மதுரை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,  மற்றும் ஆர்.கே. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களிடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதல் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்வதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.15 விமானத்திலும்,  டி.டி.வி. தினகரன் மதியம் 1.45 மணிக்கு புறப்படும் விமானத்திலும் முன்பதிவு செய்திருந்தனர். இவர்களை வரவேற்க இருவரது ஆதரவாளர்களும்  விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
இருதரப்பினரும் அதிகளவில் கூடி இருந்ததால் ஊரக காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் 100-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.
இந்நிலையில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.  இதனை பார்த்த டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாகவும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
அதேசமயத்தில் சிறிது நேரத்தில் டி.டி.வி. தினகரன் மதுரை விமான நிலையத்திற்குள் நுழைந்தார்.  அப்போது ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் டி.டி.வி. தினகரனுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதனால்  இருதரப்பினருக்கும் இடையே மோதல் மற்றும் தள்ளுமுள்ளு  ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தை கலைக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர். மேலும் அந்த நேரத்தில் பயணிகள் விமான நிலையத்தின் உள்பகுதி மற்றும் வெளியே செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் மதுரை விமான நிலையம் சுமார் 1 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன் இதேபோல துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,  டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், மீண்டும் அதுபோன்ற சம்பவம் மதுரை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.  இதனை தவிர்க்க போலீஸார் இருவரின்ஆதரவாளர்களை மதுரை விமான நிலைய வளாகத்திற்குள்  அனுமதிக்காமல் இருந்தால் இதுபோன்ற சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.

பகிர்