சென்னை ராயப்பேட்டையில் அம்மா பேரவை ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஜெ. பிறந்தநாளன்று நலத்திட்டங்களை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவித்தார். மக்கள் கருத்து எங்களுக்கு எதிராக இல்லை. தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் உரிய பங்கை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். தமிழக அரசின் சுகாதார திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என கூறினார்.
 வளர்ந்த மாநிலம் என்று சொல்லி மத்திய அரசு நமக்கான நிதியை குறைப்பு செய்கிறது. இருந்தாலும் மத்திய அரசிடம் நாங்கள் கேட்டு பெறுவோம். 15-வது நிதிக்குழு தமிழகத்தின் பங்கை திருப்பி தர வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கு சீராக உள்ள மாநிலம் தமிழகம் தான். தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்து இருப்பது குறித்து கேட்கிறீர்கள். பயங்கரவாதிகளின் பயிற்சி மையமாக தமிழகம் மாற இனி ஒன்றும் அவசியமில்லை. அதான் நாங்கள் இருக்கிறோமே. எங்களை விட பெரிய பயங்கரவாதிகள், மக்கள் விரோதிகள் தமிழ்நாட்டில் உண்டா?. அவரின் இந்த கருத்து ஜமுக்காளத்தில் வடிகட்டிய உண்மைக்கு மாறான பொய் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 2006-2011-ம் ஆண்டு காலக்கட்டத்தில் தான் தி.மு.க. ஆட்சியில், போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் சென்றது. மு.க.ஸ்டாலினுக்கு அப்போது வராத ஞானோதயம், அக்கறை இப்போது வந்திருப்பது வியப்பளிக்கிறது. உண்மையிலேயே அவருக்கு மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் அப்போது இருந்த முதல்-அமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் இது போன்ற ஆலோசனையை தெரிவித்து இருக்கலாம். தி.மு.க. போக்குவரத்துத்துறை சொத்துகளை அடமானம் வைத்து சென்றிருந்தாலும், அதை சீராக்கி சேவை துறையாக்கி பாதி சைசில் மினி பஸ்கள் விட்டு அதில் இரட்டை இலையை பெரிசாக ஒட்டி ஓட்டியவர் ஜெயலலிதா! இதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்த நிர்வாகிகளை நீக்கி (நான் நீங்கலாக) வருகிறோம்.
விரைவில் காலியாக உள்ள இடங்களுக்கு புதிய நிர்வாகிகள் தியான தர்ம யுத்த பயிற்சிகளுக்கு பிறகு நியமிக்கப்படுவார்கள். ஜெயலலிதா பிறந்தநாளுக்குள் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அறிவிப்பு வெளியாகும். அம்மா உணவகம் திறக்கப்பட்டது வருமானத்தை ஈட்ட அல்ல, ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் கோயம்பேட்டில் தரையில் சிதறிய காய்கறி அரிசி மூட்டைகளை பயன்படுத்தி தயாரிக்கும் உயர் தரமான உணவை வழங்க வேண்டும் என்பதற்காக தான். இந்த திட்டம் தொடர்ந்து செயல்படும். இந்த திட்டம் எக்காரணத்தை கொண்டும் நிறுத்தப்படாது. கோயம்பேடும் கலீஜாகவே இருக்கும். கட்சி அலுவலகத்திற்குள் ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் யார் யார் கலந்துகொள்வார்கள் என்பது குறித்து உங்களுக்கு (பத்திரிகையாளர்களுக்கு) விரைவில் தெரிவிக்கப்படும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொள்வாரா என்பதை பொறுத்து இருந்து பாருங்கள். ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் நடக்கும். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நீங்கள் முதல்-அமைச்சர் பதவியை இழந்து ஓராண்டு ஆகிறது. இது உங்களுக்கு வருத்தம் அளிக்கிறதா? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம் சிரித்துக்கொண்டே, ‘எதை கொண்டு வந்தோம், இழப்பதற்கு’ என்றார். முதல்வர் பதவியிலிருந்து விலகி ஒரு வருடம் ஆனதில் உள்ள வருத்தத்தை பகவத் கீதையில் “வரும்போது எதைக் கொண்டு வந்தோம் நாம் இழப்பதற்கு, இன்று நம்முடையதாக இருப்பது நாளை வேறொருவடையதாகிறது, அதாவது ஒட்டு மொத்த தமிழக வளங்களும் பாஜக காவிப் பண்டாரங்களின் முதலை வாயில்” என்று சொல்லாமல் சொல்லி முழுசாக காவிக் கொண்டையை மறைக்கத் தவறி பத்திரிகையாளர்களை நமுட்டுச் சிரிப்பால் சமாளித்தார்.
பகிர்