தமிழகம் வந்த பிரதமர் மோடியுடன் அமைச்சர் தங்கமணி ரகசியமாக சந்தித்து பேசினார். எடப்பாடி, ஓபிஎஸ் இடையே உள்ள பிரச்சனை குறித்தே இந்த சந்திப்பு என்று கூறப்படுகிறது.
சசிகலா சிறைக்கு சென்றப்பின் டிடிவி தினகரன் பக்கமிருந்து எடப்பாடி அணியினர் விலக ஆரம்பித்ததும் ஓபிஎஸ் டெல்லி மேலிட ஆலோசனைப்படி தனது அணியை ஈபிஎஸ் அணியுடன் இணைத்தார். இதற்கான பதவி, கட்சிப்பொறுப்பு அனைத்தும் பேசப்பட்டது.
தனக்கு வேண்டிய துறை உட்பட ஓபிஎஸ் கேட்டதால் வீட்டுவசதித் துறையில் செல்வாக்காக இருந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடமிருந்து பொறுப்பு பிடுங்கப்பட்டு பின்னர் ஓபிஎஸ்ஸுக்கு வழங்கப்பட்டது. துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர் என சக்தியான பதவியாக இருந்தாலும் அவரால் செயல்பட முடியவில்லை.
அணிகள் இணைந்த பின்னரும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் பிரிந்துதான் தங்கள் செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி அணியின் மாவட்டச்செயலாளர்கள் ஒருவர்கூட ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்று அவரை சந்திப்பதில்லை. சென்னையில் நடைபெறும் விழாக்களுக்கு அழைப்பதில்லை, பேனர்களில் வேண்டுமென்றே படம் போடுவதில்லை என வெளிப்படையாகவே பிரிவு தெரிகிறது.
மறுபுறம் தன்னை நம்பியவர்களுக்கு உரிய கட்சிப்பதவியோ, வேறு பொறுப்புகளோ வாங்கித் தராததால் ஓபிஎஸ்ஸின் நெருங்கிய சகாக்கள் செம்மலை, நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், மதுசூதனன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் ஓபிஎஸ் வீட்டுக்கு செல்வதை தவிர்த்துவிட்டனர். இதனால் இரண்டு பக்கமும் தனக்கான ஆதரவின்றி தனிமைப்படுத்தப்பட்டார் ஓபிஎஸ்.
தனக்கான அங்கிகாரம் எதுவும் இல்லாத நிலையில் பிரமரின் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டபோது கிடைக்கவில்லை. இதையடுத்து தேனியில் நடைப்பெற்ற கூட்டத்தில், தான் பிரதமர் அறிவுரையின் பேரிலேயே அதிமுகவுடன் இணைந்ததாக பேசி பரபரப்பூட்டினார்.
இது பாஜக தலைமைக்கும், எடப்பாடிக்கும் சங்கடத்தை ஏற்படுத்தவே எடப்பாடி இதை மறுத்தார். ஓபிஎஸ் சமீப காலமாக பாஜக தலைமையால் ஓரங்கட்டப்படுகிறார் என்ற எண்ணம் தோன்றியவுடன் தமிழக பாஜக தலைவர்கள் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக பேட்டி அளிக்க துவங்கினர். பொன்னாரும், ஓபிஎஸ்ஸும் நேரடியாக பேட்டி மறுப்பு பேட்டி என ஒருவருக்கொருவர் பதில் சொல்லிக்கொண்டனர்.
மறுபுறம் டிடிவி தினகரன் அணியினர் 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு டிடிவி அணிக்கு சாதகமாக வரும் நிலை உள்ளதாக கருத்து ஓடுவதால் எடப்பாடி அணியில் லேசாக தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. டிடிவி தரப்பினருடன் சமாதானம் பேசும் நிலைக்கு எடப்பாடி அணி யோசித்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சமீப காலமாக அமைச்சர் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, மாஃபா. பாண்டியராஜன் உள்ளிட்டோர் ஓபிஎஸ் வீட்டுக்கு அடிக்கடி வந்து ஆலோசனையில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு பதவி கொடுக்க, இபிஎஸ் அணியின் எந்த மாவட்டச் செயலாளர்களும் தயாராக இல்லை. ஏற்கனவே இருக்கிற மாவட்டங்களை மேலும் பிரித்து ஓபிஎஸ் அணிக்கு இடம் கொடுக்கலாம் என்றால், அதற்கும் இப்போதைய மா.செ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இது போன்ற சிக்கல்கள் நீடித்தால் கட்சியில் தன்னுடன் இருந்த மதுசூதனன், மைத்ரேயன் போன்ற சீனியர்களையே சமாளிக்க முடியாது என்பதும் ஓபிஎஸ் தரப்பு குமுறல்!
இபிஎஸ் தரப்புடன் இப்போது இருக்கும் மூத்த நிர்வாகிகளில் பலர் ஆட்சி முடியும் தருவாயில் டிடிவி தினகரன் பக்கம் சாய்ந்துவிடும் வாய்ப்பு இருப்பதாகவும் ஓபிஎஸ் தரப்பில் சுட்டிக் காட்டப்படுகிறது. எனவே அதை தவிர்க்க ஓபிஎஸ் தரப்புக்கு அதிகாரம் அவசியம் என்றும், அடுத்த ஓராண்டுக்கு ஓபிஎஸ்.ஸை முதல்வர் ஆக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அணிகள் இணைப்பு நேரத்தில் டெல்லி தரப்பு சார்பில் ஓபிஎஸ்.ஸுக்கு இப்படி உத்தரவாதம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதை நிறைவேற்றுவது குறித்துதான் இப்போது தங்கமணியிடம் பேசப்பட்டிருப்பதாக தகவல்! ‘ஓபிஎஸ்.ஸுக்கு ஏதாவது தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இருந்திருந்தால், பிரதமர் தரப்பில் மைத்ரேயனை அழைத்துப் பேசியிருப்பார்கள். இபிஎஸ்.ஸுக்கு சில கண்டிப்பான அறிவுரைகளை வழங்கத் தேவை இருந்ததாலேயே தங்கமணிக்கு அழைப்பு’ என இந்த வியூகங்களை மேலும் விவரிக்கிறார்கள் அதிமுக பிரமுகர்கள்.
அண்மையில் டிடிவி தினகரன் அளித்த பேட்டியிலும், ‘ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை குறி வைத்தே பிரதமர் குறித்து பேசியதாக’ தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கம் ஒரு பக்கம் மிரட்டிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் உள்கட்சி விவகாரமும் எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் பதவியை அசைத்துப் பார்க்கும் போல தெரிகிறது. ஒருவேளை டெல்லியின் உத்தரவுகளுக்கு எடப்பாடி ஒப்புக்கொண்டாலும், அதிமுக.வின் இதர அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் ஓபிஎஸ்.ஸை ஏற்பார்களா? என்பது பெரிய கேள்வி!