விழுப்புரம் சம்பவத்தில் சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் குறிப்பிட்ட சமூகத்தை அவதூறு செய்யும் வகையில் ட்வீட்டரில் பதிவிட்டதாக நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக அமைப்பு ஒன்று காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது.

நடிகை கஸ்தூரி சர்ச்சைக்குரிய கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு அடிக்கடி பிரச்சினையில் சிக்கிக்கொள்பவர். கருத்து சொல்கிறேன் என்று அனைத்துப் பிரச்சினைகளிலும் எதையாவது பதிவு செய்து பரபரப்பை தேடிக்கொள்பவர்.

கடந்த மாதம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் ஆராயி மற்றும் அவரது மகள் தாக்கப்பட்டு, மகன் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சாதியக் கலவரமாக கூறப்பட்டது.

ஆனால் விசாரணை நடத்தியதில் அது சாதிய ரீதியான மோதல் அல்ல என்றும் பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்த வந்தபோது சமூக விரோதிகள் நடத்திய தாக்குதல் என்றும் தெரிய வந்தது.

ஆனால் நடிகை கஸ்தூரி ஒரு சமூகத்திற்கு எதிராக ”பாவிகளா கொன்னு புடிங்கினா மண்ணைத் தின்னவா முடியும், இந்த சம்பவங்களை பார்க்கும் போது பெண்ணாய் பதறுகிறேன், தாயாய் கதறுகிறேன், மண்ணுக்காக மனிதத்தை இழந்த சாதி வெறி நாய்களா” என்றெல்லாம் பதிவிட்டிருந்தார்.

பின்னர் மற்றொரு பதிவில் குறிப்பிட்ட சமூகத்திற்கு சவால் விடும் வகையில் கருத்துகளை பதிவு செய்திருந்தார். இதைக் கண்டித்து இது சாதிய மோதலைத் தூண்டுகிறது என்று நடிகை கஸ்தூரி மீது பிரிவு 153எ-ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சமூக நீதி சட்டப்பேரவை இயக்கம் சார்பில் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தனது ட்வீட்டர் பதிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி தான் அன்னியர்கள் என பதிவு செய்தது தவறுதலாக ஒரு எழுத்து மாறி பதிவாகி விட்டதாக குறிப்பிட்டு அந்த பதிவை நீக்குவதாக தெரிவித்து நீக்கியுள்ளார்.

பகிர்