காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று வெளியிட்டது.

அந்த தீர்ப்பில், காவிரி நீர் என்பது தேசத்தின் பொதுச் சொத்து. காவிரி நதிநீரை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்று கருத்துக் கூறியிருந்தனர்.

காவிரி நதிநீர் எங்களுக்கேச் சொந்தம் என்று கர்நாடகம் கூறி வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த கருத்தை முன் வைத்துள்ளனர்.

தமிழகத்தில் 20 டிஎம்சி அளவுக்கு நிலத்தடி நீர் உள்ளது. எனவே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம், தமிழகத்துக்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து 284.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகாவுக்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து ஆண்டுதோறும் கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் வழங்க வேண்டும் என்ற நடுவர்மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து எந்த மாநிலமும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. குடியரசுத் தலைவர் மேற்பார்வையில் காவிரி மேலாண்மை வாரியம் செயல்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

குடிநீர் பயன்பாட்டை கருத்தில் கொண்டு பெங்களூருவுக்கு கூடுதல் நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், தமிழகத்துக்கு நிலத்தடி நீர் இருப்பதை நடுவர் மன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்றும், நிலத்தடி நீரை உடனடியாக கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், காவிரி நதிநீர் விவகாரத்தில் மெட்ராஸ் – மைசூர் இடையேயான ஒப்பந்தம் செல்லும் என்றும், அதன்படி, 1892, 1924ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தங்கள் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின்படி, தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா காவிரி நதியின் குறுக்கே புதிய அணைகளை கட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவுக்கு கூடுதலாக வழங்கப்படும் 14 டிஎம்சி தண்ணீரில் பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்கு 4 டிஎம்சியும், தொழில் நிறுவனங்களுக்கு 10 டிஎம்சியும் வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் காவிரி நீர் பங்கீட்டு வழக்கின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்களாவது

காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடகாவில் ‘காலா; வெளியீடு இல்லை என்று காவிரிக்கு ஆதரவாக ரஜினி முடிவு செய்துள்ளதாக நம்பத்தகாத செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் கன்னடர்கள் மகிழ்ச்சி’ யில் இருப்பதற்காக நமது கப்ஸா நிருபர் தெரிவிக்கிறார்.

பகிர்