கமல்ஹாசன் புதிய கட்சியை அறிவித்த உடனேயே, வெளிநாட்டு நிதி, மிஷினரிகள் தொடர்பு என சர்ச்சை களை கட்டியிருக்கிறது. விவாதங்களும் தூள் பறக்கின்றன. கமல்ஹாசன், மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய கட்சியை அறிவித்தார். அந்தக் கட்சிக்கு, ‘மக்கள் நீதி மய்யம்’ என பெயரிட்டிட்டார். ‘மையம்’ என குறிப்பிடுவதை தவிர்த்து, தனது கட்சியின் பெயரை கமல்ஹாசன் ஏன் ‘மய்யம்’ என குறிப்பிடுகிறார் என்பதே தனி விவாதமாக மாறியிருக்கிறது. இதன் பின்னணி விவரங்கள் இப்போது ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. கமல்ஹாசன் ஏற்கனவே ‘மையம்.காம் பிரைவேட் லிமிடெட்’ என்கிற நிறுவனத்தை நடத்தியிருக்கிறார். பதிவு ஆவணங்கள் அடிப்படையில் பார்த்தால், அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக கமல்ஹாசனும், நடிகை கவுதமியும் உள்ளனர். 2010-ம் ஆண்டு இந்த நிறுவனம் இயங்க ஆரம்பித்தது. கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் இயக்குனர்களாக பொறுப்பேற்ற ‘மையம்.காம் பிரைவேட் லிமிடெட்’டை சுற்றித்தான் இப்போது ஏக சர்ச்சைகள்! இந்த நிறுவனத்தை பிரிட்டீஸ் தீவுகளில் ஒன்றான ’கேமன் தீவு’களில் பதிவு செய்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. அந்தத் தீவுகளை, வரி மோசடிக்கு பெயர் பெற்ற பகுதியாக குறிப்பிடுகிறார்கள். இரு ஆண்டுகளாக மேற்படி நிறுவனம் சார்பில் வரி கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கமல்ஹாசனின் இல்லமான எண் 47, எல்டாம்ஸ் சாலை முகவரியில் கிறிஸ்துவ நிறுவனம் ஒன்று பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் வெளியாகி இருக்கின்றன. அந்த கிறிஸ்துவ நிறுவனம், தென் இந்திய சர்ச்களுக்கு மீடியா தொடர்பை கவனிக்கு நிறுவனம் ஆகும். வெளிநாட்டில் இருந்து அந்த நிறுவனத்திற்கு ஓராண்டில் மட்டும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

மேற்படி கிறிஸ்துவ நிறுவனம், கமல்ஹாசனின் எல்டாம்ஸ் சாலை சொத்தின் முகவரியில் இயங்க வேண்டிய அவசியம் என்ன? வெளிநாட்டு நிதி பெறும் மிஷினரிகளுடன் கமல்ஹாசனுக்கு என்ன தொடர்பு? ஏற்கனவே அவரும், கவுதமியும் இயக்குனர்களாக இருந்த ‘மையம்’ மேற்கொண்ட பணி என்ன? அதில் இருந்துதான் ஒரு எழுத்தை மட்டும் மாற்றிக்கொண்டு ‘மய்யம்’ என்கிற பெயரில் வெப்சைட்டையும், கட்சியையும் கமல்ஹாசன் உருவாக்கினாரா? என கேள்விகள் அடுத்தடுத்து வந்த வண்ணம் இருக்கின்றன. அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளரான ஹரி பிரபாகரன் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சில ஆவணங்களை வெளியிட்டு கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அதற்கு அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன், ‘மையம் என்கிற வெப்சைட் வேறு, மய்யம் என்கிற கட்சி வேறு. இரண்டையும் ஏன் குழப்பிக் கொள்ள வேண்டும்?’ என கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்து கூறியிருக்கிறார். அதற்கு ஹரி பிரபாகரன், ‘பிரச்னையை திசை திருப்ப வேண்டாம். நான் கேள்வி எழுப்பியிருப்பது கமல்ஹாசனும், கவுதமியும் இயக்குனர்களாக உள்ள ‘மையம்’ நிறுவனத்தின் பதிவு மற்றும் வரி தாக்கல் செய்யாத பிரச்னைகளைப் பற்றி! மேலும் கமல்ஹாசனின் முகவரியில் வெளிநாட்டு நிதி பெறும் ஒரு நிறுவனம் இயங்குவது குறித்து! இதற்கு தெளிவான பதிலை கமல்ஹாசனோ, அல்லது வேறு யாரோ கூறட்டும்’ என சவால் விடுத்திருக்கிறார். கமல்ஹாசன் வாயைத் திறந்தால்தான் இந்த விவகாரம் அடங்கும் எனத் தெரிகிறது.

பகிர்