(கமல் தன் சகாக்களோடு உயர் மட்ட ஆலோசனைக் குழுக்கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்)

கமல் : (பாரதி கிருஷ்ணகுமாரைப் பார்த்து )பேசுங்கள் பிகே!

பாரதி கிருஷ்ணகுமார்:அந்த வருடம் 1917.அது ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரு குக்கிராமம்.அந்த கிராமத்தில் ஒரு குழந்தை ;அது இப்போதுதான் இந்த பூமிக்கு வந்திருக்கிறது. தொப்புள் கொடியை அறுத்து முடித்த தாதியின் கரங்களில் வடிந்து கொண்டிருந்த அந்த இரத்தத்தின் நிறமும் சிவப்புதான் தோழர்களே!

கமல் :மாஸ்கோவில் மட்டும் அல்ல; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தீபாராதனையில் எரியும் தீயின் நிறமும் சிவப்புதான்.இங்கு அது பஞ்ச பூதம்; கம்யூனிசத்துக்கு சாதமே வேதம். கம்யூனிஸமும் ஒரு கடவுள்தான்;அதனால்தான் அது காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.கடவுளும் ஒரு கம்யூனிஸ்டுதான்.அதனால்தான் அவன் கால்கள் பூமியிலேயே இருப்பதில்லை. இதைச் சொல்வதால் சிலர் கோபித்துக் கொள்ளலாம்;கோபத்தின் நிறமும் சிவப்புத்தானே! (கண்ணடிக்கிறார்).அந்தக் கடவுள் படுப்பதற்கு ஆதிசேஷன் என்கிற பழைய பாயை உருவி விட்டு தீக்கதிர் பத்திரிக்கையை விரித்துப் போட்டு தரையில் கிடத்தி விட வேண்டியதுதான்.

சுகா:ஆஹா! அற்புதம்! ராகங்களை சோத்துல பிசைஞ்சு நாம சாப்பிடாம நிலாவுக்கு ஊட்டி விடுற மாதிரி இருக்கு! என்ன சுகம்! என்ன சுகம்! தாமிரவருணி தண்ணி குடிச்சாதான் இப்படி பேச முடியும். ஜெயமோகன் ஒரு தடவை. ..

கமல் :ஜெயமோகனை ஒரு தடவை அல்ல; பல தடவை சந்தித்திருக்கிறேன்.அவர்தான் தாமிரவருணியின் பழைய பெயர் ‘பொருநை’ என்று சொல்லித் தந்தார். இந்த விஷயம் தாமிரவருணிக்குத் தெரியுமா? என்று கேட்டேன். அதைத்தான் ஒரு நாவலாக எழுதப் போகிறேன் என்று சொன்னார். நீங்கள் ஏன் ஒரு நாவல் எழுதக் கூடாது. அதற்கான எல்லாத் தகுதியும் உங்களுக்கு இருக்கிறது என்று அவர் சொன்னதை உங்களிடம் சொல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிற அந்தச் சிறு உணர்வுக்குப் பெயர்தான் தன்னடக்கம்; அதை எனக்குக் கற்றுத் தந்தவர் தொ.ப; ஜெயமோகன் பற்றி தொ. ப சொன்னதையோ,தொ. ப பற்றி ஜெயமோகன் சொன்னதையோ நான் அவர்களிடம் சொன்னதில்லை. உங்களிடமும் சொல்ல மாட்டேன். ஆனால் சரியான தருணத்தில் மக்களிடம் சொல்வேன். அதற்காகத்தான் இந்த மய்யம்.

கமீலா நாசர் :நம்ம கொள்கைகளைப் பற்றிப் பேசலாமா?

கமல் :நிறைய பேசியிருக்கிறோம்;நானும், நாசரும். தேவர் மகனிலிருந்து , குருதிப் புனல் வரை.’குருதிப் புனல்’ படத்தில் ஒரு வசனம் வருமே ‘வீரம்னா என்ன தெரியுமா?பயப்படாதது மாதிரி நடிக்கிறது(‘அந்தா பாருங்க ஞானசம்பந்தன் கூடவே சொல்றார்!)அதேதான்;அந்த வசனத்தைப் படமாக்கும் போது நாசர் சிரித்து விட்டார். நான் கேட்டேன் ‘பமீலா நினைவு வந்து விட்டதா?. அப்போது துவங்கியது இந்தக் கொள்கை.அதற்கும் முன்பே தேவர் மகன்; ஆனால் இந்த விஷயத்தைச் சொல்லாமல் சென்று விட முடியாது. பினராயி விஜயனை சந்திக்கச் சென்ற போது அவர் ‘தேவர் மகன்தான்’ பார்த்துக் கொண்டிருந்தார்;மலையாள சப் டைட்டிலோடு.என்னை உட்காரச் சொன்னார். நான் அமரவில்லை;அந்த மரியாதை அவருக்கானதில்லை;கார்ல் மார்க்ஸ்க்கானது.அம்பேத்கருக்கானது;ஏன் காந்திக்கானது;கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால் இராமனுஜருக்கானது.பெரியாருக்கானது என்று கூட சொல்லிக் கொள்ளலாம்.பினராயி விஜயன் மீண்டும் உட்காரச் சொன்னார். நான் மறுத்தேன். இந்த மரியாதையும் அவருக்கானதில்லை; இது எனக்கானது.அவர் சொன்னார்’எலெக்ஷனில் நிற்கப் போகிறீர்களே;இப்போது உட்காருங்கள் ‘.உடனே உட்கார்ந்து விட்டேன். இந்த மரியாதை அந்த ஹாஸ்யத்துக்கானது.படத்தில் ஒரு காட்சி ‘நாசர் அரிவாளோடு நிற்பார். நான் சுத்தியலோடு’.பினராயி விஜயன் உரக்கச் சிரித்தார். ‘அரிவாள், சுத்தியல் பார்த்து சிரிக்கிறீர்களா?ஆனால் நட்சத்திரம்தான் இல்லை ‘என்றேன். ‘அதுதான் நீங்கள் இருக்கிறீர்களே’என்றார்.இதைத்தான் மம்தாவிடம் சொன்னேன். சந்திரபாபு நாயுடுவிடம் சொன்னேன்; கெஜ்ரிவாலிடம் சொன்னேன். அவர் விளக்குமாறை எடுத்தார்.’ நான் போர்பந்தரிலேயே இதைப் பார்த்து விட்டேன்’ என்றேன். கட்டித் தழுவிக் கொண்டார். அவரைத் தழுவிக் கொண்டேதான் இன்விடேஷனில் கெஜ்ரிவாலின் பெயரை எழுதினேன். என்னுடைய இந்தச் சிரமங்களை மக்களிடம் கூறப் போவதில்லை. ஆனால் உங்களிடம் சொல்லியாக வேண்டும். அதற்காகத்தான் இந்த மய்யம்.

கு.ஞானசம்பந்தன் :சரியாச் சொன்னீங்க!இப்படித்தான் ஒருத்தன் ரயிலுக்குள் ஓடிக் கொண்டிருந்தானாம்!எல்லோரும் ஏன்?னு கேட்க எனக்கு இன்டர்வியூ! அதனால வேகமா போகனுன்னானாம்!

கமல்: (உரக்கச் சிரிக்கிறார்)இது நகைச்சுவைதான் .ஆனால் இதில் உண்மை உண்டு.தமிழ்நாட்டில் இன்றைக்கு 3 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இன்டர்வியூவிற்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.பிரான்ஸிலும், ஜெர்மனியிலும் அப்படியல்ல; அங்கும் ஓடுவார்கள். ஆனால் அங்கெல்லாம் அவர்களுக்கு முன்னால் ஒரு பெண் ஓடிக் கொண்டிருப்பாள்.அது எப்போது தமிழகத்தில் நிகழ்வது? நாம் இன்னும் ரயிலுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறோம்.இத்தனைக்கும் ரயிலை ஓடவிடாமல் செய்தவர்கள் நாம்; தண்டவாளத்தில் படுத்தது தவறில்லை. ஆனால் நாம் படுத்த உடனே எழாமல் தூங்கி விட்டோம். அந்தத் தூக்கத்தில் நாம் கண்டதெல்லாம் அழகிய கனவுகள்தான்;மறுப்பதற்கில்லை.இதை அன்றே அண்ணா பேசியிருக்கிறார்; காமராஜர் செய்திருக்கிறார்;எம்ஜிஆர் உணர்ந்திருக்கிறார். இது இன்னும் இருவருக்குத் தெரியும். ஒருவர் காந்தி அவரைக் கொன்று விட்டார்கள்;இன்னொருவன் கோட்சே ஆனால் அதை காந்தியாலேயே மறந்து போனவன் அவன்

ஸ்ரீப்ரியா (எழுந்து)இன்னாப்பா பேசிக்கின்னே இருக்கே!கட்சி நடத்த துட்டு வேணுமே?இன்னா பண்ணலாம்.

கமல் :விபச்சாரம் பண்ணுவோம்
(எல்லோரும் அதிர்ச்சியடைகிறார்கள்)

ஸ்ரீப்ரியா :நீ,நானெல்லாம் பழைய டிக்கெட்டுப்பா! எவனும் கண்டுக்க மாட்டான்.

கமல் :கல் என்றாலே நாய்தானா?ஏன் கடவுள் இல்லையா?
ஆம்; விபச்சாரம் செய்வோம்.
உடம்பைக் காட்டுவது விபச்சாரம் என்றால் கையை நீட்டுவதும் விபச்சாரம்தான்.மக்களிடமே கை நீட்டுவோம்.இங்கும் பசிதான்;மாற்றம் வந்து விடாதா?என்கிற பசி. நாம் விபச்சாரம் செய்வது தமிழ்நாட்டின் கற்பைக் காப்பாற்ற!விந்திய மலைக்குத் தெற்கே இந்த விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கட்டும்.நாளை அது வடக்கிலும் பரவட்டும். வடக்கும், தெற்கும் மனிதன் கண்டுபிடித்ததுதானே?ஏன் கடவுளையே மனிதன்தானே கண்டுபிடித்தான்.ஆனால் மய்யத்தைக் கண்டுபிடித்தது நானல்ல; நாம்;யாராவது ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

எல்லோரும்(ஒருமித்த குரலில் )ஆமென்!

கமல் :(கண்ணடித்தபடி)ஹெச். ராசா கோபித்துக் கொள்ளப் போகிறார்.

நிருபர்;(குறும்பாக)ஜோசப் கமலா ?

கமல் (சிரிப்புடன்)இதற்கு இயேசுநாதர் கோபித்துக் கொள்ளப் போகிறார்.நியாயமாகப் பார்த்தால் சீனிவாச அய்யங்கார்தான் கோபித்துக் கொள்ள வேண்டும்.
(எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்)

இந்தக் காட்சியை ரஜினி தொலைக்காட்சியில் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

லதா:ஏன் இப்படி அந்தாளை வெறிச்சு பார்த்துட்டு இருக்கீங்க?

ரஜினி :இல்ல லதா!தாடி இல்ல;பொட்டு இல்ல; தொப்பி இல்ல;உருத்திராட்சக் கொட்டை இல்லை.ஆசிரமம் இல்லை.பஜனை இல்லை;பக்தி இல்ல.கடவுள் பெயரைச் சொல்லாமலயே ஒருத்தன் மொத்தத் தமிழ்நாட்டையும் லூசாக்கிட்டு இருக்கான்!அதான் ஆச்சர்யமா இருக்கு!

Mohammed Rafeek R

பகிர்