சென்னையில் தமிழ் சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழா தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது கவர்னர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நிற்க விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மட்டும் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
ஆனால் விழா நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றவர்களுடன் சேர்ந்து எழுந்து நின்று மரியாதை செய்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மதுரை ஆதீனம் கருத்து கூறியதாவது:-
எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அதற்குரிய மரியாதையை செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் காஞ்சி மடாதிபதி இளைய பீடாதிபதிக்கு உண்டு. அவ்வாறு எழாமல் அமர்ந்திருந்தது அவருக்கு சிறுமை சேர்த்திருக்கிறது.
ஏனென்றால் தமிழ் நாட்டில்தான் காஞ்சி சங்கரமடம் உள்ளது. தமிழ் மக்களின் பெருமைகளை சொல்லக்கூடிய மாண்புமிகு நிலைப்பாடுதான் தமிழ்த்தாய் வாழ்த்து. அதை உணர்ந்து இனிவரும் காலங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலையை தவிர்த்து தமிழுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இப்போது நடந்துவிட்ட இத்தகைய சூழல் சமய துறையில் இனிமேல் வரக் கூடாது என்று நாங்கள் கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காந்திய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் கூறும்போது: பொதுவாகவே காஞ்சி மடம் தமிழுக்கு எதிராகவே செயல்படக்கூடிய மடம் என்பதில் ஐயமே இல்லை. இவர்களுக்கு வட மொழி தான் உயர்ந்தது.
தமிழ் மொழி தாழ்ந்தது என்று நினைத்தாலும் இவர்களுக்கு ஒரு மேடை மரபு ஒன்று இருக்கிறது என்பது நினைவில் வந்தாக வேண்டும்.
மேடையில் இருக்க கூடியவர் ஏற்க மறுத்தாலும் விருப்பு வெறுப்புகளை கடந்து மேடை நாகரீகம் கருதியாவது எழுந்து நின்றிருக்க வேண்டும். அப்படி எழாமல் போனது தமிழை எந்த அளவுக்கு காஞ்சிமடம் புறக்கணிக்கிறது என்பதை தான் விளக்குகிறது.