு வந்தால் முன்பைப்போல் செல்போன் பயன்படுத்த முடியவில்லை. குறிப்பிட்ட சில நேரம் மட்டும் பேச முடியும் என்ற நிலை உருவானது. அதுவும் அவுட் கோயிங் மட்டும், இன்கமிங் கால் இல்லை.

 ஆஸ்திரேலியா பிரகாஷ்?

ஆஸ்திரேலிய பிரகாஷ்

ரூபாவின் அதிரடிக்குப் பிறகு 2017 கடந்த மே மாதம் 4-ம் தேதி டெல்லி சாணக்யபுரியைச் சேர்ந்த சஞ்சய்சௌராவத் துணை கமிஷனரிடம் ஆஸ்திரேலியா பிரகாஷ் அளித்துள்ள வாக்குமூலம் மிகவும் முக்கியமானது என்று டிஐஜி ரூபா கருதுகிறார். காரணம் அதில், ஆஸ்திரேலியா பிரகாஷ் தனது நண்பர் மல்லிகார்ஜூனாவுக்கு தினகரனைத் தெரியும் என்றும் அந்த வகையில் பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவை சந்திக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து தரும்படி மல்லிகார்ஜுனா என்னிடம் கேட்டுக் கொண்டார். எனக்கு பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகளை நன்கு தெரியும் என்பதால் எனது உதவியுடன் டிடிவி தினகரன், சசிகலாவை சிறையில் சந்தித்துப் பேசினார். பிறகு ஒரு சமயம் மல்லிகார்ஜூனா கேட்டுக்கொண்டதால் 2 கோடி ரூபாய் அளவிற்கு  தினகரனுக்காகப் பணத்தை இடம்மாற்றிக் கொடுத்தேன். அதற்கான வங்கி கணக்குகளை பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா பிரகாஷ் இந்தப் பணத்தை எதற்காகக் கைமாற்றி கொடுத்தார் என்பது தினகரன், சசிகலா, பிரகாஷ்க்கு மட்டுமே தெரியும். இது குறித்து வினய்குமார் ஏன் விசாரணை செய்யவில்லை என்று ரூபா கேள்வி எழுப்பி, ஆஸ்திரேலியா பிரகாஷ் 7 முறை சிறையில் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். ஆனால், அதற்கான பதிவு எதுவும் சிறையில் இல்லை என்ற குற்றச்சாட்டையும் ரூபா முன்வைக்கின்றார்.

அசராத விவேக் டீம் 

சசிகலா அப்பார்ட்மெண்ட்

ரூபாவின் அதிரடி தாக்குதலுக்குப் பிறகும் சசிகலாவிற்காக இளவரசி மகன் விவேக் டீம் நாள்தோறும் சிறைவளாகத்தில் வேலை செய்துகொண்டு வருகின்றது இன்றளவும். பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் ஆனந்த், மற்றொரு ஆனந்த், வினோத் ஆகிய மூவரும் சசிகலாவிற்குத் தேவையான உதவிகளை எஸ்.ஐ. கெஜராஜ் மூலம் செய்து கொடுத்தனர். இதில் எஸ்.ஐ. கெஜராஜ் விடுமுறை நாள்களில் கூட சிறைக்கு வந்து, சசிகலாவுக்குத் தேவையான பணிகளைச் செய்து கொடுத்தார். இதற்காக எஸ். ஐ கெஜராஜிக்கு பெங்களூரு பன்னாரகட்டா சாலையில் 1,200 சதுர அடியில் வீட்டுமனையும், நாகனஹள்ளியில் இரண்டு அடுக்குமாடி வீடு கிடைத்தாக வினய்குமாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு எஸ்.ஐ கெஜராஜ் சிறையில் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்த மூவர் டீமில் தற்போது இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். ஆனந்த் என்பவர் சென்னையில் கார்டனில் பணியாற்றி வருகின்றார். இந்த மூவர் எது செய்தாலும் அடுத்த நிமிடம் விவேக்கிற்குத் தெரியும். விவேக்கின் விரல் நுனியில் செயல்பட்டு வருகின்றது. இந்த மூவர் அணியை வழி நடத்தி வந்தவர் தர்மபுரி முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மகன் எழில்மறவன், விவேக்கின் நம்பிக்கைக்கு உரிய நபராக பெங்களூரு சிறையில் வலம் வருகிறார்.

சுதாகரன் சிறையில் எப்படி..? 

ஆண்கள் சிறையில் அதிக அளவு பார்வையாளர்கள் இருப்பதால், சுதாகரனுக்குத் தேவையான அனைத்தும் அங்குள்ள கைதிகளே செய்து கொடுத்து விடுகின்றனர். ஆனால், ஒவ்வொன்றுக்கும் தனித் தனி ரேட். சிறையில் தனக்கு எனத் தனி டீம் அமைத்துள்ள சுதாகரன் எப்போதும் பரிவாரங்களோடு வலம் வருகின்றார். மூவர் அணி சுதாகரனுக்குத் தேவையான அனைத்தும் செய்து கொடுக்கின்றது.

சசிகலாவைத் தாண்டி சிறை சென்ற வளர்ப்புமகன் சுதாகரனைச் சந்திக்கும் விவரங்கள் அதிகமாக வெளியே கசியவில்லை. அதேபோல, அவரின் மனைவி சத்தியலட்சுமிகூட சுதாகரனைச் சந்திக்காமலேயே இருந்துவந்தார். ஆனால், 2017 நவம்பர் 8-ம் தேதி முதல்முறையாகக் கணவர் சுதாகரனைக் காண மனைவி சத்தியலட்சுமி வந்திருந்தார். சரியாக நண்பகல் 1.05 மணிக்கு சிறைக்குள் சென்றவர்கள், 2.45 மணிக்கு வெளியே வந்தனர். இருவரும் பார்த்த அடுத்த நிமிடமே உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் சிந்தி அன்பை வெளிப்படுத்திய சுதாகரனின் சிறை வாழ்க்கை, மனைவி சத்தியலட்சுமி மீதான அன்பு, பாசத்தை அதிகப்படுத்தியிருப்பதாகவே சசிகலா உள்ளிட்டவர்கள் நெகிழ்ந்தனர்.

பா.ஜ.க. விட்ட தூது… 

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க-வை ஆதரிப்பதாக அ.தி.மு.க-வின் 3 கோஷ்டிகளும் உறுதி தந்தன., அப்போது தம்பிதுரையை அழைத்து பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது வருமானவரித்துறை பாய்ச்சல்கள் என்கிற எடப்பாடியின் கோரிக்கையில் எங்களுக்கு விருப்பம் இல்லை, சிறையில் உள்ள சசிகலாவிடம் தகவல் தெரிவித்து ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கேளுங்கள் என்று தூது அனுப்பியது பா.ஜ.க. அதேபோல சசிகலாவும் ஆதரவு தந்தார்.

ஒரு நாள் எப்படி இருக்கும்?

அதிகாலை 5 மணிக்கெல்லாம் கண் விழிக்கும் பழக்கம்கொண்ட சசி வழக்கமான நடைமுறைகளை முடித்துவிட்டு, ஒரு மணிநேரம் யோகா செய்யத் தொடங்குகின்றார். அதன்பிறகு சிறைவளாகத்தில் அரைமணி நேரம் நடைப்பயிற்சி, அதன்பிறகு குளித்து முடித்துவிட்டு சிறைக்குள் ஸ்பெஷலாக கொண்டுவரப்பட்ட சுமார் 5 கிலோ எடை கொண்ட லிங்கத்திற்கு, அன்றைய தினம் பறிக்கப்பட்ட வில்வ இலைகள், பூக்களைக் கொண்டு பூஜை செய்கின்றார்.

இந்தப் பூஜை மனஅமைதிக்காவும், இழந்த சக்தியை மீண்டும் சக்தி பெற ஆகமவிதிபடி இந்தச் சிவலிங்கத்திற்கு ரகசியமாக தேவதிராஜ் ஐயர் மந்திரங்களை ஓதி பூஜை செய்து கொடுத்து வருகின்றார். கடந்த 2018 ஜனவரி 30-ந் தேதி சிறையில் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்து கொடுத்துள்ளார்.

காலை 8 மணிக்கு சசிகலாவுக்கு ஸ்பெஷலாகத் தயார் செய்யப்பட்ட உப்புமா அல்லது ரவை இட்லி தயாராக இருக்கும். சுகர் பேஷன்ட்டுகளான சசி, இளவரசி இருவருக்கும் காலை உணவு 8 மணிக்கு எல்லாம் முடிந்துவிடும்.

காலை உணவை முடித்த பிறகு தமிழகத்தில் இருந்து வெளியாகும் தினசரி செய்தித்தாள்கள் படிப்பார். 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே சந்திக்க முடியும் என்பதால் அன்றைய தேதிக்கு யார் யாரைச் சந்திக்க வேண்டும் என்று விவரம் கிடைத்தவுடன், அதை துண்டுச்சீட்டு மூலம் தகவல் அனுப்பி அவர்களைச் சந்திப்பார்.

சரியாக 11 மணிக்கு சுகர் இல்லாமல் டீ மற்றும் சுகர்ஃப்ரீ பிஸ்கெட் கிடைக்கும். மதியம் 1 மணிக்குப் பழங்கள் மற்றும் வேகவைத்த காய்கறி மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளும் சசிகலா சில சமயம் வெறும் மோர்சாதம் சாப்பிடுவார்.

மாலை 5 மணிக்கு வேகவைத்த சுண்டல் அல்லது பருப்பு வகைகள் ஒரு கப், சுகர் இல்லாமல் டீ எடுத்துக்கொள்கிறார். எப்போதுமே இரவு 7 மணிக்கு இரண்டு சப்பாத்தி, ராகியில் செய்யப்பட்ட உணவு சாப்பிட்டு வருகின்றார். இதுதான் சசிகலாவின் சிறை மெனு லிஸ்ட்.

சசிகலாவை கணவர் நடராஜனின் தம்பி பழனிவேல் மற்றும் வழக்கறிஞர் அசோகனும் அதிக முறை சந்தித்த பார்வையாளர்கள். இவர்கள் சந்திப்புகள் மட்டும் பதிவேட்டில் குறிப்பிடப்படுவதில்லை

சசிகலா

5 நாள் பரோல்

70 நாட்களுக்கும் மேலாக உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்துள்ள கணவர் நடராஜனைக் காண சசிகலா பரோலுக்கு விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு ஐந்து நாள்கள் பரோல் கிடைத்தது. அக்டோபர் 6-ந் தேதி காலையில் 15 நாள்கள் பரோல் கிடைக்காது 6 நாள் ஒகே என்று மாற்றி எழுதிக் கொடுங்கள் என சிறைக் கண்காணிப்பாளர் சோமசேகர் சொன்னார். ஆனால்,
வழக்கறிஞர்களுடன் சிறைக்குச் சென்ற தினகரன் `6 நாள் பரோல் என்று சொன்னீர்கள். இப்பொழுது ஐந்து நாட்கள் என்கிறீர்கள்’ என்று சிறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். சசிகலா 2017அக்டோபர் 6-ம் தேதி வெளியே அனுப்பப்படுவார். அவர் சென்னைக்குப் போய்வர ஒருநாள் ஆகும். அந்த ஒருநாள் பரோல் கணக்கில் வராது என சிறைத்துறை அளித்த விளக்கத்தை தினகரன் ஏற்றுக்கொண்டார்.

“சசிகலாவும் உறவினர்களும் அரசியல்வாதிகளாக உள்ள நிலையில், அரசியல்வாதிகளைச் சந்திக்கக் கூடாது என நிபந்தனை விதித்திருக்கிறீர்களே’ என தினகரன் கேட்க, “உறவினர்களைச் சந்திக்க தடையில்லை. இதெல்லாம் சசிகலாவைப் பற்றி தமிழக போலீஸார் கொடுத்த ரிப்போர்ட்படி போடப்பட்ட கண்டிஷன்கள்’ எனக் கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேறு வழியில்லாமல் தினகரன் ஏற்றுக்கொண்டார். கூடவே சிவில் யூனிஃபார்மில் இரண்டு காவலர்கள் சசிகலாவுடன் இருப்பார்கள் என்ற உத்தரவால் கடைசி நேரத்தில் விமானம் மூலம் சென்னை திரும்புவது கேன்சல் செய்யப்பட்டது. சர்வதேச எண் கொண்ட ரோமிங் வசதி பெற்ற, போலீசார் டேப் செய்ய முடியாத போனில் சசிகலா பேசிக்கொண்டே பயணம் செய்தார். மீண்டும் தனது 5 நாள் பரோல் முடித்து சிறை திரும்பினார்.

இதன் பிறகு நவம்பர் 28-ந் தேதி காலை 11.15 மணிக்குச் சென்றவர் நண்பகல் 2.45 மணிக்கு வெளியே வந்தார் சிறையில் மீண்டும் சசிகலா சுதந்திரமாக இருந்து வருகின்றார் என்பதற்கு இதுவே சாட்சி.

கலைந்த மெளனவிரதம்

ஜெ இறந்து ஒரு வருட நினைவாக கடந்த ஆண்டு 2017 டிசம்பர் 5-ந் தேதி மெளனவிரதத்தை ஆரம்பித்த சசி 2018 ஜனவரி 30-ந் தேதி குடும்ப ஜோதிடம் மற்றம் குருக்கள் தேவாதிராஜ ஐயர் மூலம்  சிறையில் ஸ்பெஷலாக வைத்துள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்து மந்திரங்களை ஓதி சசியின் மெளனவிரதத்தை முடித்து வைத்துள்ளார்.

Reproduced from Vikatan

பகிர்