The following is verbatim reproduced from Savukku

அரசியலே பேச மாட்டேன். ஸ்ட்ரெயிட்டா சிஎம் பதவிதான் என்று தீர்மானமாக அறிவித்திருந்த ரஜினிகாந்த் திங்களன்று நடந்த ஒரு விழாவில் மிகத் தீவிரமாக அரசியல் பேசியுள்ளார். ஆன்மீக அரசியல் என்றால் என்னவென்று விளக்கம் வேறு அளித்துள்ளார். ஆன்மீக அரசியல் என்றால் தூய்மை, உண்மை என்றும், எம்ஜிஆர் ஆட்சியை தன்னால் தர முடியும் என்றும் பேசியுள்ளார்.

இந்த வீர உரையை வெளிப்படுத்த ரஜினிகாந்த் தேர்ந்தெடுத்த இடம், டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகம். அந்த வளாகத்துக்கு சொந்தக்காரர், புதிய நீதிக் கட்சி என்ற கட்சியின் தலைவரான ஏசி.சண்முகம்.

ரஜினியின் உரையை அலசுவதற்கு முன்பாக, ஏசி.சண்முகத்தின் பின்புலத்தை பார்த்து விடுவோம். 1984ம் ஆண்டு, அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆனவர் ஏசி.சண்முகம். தீவிரமான ஆர்எம்.வீரப்பன் ஆதரவாளர். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, ஜானகி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு 13 நாட்கள் அந்த அரசாங்கம் நடந்தது. அது வரை, எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் கல்வி அமைச்சராக அரங்கநாயகம் இருந்தவரை அதிமுக பிரமுகர்களாக இருந்தாலும், பொறியியல் கல்லூரிகள் தொடங்க, பணம் கேட்டார் அரங்கநாயகம். இதனால் பலர் பொறியியல் கல்லூரிகள் தொடங்காமல் காலதாமதம் செய்து வந்தனர்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, 7 ஜனவரி 1988ம் ஆண்டு, தமிழகத்தின் முதல்வராக 30 ஜனவரி 1988 வரை, 23 நாட்கள் இருந்தார். அப்போது தனக்கு ஆதரவளித்த அதிமுக தலைவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று ஜானகி அளித்த சலுகைதான், யார் யாரெல்லாம் பொறியியல் கல்லூரிகள் தொடங்க வேண்டுமோ, அவர்கள் அத்தனை பேருக்கும் இலவசமாக அனுமதி என்று உத்தரவிட்டார். அப்போது பொறியியல் கல்லூரிகள் தொடங்கியவர்கள்தான், ஜேப்பியார், வேலூர் விஐடி தாளாளர் விஸ்வநாதன் ஆகியோர். அவர்களில் ஒருவர்தான் இன்று ரஜினியை பல்லக்கில் தூக்கும் ஏசி.சண்முகம்.

கோவில் நிலம், அரசு புறம்போக்கு, ஏரிப் புறம்போக்கு ஆகியவற்றை ஆக்ரமித்து கட்டப்பட்ட இடத்தில்தான் ரஜினி அரசியல் உரை நிகழ்த்தியுள்ளார்.

அரசு நில ஆவணங்களின்படி, முகப்பேர் கிராமத்துக்கு உட்பட்ட சர்வே எண்கள் 432/2, 435/1, 436, 442, ஆகிய ஓடை புறம்போக்கு, ஏரி உள்வாயில், ஆற்றுப் புறம்போக்கு, குளம் புறம்போக்கு ஆகிய நிலங்களை ஆக்ரமித்து கட்டிடம் கட்டியுள்ளார்.

2005ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் மழைநீர் வெள்ளத்தின்போதுதான், ஏசி.சண்முகம், ஆற்றின் குறுக்கே கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளை கட்டிய செய்தி வெளியுலகுக்கு தெரிய வந்தது. 03.12.2005 இரவு 11 மணிக்கு நுழைந்த மழைநீர், கூவம் ஆற்றின் வண்டல் மண்ணோடு வேகமாக வர, ஆற்றின் பாதைக்கு நடுவே கட்டிடம் இருந்ததால், அந்த கட்டிடத்தின் முதல் தளம் வரை மூழ்கடித்த வெள்ளம், அப்படியே திரும்பி, முகப்பேர் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. முகப்பேரில் வீடு கட்டியிருந்தோரின் வீட்டுக்குள் இடுப்பு உயரத்துக்கு கூவம் ஆற்றின் வண்டல் மண்.

திடீரென்று வெள்ளம் புகுந்ததால் காவல் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, காவல்துறையினர் களத்தில் இறங்கி 850 மாணவர்களை காப்பாற்றி, வேறு இடங்களில் தங்க வைத்தனர். இரண்டு நாட்கள் கழித்து ஆக்ரமிப்பு செய்திருந்த அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.

தொடக்க காலத்தில் பொறியியல் கல்லூரியாக தொடங்கிய ஏசி.சண்முகம், பின்னாளில், பல் மருத்துவம், உள்ளிட்ட மேலும் பல கல்லூரிகளை தொடங்கி, எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழகமாக பொறியியல் கல்லூரியை மாற்றினார். இந்த நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு இந்தியா முழுக்க ஏஜென்டுகள் உள்ளனர். பொறியியல் படிக்கும் மாணவர்களை ஏஜென்டுகளாக்கி, தங்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி, அங்கே புதிய மாணவர்களை கமிஷனுக்கு பிடித்து சேர்ப்பதுதான் இங்கே பயிலும் பல வட இந்திய மாணவர்களின் வேலையே. இதில் கொடுக்கல் வாங்கலில் தகராறு உருவாகி, அது 2010ம் ஆண்டு ஒரு கொலை வரை சென்றது இணைப்பு

இந்த கல்லூரியில் படிக்கும் வட இந்திய மாணவர்கள், மதுரவாயல் முழுக்க அறை எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். படிப்பு காலம் முடிந்த பிறகும், மதுரவாயல் பகுதியிலேயே ஏஜென்டுகளாக, புதிய மாணவர்களுக்கு வீடு பிடித்துத் தருதல், தேர்வில் பாஸாக குறுக்கு வழிகளை சொல்லித் தருதல் (நிகர்நிலை பல்கலைக்கழகம் என்பதால், தேர்வு, திருத்தல் அனைத்தும் கல்லூரி நிர்வாகத்தின் கீழ்தான்) ஆகிய வேலைகளில் இன்றும் ஈடுபட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சிறந்த கல்வி நிலையத்தில்தான் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை தொடங்கியுள்ளார்.

வன்னியர் சமூகத்தின் பலத்தில், ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கி, வலுவான அரசியல் செல்வாக்கை பெற்ற நாள் முதலாகவே, இதர சமுதாய தலைவர்களுக்கு ராமதாஸைப் போல ஆக வேண்டும் என்ற தணியாத ஆவல் உண்டு. அதன் ஒரு பகுதியாகத்தான், ஏசி.சண்முகம், செங்குந்தர்கள், வேளாளர்கள், பிள்ளைமார், அகமுடையர், உடையார் போன்ற வன்னியருக்கு எதிரான பார்ப்பனர்களுக்கு அடுத்த அடுக்கில் உள்ள சாதிகளை இணைத்து, புதிய நீதிக் கட்சி என்ற பெயரில் கட்சியை உருவாக்கி, 2001ம் ஆண்டு, திமுக கூட்டணியில் ஐந்து இடங்களை பெற்று சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் திமுகவோடு சேர்ந்து அவரும் மூழ்கினார்.

பிஜேபி வேட்பாளராக சிவி.சண்முகம்

பின்னர், 2014ம் ஆண்டு, பிஜேபி சார்பில் வேட்பாளராக வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார் ஏசி.சண்முகம். திமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தார் சண்முகம். தற்போது அவரது தணியாத ஆர்வமான அரசியல் அதிகாரம் என்பதை கைப்பற்ற, அவர் துடுப்புதான் ரஜினி.

திங்களன்று பேசிய ரஜினி எடுத்த உடனேயே சொன்ன விஷயம், டிஜிட்டல் பேனர்கள் வைக்கும் விவகாரத்தில் நாம் நீதிமன்ற தீர்ப்புகளை மீறியிருக்கிறோம். இனி ரசிகர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது என்றார். நல்ல விஷயம். வரவேற்கத்தக்க விஷயமே. மூன்று நாட்களுக்கு முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம், அனுமதியில்லாமல் வைக்கும் பேனர்கள் குறித்து கடுமையான கருத்துக்களை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதைப் பார்த்த ரஜினி மிக மிக எளிதாக தன் ரசிகர்களை பேனர்கள் வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கலாம்தானே ? ரஜினிக்கு இந்த விதி மீறல்களை குறிப்பிட்டு ட்விட்டரில் காலை முதல் தெரிவிக்க வேண்டுமா என்ன ?

அடுத்ததாக ரஜினி பேசியது

எம்.ஜி.ஆரின் ஆட்சி தான், .தி.மு.. ஆட்சி தான் நடக்கிறது. அவரது ஆட்சியில் ஊரெல்லாம் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆர் சினிமாத்துறையில் இருந்து வந்தவர். இதுதான் அவரது தாய்வீடு. அதுமட்டுமல்ல, இதயதெய்வம் என்றழைக்கப்படும் ஜெயலலிதாவும் சினிமாத்துறையில் இருந்து வந்தவர் தான். சினிமாத்துறையினரை அழைத்து எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடக்கும் என்று எதிர்பார்த்து இருந்தேன். நடக்கவில்லை,

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தி, அதில் தனது சாதனைகளை பறைசாற்றி, அதன் மூலம் எப்படி அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என்று எடப்பாடியும் பன்னீர்செல்வமும் துடியாகத் துடிக்கிறார்கள். அவர்கள், ரஜினியை அழைத்து விழா நடத்தியிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் ரஜினிக்கு அரசியலில் அரிச்சுவடி கூட தெரியவில்லை என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் எதற்காக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு திரை நட்சத்திரங்களை அழைக்க வேண்டும் ? வேண்டுமானால், எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இறுதி காலகட்டத்தில், சென்னையை அடுத்த போரூரில் பல ஏக்கர் மதிப்புள்ள நிலத்தை சகாய விலைக்கு, அம்பிகா, ராதா மற்றும் அவர்களின் தாயார் சரஸ்வதிக்கு எதற்காக எம்ஜிஆர் அளித்தார். அதை ஏஆர்எஸ் கார்டன் என்று பெயரிட்டு அவர்கள் கோடி கோடியாக சம்பாதிப்பதற்கு எதற்கு எம்ஜிஆர் உதவினார் என்ற பழைய வரலாறை தெரிந்து கொள்ள, அம்பிகா ராதா சகோதரிகளை அழைத்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

எம்.ஜி.ஆரை போல சினிமா உலகில் இருந்து இன்னொருவர் அரசியலுக்கு வரக்கூடாதுஎன்கிறார்கள். ‘பேண்ட்சர்ட் போட்டு மேக்கப் போட்டு கதாநாயகிகளுடன்டூயட்பாட நாங்கள் வரவில்லை. நீங்கள் ஏன் கரைவேட்டி கட்டி எங்கள் வேலைக்கு வருகிறீர்கள்?’ என்கிறார்கள்.

அய்யாநான் மற்றவர்களை பற்றி பேசவில்லை. என்னை பற்றி மட்டும் சொல்கிறேன். என் வேலையை நான் சரியாக செய்துகொண்டிருக்கிறேன், நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்யவில்லையே?

அதாவது அரசியல்வாதிகள் அவர்கள் வேலையை சரியாக செய்யவில்லையாம். அரசியல்வாதிகள் அவர்கள் வேலையை இப்போது மட்டுமல்ல. 1996க்கு பிறகு பல ஆண்டுகளாக செய்யாமல்தான் இருந்து வருகிறார்கள். அப்போதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார் ரஜினிகாந்த் ? 2001 அதிமுக ஆட்சியிலும், 2006 திமுக ஆட்சியிலும், 2011 அதிமுக ஆட்சியிலும் ஊழல் கொடிகட்டிப் பறந்தது. மக்கள் பணம் கோடி கோடியாக கொள்ளையடிக்கப்பட்டது. என்ன செய்து கொண்டிருந்தார் ரஜினி ?

2015ம் ஆண்டு, சென்னை நகரம் நள்ளிரவு வெள்ளத்தில் திடீரென்று பாதிக்கப்பட்டபோதும், அரசியல்வாதிகள் தங்கள் வேலைகளை சரியாகச் செய்யவில்லைதான். உலகெங்கும் இருந்த தமிழர்கள் சமூக வலைத்தளங்களின் மூலமாக இணைந்து, எப்படியாவது சென்னை நகரின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று துடியாகத் துடித்தார்கள். இவர்களில் பலர் உதவிகளை நேரடியாக செய்யவும் செய்தார்கள். அப்போது எங்கே போனார் இந்த திடீர் ஆபத்பாந்தவன் ?

1996-ல் இருந்து அரசியல் எனும் நீர் என் மீதும் பட்டுவிட்டது. அதனால் அரசியல் நெளிவு சுளிவுகளை தெரிந்துகொள்ள ஆரம்பித்து வந்தேன்.

கருணாநிதி, மூப்பனார், சோ ஆகியோருடன் பழகி நானும் கொஞ்சம் அரசியல் கற்று இருக்கிறேன். எங்கெங்கே தப்பு நடக்கிறது, அதை எப்படி தடுப்பது என்று எனக்கு தெரியும். எனக்கும், மக்களுக்கு செய்யவேண்டிய கடமை இருக்கிறது. எனவே தான் அரசியலுக்கு வருகிறேன்.

1996ல் தன் மீது அரசியல் நீர் பட்டு விட்டது என்கிறார் ரஜினி. அந்த அரசியல் நீர் எப்படி அவர் மீது பட்டது ?

1993ம் ஆண்டு, சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்தது. 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அதன் பின்னரும் பல்வேறு சம்பவங்கள் நடந்தன. ஆனால் ரஜினி எப்போது வாய் திறந்தார் ? குண்டு வெடித்து தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த இயக்குநர் மணி ரத்னத்தின் வீட்டு சுற்றுச்சுவருக்கு சேதமானபோதுதானே வாய் திறந்தார் ரஜினி ? ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் மனிதர்கள் இல்லையா ? எங்கே போயிற்று ரஜினியின் சமூக அக்கறை ?

எங்கெங்கே தப்பு நடக்கிறது. அதை எப்படி தடுப்பது என்று எனக்குத் தெரியும் என்கிறார் ரஜினி. மற்ற விவகாரங்களை விடுங்கள். அவர் சார்ந்த திரையுலகில் புழங்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கவோ, அல்லது குறைந்தபட்சம் குறைக்கவோ ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்துள்ளாரா ரஜினி ? குறைந்தபட்சம் இவர் கருப்புப் பணம் வாங்காமல் இருக்கிறாரா ? தப்பு எங்கெங்கே நடக்கிறது என்கிறாரே. குறைந்தபட்சம் இவர் குடும்பத்தில் நடக்கும் தவறுகளை சரி செய்தாரா ? கோச்சடையான் படத்தை ஆட் ப்யூரோ மற்றும் ஈராஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் ஒரே நேரத்தில் விற்பனை செய்த தவறையும், லதா ரஜினிகாந்த் மீது பெங்களுருவில் எப்ஐஆர் பதிவு செய்யும் வரை சென்றதையும், பின்னர், உச்சநீதிமன்றம் பணத்தை திருப்பிச் செலுத்த கெடு விதிக்கும் அளவுக்கு ரஜினி குடும்பத்தின் மோசடித்தனம் அம்பலமானதும் எங்கே நடந்தது, எப்படி நடந்தது என்பது ரஜினிக்கு தெரியாதா ?

நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னதும் என்னை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. வாழ்த்துகள் சொல்லவேண்டிய அவசியம் இல்லை, ஆனால் ஏன் ஏளனம் செய்கிறீர்கள்?

அரசியலுக்கு வந்தால், இன்றைய சமூக வலைத்தள காலத்தில், அனைவரையும் ஏளனம் செய்யத்தான் செய்வார்கள். குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்க மாட்டேன். பாராளுமன்றத் தேர்தல் குறித்து யோசிக்கலாம். நேரடியாக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவேன் என்று பேசும் நபரை ஏளனம் செய்யாமல் என்ன செய்வார்கள் ? கட்சியின் கொள்கை என்னவென்று கேட்டால் தலை சுற்றுகிறது என்று சொல்லும் நபரை ஏளனம் செய்யாமல் உச்சிமுகர்ந்து பாராட்டுவார்களா ?

எம்.ஜி.ஆரை போல ஒருவர் வருகிறேன் என்று சொன்னால் அவனை விட பைத்தியக்காரன் யாரும் இருக்கமுடியாது. ஆனால் அவர் தந்த நல்லாட்சி, ஏழை மக்களுக்கான ஆட்சி, சாமானிய மக்களுக்கான ஆட்சி, மத்தியஸ்த குடும்பத்தாருக்கான ஆட்சி என்னாலும் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

அமெரிக்க மாப்பிள்ளை, ஹீரோவின் நண்பன் போன்ற எந்த வேடமும் வேண்டாம். ஸ்ட்ரெயிட்டா ஹீரோதான் என்ற சினிமா வசனத்தைத்தான் ரஜினியின் இந்த பேச்சு நினைவுபடுத்துகிறது. எம்ஜிஆர், மிக மிக கவனமாக தனக்கான பிம்பத்தை கட்டமைத்தவர். ஏழைகளின் தோழனாக, பெண்களின் பாதுகாவலனாக, புரவலனாக தன் பிம்பத்தை திரைப்படங்களினூடே கட்டமைத்தவர். ஆனால், ரஜினி அது போன்ற எந்த முயற்சிகளையும் தன் திரைப்படங்களில் எடுத்ததில்லை.

மேலும், ஏறக்குறைய 15 ஆண்டு காலத்துக்கும் மேலாக, தான் சார்ந்திருந்த திமுக என்ற இயக்கத்தை வளர்க்க தன் திரைப்படங்களை பயன்படுத்தியவர் எம்ஜிஆர். தன் திரைப்படத்தினூடே அவ்வப்போது வரும் ஒன்றிரண்டு பன்ச் டயலாக்குகள் மற்றும் சில பாடல் வரிகளைத் தவிர்த்து, தன் அரசியல் பயணம் தொடர்பான எந்த முயற்சிகளையும் திரைப்படத்தில் கூட எடுத்ததில்லை ரஜினி. அந்த ஒன்றிரண்டு அரசியல் பன்ச் டயலாக்குகளைக் கூட, திரைப்படத்துக்கான விளம்பரமாக பயன்படுத்திக் கொண்டாரே தவிர, வேறு நோக்கத்துக்காக அல்ல.

இந்த நாள் வரை, கட்சி தொடங்கவில்லை. கட்சியை பதிவு செய்யவில்லை. ஆனால் அடிப்படையான இந்த இரண்டையும் செய்யாமலேயே நேரடியாக முதல்வர் பதவிக்குதான் செல்வேன் என்று பேசும் ரஜினியின் இந்த தன்மையை அகம்பாவம் என்று எடுத்துக் கொள்வதா… அல்லது அறியாமை என்று எடுத்துக் கொள்வதா ?

தான் நடித்த படங்களுக்கெல்லாம், தங்கள் பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து, தன்னை மிகப் பெரிய கோடீஸ்வரனாக உருவாக்கிய இந்த முட்டாள் தமிழ் மக்கள், தன்னை முதல்வர் பதவியிலும் நேரடியாக அமர வைக்கக் கூடியவர்கள் என்ற அகம்பாவமாகவே நான் பார்க்கிறேன். இப்படி அகம்பாவம் பிடித்தவர்களுக்கெல்லாம், தமிழக மக்கள் கடந்த காலத்தில் தகுந்த பாடத்தை கற்பித்திருக்கிறார்கள். ரஜினிக்கும் கற்பிப்பார்கள்.

ஆன்மிக அரசியல் என்ன என்று என்னிடம் கேட்கிறார்கள். உண்மையான, நேர்மையான, வெளிப்படையான, சாதிமத சார்பற்ற அறவழியில் நடப்பது தான் ஆன்மிக அரசியல் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். தூய்மை தான் ஆன்மிகம். எல்லா ஜீவன்களும் ஒன்றுதான். அனைத்துமே பரமாத்மா. இறை நம்பிக்கை இருப்பது தான் ஆன்மிக அரசியல்.

அப்போது திராவிடத்தில் இறை நம்பிக்கை, தூய்மை, நேர்மை, சாதிமத சார்பு கிடையாதா ? இனிமேல் தான் பார்க்க போகிறீர்கள், ஆன்மிக அரசியலை.

உண்மையான, நேர்மையான, வெளிப்படையான, சாதி மத சார்பற்ற, அறவழியில் நடப்பது ஆன்மீக அரசியல் என்கிறார் ரஜினிகாந்த். ரஜினி நடித்த பழைய படங்களை விட்டு விடுங்கள். கடைசியாக நடித்த கபாலி, வெளிவர உள்ள காலா, எந்திரன் 2.0 மற்றும் அடுத்து வர உள்ள சன் பிக்சர்ஸின் திரைப்படங்களில் ரஜினி பெற்ற ஊதியம் எவ்வளவு என்று வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா ? இது வரை கருப்புப் பணம் பெற்றது இல்லை என்று கூற ரஜினி தயாரா ? பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பிறகு, மோடியை வாயார புகழ்ந்த ரஜினி, இனி எனது திரைப்படத்துக்கான ஊதியம் அனைத்தையும் வெள்ளையில்தான் வாங்குவேன் என்று அறிவிக்கத் தயாரா ? இதுதான் உண்மையான, வெளிப்படையான அரசியலா ? தான் பெறும், பெற்றுக் கொண்டிருக்கும் திரைப்பட ஊதியத்தை வெளிப்படையாக அறிவிக்கத் தயாராக இல்லாத ரஜினி வெளிப்படையான அரசியலை நடத்தப் போகிறேன் என்று கூறுவது எப்படிப்பட்ட மோசடி ?

கர்நாடகக் கண்மணி ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது, வீரப்பன் கேட்ட 10 கோடி திரைத் துறையினரால் வசூல் செய்து கொடுக்கப்பட்டது. அதில் தனக்கு பங்கு இல்லை எனபதை ரஜினி உறுதியாக கூற முடியுமா ? அதில் கருணாநிதியும் பணம் பெற்றுள்ளார் என்று விசாரிக்க ஜெயலலிதா உத்தரவு போட்டபோது, ரஜினியிடம் பதிவு செய்த வாக்குமூலம், இன்னும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆவணங்களில் இருக்கிறது. இதுதான் வெளிப்படையான அரசியலா ?

கொள்கை பற்றி கேட்டால் தலை சுற்றுகிறது’, என்று நான் சொன்ன சிறிய விஷயத்தை பற்றி ஒரு பட்டிமன்றமே நடத்துகிறார்கள். 31-ந் தேதி நான் அரசியலுக்கு வருகிறேனா, இல்லையா? என்பதை தெரிவிப்பேன் என்றேன். ஆனால் 29-ந் தேதியேஉங்கள் கொள்கை என்ன?’ என்று கேட்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், ‘பொண்ணு பார்க்க போய்கிட்டு இருக்கும்போது, எனக்கு கல்யாணத்துக்கு பத்திரிகை வரவில்லையே?’ என்று கேட்பது போல இருக்கிறது.

பெரிய பெரிய அரசியல் தலைவர்களும், மேடையில் இதுபற்றி பேசி, கிண்டல் செய்தனர். மக்கள் முன்னால் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாக பேசவேண்டும். மேடையில் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே மக்களின் அறிவு திடீரென்று மேலோங்கும்.

22 வருடங்கள், அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று நாடகம் காட்டி வந்த ஒரு நபர் முதன் முதலாக அரசியல் அறிவிப்பை வெளியிட இருக்கிறார். அப்படி வெளியிடும்போது, குறைந்தபட்சம் இரண்டு தாள்களில் ஒரு உரையை எழுதி எடுத்து வர வேண்டாமா ? கூடவே இருக்கும் துக்ளக் ரமேஷை கேட்டால் கூட எழுதிக் கொடுத்திருப்பாரே.. மேடையில் ஏறி, மைக்கை பிடித்து, மனம் போன போக்கில், வாய்க்கு வந்ததை பேசியதுதானே கொள்கையை கேட்டால் தலை சுற்றியது என்று கூறுவது ? அலட்சியமும், திமிரும் என்பதை விட இதை வேறு எப்படி வர்ணிக்க முடியும் ? 29ம் தேதி அறிவிப்பு விட்டாராம். இரண்டு நாட்களில் கொள்கை என்ன என்று கேட்டதற்கு அப்படி பதில் சொன்னாராம். இதை விமர்சிக்கும் அரசியல் தலைவர்களுக்கு அறிவுரை வேறு. அதை விட கொடுமை, கொள்கை என்ன என்று கேட்டதற்கு பெண் பார்க்கச் செல்வதையும், திருமண பத்திரிக்கையையும் ஒப்பிட்டு அவர் சொன்ன உதாரணம். இப்படிப்பட்ட அரை கிறுக்கன்களெல்லாம் நமக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு தமிழகம் தாழ்ந்து விட்டதே என்பதை நினைத்தால்தான் வேதனையாக இருக்கிறது.

சரி இப்போது ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள்?, ஜெயலலிதா இருக்கும்போது ஏன் வரவில்லை?, பயமா? என்று கேட்டார்கள். 1996-ம் ஆண்டு நிலைமை எல்லோருக்கும் தெரியும். அப்போதே அவருக்கு (ஜெயலலிதா) எதிராக குரல் கொடுத்த எனக்கு, ஏன் வரப்போகிறது பயம்? அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மை தான். நல்ல தலைவனுக்கு, நல்ல தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது.

1996ல், தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் இருக்கிறது என்று பேசிய சிறிது காலத்தில் தேர்தல் வந்து விட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகள் ஜெயலலிதாவுக்கு பதவி இருந்திருந்தால் என்ன ஆயிருக்கும் என்பது ரஜினிக்கு நன்றாகத் தெரியும்.

ஹொகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, திரைத் துறையினர் நடத்திய போராட்டத்தில் பேசிய ரஜினி கன்னடர்களை உதைக்க வேண்டும் என்று பேசினார்.

தனது திரைப்படத்தின் ரிலீஸ் பாதிக்கப் போகிறது என்று தெரிய வந்ததும், கன்னடத்தில் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டாரா இல்லையா ? இதற்கு பெயர் பயமில்லையா ? இது கோழைத்தனம் இல்லையா ? கன்னனடரை உதைப்பேன் என்று சொல்லியிருக்கவும் வேண்டியதில்லை. கல்லா நிறையாது என்று தெரிந்ததும் மன்னிப்பு கேட்டிருக்கவும் வேண்டியதில்லை. உறுதிப்பிடிப்பு இல்லாத ஒரு அரைகுறை பேர்வழி என்றுதான் ரஜினியை பார்க்க வேண்டியுள்ளது.

அடுத்து. நல்ல தலைவனுக்கான வெற்றிடம் இருக்கிறது என்று யார் இவரிடம் சொன்னது ? இன்று அரசியல் களத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் கணிசமான ஆண்டு காலம் அரசியலில் உள்ளவர்கள். அவர்களில் கூடுதலோ, குறையோ யாரோ ஒருவரை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். யாராவது இவரிடம் வந்து எங்களுக்கு தலைவரே இல்லை என்று முறையிட்டார்களா என்ன ? தலைவனுக்கான வெற்றிடம் இருக்கிறது என்று பேசுவது ஆணவமான பேச்சு இல்லையா ?

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருவரும் இருந்தபோதே, 2005ம் ஆண்டு கட்சி தொடங்கி, கணிசமான வாக்குகளை பெற்று, 2011ம் ஆண்டு, ஜெயலலிதாவையே கூட்டணிக்காக பேச வைக்கும் அளவுக்கு வளர்ந்த விஜயகாந்துக்கு பயமில்லை என்று கூறலாம். ஜெயலலிதா இருந்தவரை வாலை, காலுக்கு நடுவே சொருகிக் கொண்டு ஓடிய ரஜினிக்கு பயமில்லை என்று எப்படி சொல்ல முடியும் ?

சக்தியும், திறமையும் வாய்ந்த 2 தலைவர்கள் இருந்தார்கள். ஜெயலலிதாவின் ஆளுமை பற்றி யாருமே கேள்விகேட்க முடியாது. அவரை போல எந்த தலைவரும் ஒரு கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் அப்படி வைக்கமுடியாது. அப்படி கட்டுப்பாட்டுடன் கட்சியை வைத்திருந்தார் ஜெயலலிதா. ஒரு தலைவர்.

அந்த பக்கம் கருணாநிதி. என் அருமை நண்பர், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லையென்றாலும் தன் கட்சியை அப்படி அக்கறையுடன் கட்டி காப்பாற்றினார். எத்தனை தலைவர்களை உருவாக்கிய கட்சி அது. பல மனஸ்தாபங்கள் இருந்தாலும் எப்படி அந்த கட்சி கட்டுப்பாட்டுடன் இருந்தது. அவர் இப்போது உடல்நிலை சரியில்லாமல் உள்ளார்.

கருணாநிதி. அவரை போன்ற ஒரு எழுத்தாளர், பேச்சாளர், அரசியல் ஞானி, ராஜதந்திரி இந்தியாவிலேயே கிடையாது.

அவரை 13 ஆண்டுகள் கோட்டைக்கு வந்து முதல்அமைச்சர் நாற்காலி பக்கமே திரும்பி பார்க்காமல் வைத்தவர் எம்.ஜி.ஆர்., இது என்ன சாதாரண சாதனையா?

கிராமப்புரங்களில் பிரம்புக்கு வலிக்காமல் பாம்பை அடிப்பது என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இதுதான் அதற்கு உதாரணம். கட்சியை கட்டுப்பாடாக வைத்திருந்தார் ஜெயலலிதா. பதவியில்லாவிட்டாலும் கட்சியை காப்பாற்றினார் கருணாநிதி. கருணாநிதியை 13 ஆண்டுகள் கோட்டை பக்கமே திரும்ப விடாமல் வைத்திருந்தார் எம்ஜிஆர்.

கடந்த 49 ஆண்டுகளாக தமிழகத்தை மேற்கூறிய மூன்று பேரும்தான் மாற்றி மாற்றி ஆண்டு கொண்டிருந்திருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேருமே நல்லவர்கள் என்றால், தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுப் போனதற்கு யார் காரணம் ? அதற்கு முன்னால் இருந்த பக்தவச்சலமா ? அதற்கு முன்னால் இருந்த காமராஜா ? அவருக்கு முன்னால் இருந்த குமாரசாமி ராஜாவா ? ஓ.பி.ராமசாமி ரெட்டியாரா ? ஆந்திர கேசரி பிரகாசமா ?

யாரை ஏமாற்றப் பார்க்கிறார் ரஜினிகாந்த். தமிழகத்தை பெரும்பாலான ஆண்டு காலம் ஆண்ட மூன்று முக்கிய தலைவர்களையும் நல்லவர்கள் என்று கூறும் ரஜினி, யாரால் சிஸ்டம் கெட்டது என்று கூற வேண்டுமா வேண்டாமா ?

சிஸ்டத்தை சரி செய்வதற்கு ரஜினி என்ன செய்திருக்கிறார் என்று பார்ப்போம்.

1984-ம் ஆண்டு ராகவேந்திரா திருமண மண்டபம் கட்டிக்கொண்டிருந்தபோது, விதிமுறை மீறல் இல்லாததால் ஒப்புதல் கிடைத்துவிடும் என்று முதல் தளம் வேலை நடந்தபோது, திடீரென்று ஒப்புதல் கொடுக்காமல் பணியை நிறுத்திவிட்டார்கள். ஒரு நபர் வந்து, அவர் பெயரை குறிப்பிட விரும்பவில்லை, சில விதிமுறை மீறல் இருக்கிறது என்று கூறி, கட்டுமான பணி தொடர்பான கோப்பை மேலே செல்ல விடாமல் தடுக்கின்றனர். என்னுடைய ஆட்களை என்னவென்று பாருங்கள் என்று கூறினேன். ஆனால் அவர்களை சந்திப்பதற்கு அனுமதியே கொடுக்கவில்லை. அதன் பின்னர் நானே சென்றேன். எனக்கும் சந்திப்பதற்கு நேரம் கொடுக்கவில்லை. 6 மாதம் 7 மாதம் ஆகியது, மழைக்காலம் வந்துகொண்டிருக்கிறது, அதற்கு பின்னர் எனது நண்பர்கள் இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது என்று சொன்னார்கள்.

நீங்கள் முதல்அமைச்சரை சென்று பார்த்துவிடுங்கள் என்று கூறினார்கள். எனக்கு ஒரு தயக்கம். யாரிடமும் கேட்டு பழக்கமே இல்லை. நியாயமாகவும் இருக்கிறது, அதற்கு பின்னர் வேறு வழியில்லாமல் அப்போது நான் மும்பையில் இருந்தேன், நான் போன் செய்து முதல்அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டேன். மறுநாளே எனக்கு நேரம் ஒதுக்கி கொடுத்துவிட்டார்கள்.

விமானத்தை பிடித்து, காலையில் வந்து ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை சந்தித்து பேசினேன். அப்போது என்னை எப்படி இருக்கிறீர்கள்?, என்ன சமாச்சாரம், என்ன பிரச்சினை? என்று கேட்டார். அப்போது அவரிடம் கோடம்பாக்கத்தில் ஒரு மண்டபம் கட்டிக்கொண்டு இருக்கிறேன். அதுக்கு வந்து ஒரு நபர் இந்த மாதிரி பிரச்சினை செய்துகொண்டிருக்கிறார் என்று கூறினேன். எல்லாமே சரியாக இருக்கும்போது, என்ன பிரச்சினை? நீங்கள் நாளைக்கு வாங்கள் என்று கூறினார். மும்பையில் இருந்தா வருகிறீர்கள்? எத்தனை நாள் படப்பிடிப்பு? அதற்காக இங்கு விமானத்தை பிடித்து வந்தீர்கள்? நீங்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு எனக்கு போன் செய்யுங்கள் என்று கூறினார். படப்பிடிப்பு முடித்துவிட்டு வந்து நான் போன் செய்தேன். மறுநாள் மாலையிலேயே சந்திக்க நேரம் கொடுத்தார்.

நான் சென்றேன், 6 மாதமாக கேட்டுக்கொண்டிருந்த நபர் அங்கு கை கட்டிக்கொண்டு இருக்கிறார். யார் தெரியுமா? என்று எம்.ஜி.ஆர். அவரிடம் கேட்டார். அதற்கு அந்த நபர் தெரியும்னே என்று கூறினார். இந்த காலத்தில் நடிகர்கள் பணம் சம்பாதிப்பதே கஷ்டம். ஒரு தம்பி பணம் சம்பாதித்து, அதை காப்பாற்றுவது இன்னும் கஷ்டம். ஒரு நல்ல காரியம் செய்கிறான், அதுக்கு தொல்லை கொடுக்கலாமா? உடனே என்ன இருக்கிறதோ, அதை பார்த்து சரிசெய்யுங்கள், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த திருநாவுக்கரசருக்கு போன் போடுங்கள் என்று கூறினார்.

உடனே எம்.எம்.டி.. பாஸ் செய்யுங்கள் என்று கூறினார். 3 நாட்களிலேயே எம்.எம்.டி..யில் இருந்து தடையில்லா சான்று வந்தது. ராகவேந்திரா மண்டபத்தை கட்டுவதற்கு காரணமே எம்.ஜி.ஆர். தான்.

ரஜினி பேசியதை நன்றாக கவனியுங்கள். 1984ம் ஆண்டு ராகவேந்திரா மண்டபம் கட்டுகிறார். எல்லாம் சரியாக இருக்கிறது என்று முதல் தளம் வரை கட்டிட வேலையை செய்து கொண்டிருக்கிறார். திடீரென்று அனுமதி மறுக்கப்படுகிறது. எம்ஜிஆரை அணுகுகிறார். எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட அதிகாரியை நேரில் அழைத்து மிரட்டி, அனுமதி பெற்றுத் தருகிறார்.

இது சிஸ்டத்தை மதிக்கும் ஒரு நபர் செய்யும் செயலா ? இந்த முறையைத்தான் எம்ஜிஆர் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு போதிக்கிறாரா ரஜினிகாந்த் ? இப்படித்தானே ஒவ்வொரு அயோக்கியனும் தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக சிஸ்டத்தை வளைக்கிறான் ?

ரஜினி சூப்பர் ஸ்டாராக இல்லாவிட்டால், எம்ஜிஆர் இதை செய்து கொடுத்திருப்பாரா ?

சிஸ்டத்தை நம்பும் நபர் என்ன செய்திருக்க வேண்டும் ? அனுமதி கிடைக்கவில்லை என்றவுடன் மேல்முறையீடு செய்ய வேண்டும். அப்போதும் அனுமதி கிடைக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை அல்லவா அணுகியிருக்க வேண்டும் ? இதுதான் சிஸ்டத்தை மதிக்கும் லட்சணமா ?

கோச்சடையான் திரைப்படத்தை இரண்டு நிறுவனங்களுக்கு லதா ரஜினிகாந்த் விற்றதால் ஏமாற்றப்பட்ட ஆட் ப்யூரோ நிறுவனத்தினர் சிஸ்டத்தை நம்பி நீதிமன்றத்தை அணுகாமல், 10 கோடியை வசூல் செய்து தருமாறு அன்புச்செழியனை அணுகி, அவர், ரஜினியின் மகள்களை தூக்கிச் சென்றிருந்தால், அதை ரஜினிகாந்த் ஏற்றுக் கொள்வாரா ? இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கத்தானே சிஸ்டம் என்ற ஒன்று ஜனநாயகத்தில் இருக்கிறது ? அதை நம்பாமல், குறுக்கு வழியில் எம்ஜிஆரை அணுகி, அதன் மூலம், அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு அனுமதி பெற்று ரஜினிகாந்த் சிஸ்டத்தை குறை சொல்லலாமா ? என்ன தகுதி இருக்கிறது அவருக்கு ?

மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசிப் பழக வேண்டும். அனைத்து படிப்புகளும் ஆங்கிலத்தில் இருப்பதால் இம்மொழி அவசியம். ஆங்கிலம் பேசப் பேசத்தான் வரும். ஆங்கிலம் கற்றுக் கொண்டால்தான் தொழிலில் முன்னேற முடியும். தமிழன் தமிழில் பேசினால் மட்டும் தமிழ் வளராது. தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும்.

தமிழன் தமிழில் பேசினால் தமிழ் வளராதாம். தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளருமாம். தமிழிலேயே பேசாமல், ஆங்கிலத்தில் மாவர்கள் பேசத் தொடங்கினால் கொஞ்ச நாளில் தமிழ் செத்து விடாதா ? தமிழர்களும், தமிழகத் தலைவர்களும் கேட்பதே இரு மொழிக் கொள்கைதானே ? அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதே, இந்தித் திணிப்புக்கும், கட்டாய இந்திக்கும்தானே ? இது வரை எந்தத் தலைவராவது தமிழகத்தில் ஆங்கிலம் கற்காதீர்கள் என்று கூறியிருக்கிறார்களா என்ன ?

மொழி, மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு என்று எதைப் பற்றியுமே புரிதல் இல்லாத ஒரு அரைவேக்காட்டு நடிகன் என்பதை மீண்டும் மீண்டும் ரஜினி நிரூபித்துக் கொண்டிருக்கிறார். மேடைப் பேச்சை எப்படிப் பேச வேண்டும் என்று தமிழகத் தலைவர்களுக்கு வகுப்பெடுக்கும் ரஜினிகாந்த், வெறும் கைத்தட்டலுக்காக, மனம் போன போக்கில், உளறத் தயங்க மாட்டார் என்பதையே ரஜினியின் நேற்றைய அரசியல் உரை உணர்த்துகிறது.

எம்ஜிஆரைப் பற்றி ஆகா, ஓகோ என்று புகழ்ந்து தள்ளினார் ரஜினி. அவரைப் போல வருமா. சைக்கிளில் டபுள்ஸில் போனால் காவல்துறையினர் பிடிக்கிறார்கள் என்பதால், இருவர் செல்லலாம் என்று அனுமதி அளித்தார் என்று எம்ஜிஆரின் அளப்பறிய சாதனையாக குறிப்பிட்டார்.

திரைப்படத்தில் கிழவிகளை கட்டிப் பிடிப்பது, மது அருந்தாமல் இருப்பது என்பதையெல்லாம் கடந்து எம்ஜிஆருக்கு ஒரு மோசமான குணம் உண்டு. அவர் ஒரு மோசமான சாடிஸ்ட் என்பதே அது.

எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு செய்தையெல்லாம் பொது வெளியில் எழுத இயலாது. மற்றொரு சம்பவத்தை குறிப்பிட்டு, எம்ஜிஆரின் சாடிசத்தை உங்களுக்கு உணர்த்த முயற்சிக்கிறேன்.

திருச்செந்தூரில் முருகனின் தங்க வேல் காணாமல் போய் விட்டது என்று எதிர்க்கட்சியில் இருந்த கருணாநிதி பிரச்சினை எழுப்பினார். அந்த விவகாரத்தை விசாரிக்க, சுப்ரமணியப் பிள்ளை என்ற அறநிலையத் துறை அதிகாரியை நியமித்தார் எம்ஜிஆர். அந்த அதிகாரி விசாரித்துக் கொண்டிருந்தபோதே, திருநெல்வேலி அரசினர் விருந்தினர் மாளிகையில் 26 நவம்பர் 1980 அன்று தூக்கில் தொங்கினார்.

அதை விசாரிக்க நீதிபதி ஜேசிஆர் பால் என்பவர் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை அரசுக்கு எதிராக இருந்ததால், அந்த அறிக்கையை வாங்கிய எம்ஜிஆர் அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்யவேயில்லை.

திடீரென்று ஒரு நாள் பத்திரிக்கையாளர்களை அழைத்த கருணாநிதி, நீதிபதி பால் கமிஷனின் அறிக்கையின் நகலை வெளியிட்டார். எம்ஜிஆர் அதிர்ந்து போனார். பின்னர் ஒரு நாள் அப்போது ஐஜியாக இருந்த கி.ராதாகிருஷ்ணன் என்ற கிராகியை அழைத்து, கருணாநிதியை கைது பண்ணுங்கள் என்று உத்தரவிடுகிறார். கிராகி, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், கலவரம் உருவாகும் என்று கூறுகிறார்.

உடனே எம்ஜிஆர், கருணாநிதியை கைது செய்தாயிற்று. நீங்கள் சட்டம் ஒழுங்கை மட்டும் பாருங்கள் என்று அனுப்பி விடுகிறார். சிறைக்கு சென்ற கருணாநிதியை பார்க்க வந்த, திமுக மூத்த தலைவர்கள், தமிழகம் பற்றி எரிகிறது. எங்கே பார்த்தாலும் கலவரம். பேருந்துகள் ஓடவில்லை என்று அள்ளி விடுகின்றனர். கருணாநிதியும் குஷியாக இருக்கிறார்.

அப்போதெல்லாம் விசாரணை கைதிகளுக்கும் சிறை யூனிபார்ம்தான். அதுவும் கட்டம் போட்ட அரைக்கால் டவுசர். எம்ஜிஆருக்கு கருணாநிதியை சிறை உடையில் பார்க்க வேண்டும் என்று ஆசை.

திடீரென்று பத்திரிக்கையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் அழைக்கப்படுகின்றனர். பத்திரிக்கையாளர்கள் சிறைக்கு வெளியேயே நிறுத்தப்பட்டு புகைப்படக் கலைஞர்கள் மட்டும் உள்ளே அனுப்பப்படுகின்றனர். புகைப்படக் கலைஞர்களைக் கண்ட கருணாநிதியும் மிகுந்த மகிழ்ச்சியோடு, பல விதமாக போஸ் கொடுக்கிறார்.

புகைப்படக் கலைஞர்கள் வெளியே வந்ததும் சிறை வாயிலின் இரு புறமும் இருந்த உளவுத் துறை அதிகாரிகள், ஒவ்வொருவரின் கேமராவையும் பிடுங்கி, பிலிம் ரோலை கழற்றி விட்டு, பாக்கெட்டில் ஒவ்வொருவருக்கும் 100 ரூபாயை வைத்து அனுப்பி விடுகின்றனர்.

அந்த புகைப்படங்கள் அனைத்தையும், பெரிய சைஸில் டெவலப் செய்து, இரண்டு மணி நேரம் அனைத்து புகைப்படங்களையும் பார்த்த பின்னர், அந்த புகைப்படங்களை அழிக்கச் சொன்னார் எம்ஜிஆர். இந்த சம்பவம் ஒரு சிறு உதாரணமே. இது போல பல சம்பவங்கள் உள்ளன.

குறிப்பாக தமிழகம் முழுக்க சாராய ஆலைகள் உருவாவதற்கு முக்கிய காரணமே எம்ஜிஆர்தான். சாராய ஆலை லைசென்ஸ் வாங்குவதற்கு, எம்ஜிஆரின் சகோதரர் சக்ரபாணிக்கும், அவர் மகன்கள் எம்ஜிசி.சுகுமாறன் மற்றும் எம்ஜிசி பாலன் ஆகியோருக்கும் 10.75 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் என்று புகார் எழுந்தது. அதற்காக நீதிபதி ராமபிரசாத ராவ் தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த விசாரணையை அமுக்கினார் எம்ஜிஆர்.

எம்ஜிஆரின் கோமாளித்தனம் மற்றும் தமிழகத்தை சீரழித்தது தொடர்பாக தனியாக கட்டுரையே எழுதலாம். அந்த அளவு ஒரு மோசமான கோமாளிதான் எம்ஜிஆர். அந்த எம்ஜிஆரை வானளாவ புகழ்வதன் மூலம், எம்ஜிஆருக்கு அடுத்த வாரிசாக வந்து விடலாம் என்று மனக் கணக்கு போடுகிறார் ரஜினி.

ரஜினியின் நேற்றைய உரை குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மணி “அரசியம் அமைப்புச் சட்டம், அரசியல் சாசனம் என்பதன் அடிப்படை குறித்து துளி அறிவும் இல்லாத நபர் பேசியது போலத்தான் இருந்தது நேற்றைய ரஜினியின் பேச்சு. ரஜினி பேச்சில் “நான் செய்கிறேன், செய்யப் போகிறேன், நான் செய்வேன், எனது அரசு” என்று பேசுகிறார். மன்னர் காலத்தில் வாழும் ஒரு நபர்தான் இப்படிப் பேச முடியும். எனது கட்சி, எனது அமைப்பு இதை செய்யும் என்று ஒரு வார்த்தை கூட ரஜினி பேசவில்லை. சினிமாவில் 100 பேரை பந்தாடுவது போலவே, தன்னந்தனியாக எல்லாவற்றையும் செய்து முடிப்பவர் போலவே பேசினார்

சுதந்திர இந்தியா இது வரை அடைந்த முன்னேற்றங்கள் எதுவுமே ஒரு தனி நபருக்கு சொந்தமானதல்ல என்பதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும்.

22 ஆண்டு காலமாக போக்குக் காட்டிக் கொண்டிருந்த ரஜினி, இனி அரசியலில் முழுமையாக இறங்கப் போகிறேன் என்பதை உறுதியாக அறிவித்து விட்டார். ரஜினியின் அரசியல் செயல்பாடுகள் அடிப்படை அரிச்சுவடி கூட தெரியாத ஒரு அரசியல் கோமாளியின் செயல்பாடுகளாகவே எனக்குத் தெரிகிறது.

ரஜினி போன்ற நபரை, தமிழகத்தின் அரசியல் வரைபடத்திலிருந்து முழுமையாக அகற்ற வேண்டியது, சிவில் சமூகத்தின் முன் உள்ள அவசியமான கடமை. அதை அச்சமூகம் செய்யத் தவறுமேயானால், அதற்கான மிக மிக மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்றார்.

ரஜினியின் எம்ஜிஆர் கல்லூரி உரை, விபரமறிந்த, அரசியல் அறிவு உள்ள பெரும்பாலானோரிடையே இதே உணர்வுகளைத்தான் தோற்றுவித்திருக்கிறது. இப்படிப்பட்ட கோமாளிக்கு வரும் அரசியல் மற்றும் அதிகார ஆசை என்பது, பாரதூரமான விளைவுகளை மாநிலத்துக்கு ஏற்படுத்தும் என்று பலர் கருதுகின்றனர்.

மூத்த பத்திரிக்கையாளர் ஆர்கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “நன்றாக தயாரிப்பு செய்யப்பட்ட திரைப்படத்தின் வசனத்தைப் போலதான் நேற்றைய ரஜினி உரை இருந்தது. மக்களின் மனதைத் தொடும் பல விஷயங்களை ரஜினி பேசினார். அவரிடம் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு நேற்று ரஜினி விடையளித்தார்.

ஆனால், நேரடியான சவால்கள் வருகையில் அவர் அதை எப்படி எதிர்கொள்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக, காவிரி விவகாரம் அனைத்து அரசியல் கட்சிகளின் அஜெண்டாவை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கவனமாக காவிரி விவகாரத்தை தொடாமல் அவர் தவிர்த்தது, அவரின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது” என்றார்.

திரைப்பட வசனம் போல திறமையாக பேசி, பலரையும் கவர்ந்து ஆட்சிக் கட்டிலில் ஏறலாம் என்று ரஜினி நினைப்பாரேயானால், அவர் பகல் கனவுதான் காண்கிறார்.

ரஜினி பல ஆங்கில இலக்கியங்களை படித்து கற்றறிந்திருக்கக் கூடும். எனக்குத் தெரிந்த தமிழின் சிறந்த இலக்கியத்தில், ரஜினியின் நேற்றைய உரை குறித்து வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி யெனல்.

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.<

பகிர்