முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 24) 1500 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாளில் நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்வது வழக்கம். சிறைக் கைதிகள் பலரின் வேண்டுகோளை ஏற்று ‘சட்டத்துக்கு உட்பட்டும் சிறை விதிகளுக்கு உட்பட்டும் மனிதாபிமான அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார்.
தர்மபுரி மாணவிகள் எரிப்பு வழக்கில் தொடர்புடையை மூவரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக தகவல் பரவி, பலரையும் அதிர வைத்திருக்கிறது. தமிழகத்தை மட்டுமல்லாது, இந்தியாவையே உறைய வைத்த அந்த பழைய நிகழ்வு தொடர்பான ஒரு ஃப்ளாஷ்பேக்! கடந்த 2000-ம் ஆண்டில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த வன்முறையில் தர்மபுரியில் கோவை வேளாண் கல்லூரிப் பேருந்துக்கு சிலர் தீவைத்தனர். இதில் பஸ்ஸில் இருந்த கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் பலியாகினர். இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், அதிமுகவைச் சேர்ந்த முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய 3 பேருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2007-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. இது தவிர சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 25 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கின் மேல்முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தபோதும், மேற்கண்ட தண்டனைகள் உறுதி செய்யப்பட்டன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜிஎஸ் சிங்வி, பி.எஸ்.சௌகான் ஆகியோர் விசாரித்தனர். சமூகத்துக்கு எதிரான காட்டுமிராண்டித் தனமான, ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனக் கூறிய நீதிபதிகள், கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை உறுதி செய்தனர்.
தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மூவரும் மனு தாக்கல் செய்தனர்.
 
இந்த மறு ஆய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சுதர்ஷன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ். நிஜ்ஜார் ஆகியோர் கொண்ட பெஞ்ச், குற்றவாளிகள் மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தனர். எனினும் சிறையிலேயே இருந்து வருகிறார்கள். ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யப்படும் 1500 கைதிகளில் மேற்படி மூவரும் இடம் பெற்றிருப்பதாகவும், அவர்களுக்காகவே இந்த விடுதலையை எடப்பாடி பழனிசாமி அரசு அனுமதித்திருப்பதாகவும் விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன. முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய 3 அதிமுக பிரமுகர்களும் விடுதலை ஆனால் அது பெரும் சர்ச்சையைக் கிளப்பும். கடந்த 2008-ம் ஆண்டு அப்போதைய திமுக அரசு அண்ணா பிறந்த நாளையொட்டி 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த 1405 கைதிகளை விடுவித்தது. அதில் மதுரை மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் கைதான திமுக.வினர் 8 பேரும் அடக்கம்! அவர்கள் மு.க.அழகிரியின் அடியாட்களாக உலா வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது அவர்களை விடுதலை செய்தது விமர்சனங்களுக்கு உள்ளானது. அதே பாதையில் எடப்பாடி அரசும் பயணிக்கிறதா என்பதே இப்போதைய கேள்வியாகி உள்ளது.
பகிர்