பெரியார் சிலையை அப்புறப்படுத்துவோம் என சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு ஜெ.தீபா கண்டனம் தெரிவித்துள்ளார்.

திரிபுராவில் மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, பாஜக பதவி ஏற்கிறது. பதவி ஏற்பதற்கு முன்பே வன்முறையை துவக்கி விட்ட பாஜகவினர் அங்குள்ள லெனின் சிலையை புல்டோசர் மூலம் தகர்த்தனர். இதை கோடிட்டு காட்டிய ஹெச்.ராஜா நேற்று லெனின் சிலை, நாளை தமிழகத்தில் பெரியார் சிலை என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இதை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைத் தலைவர் ஜெ.தீபாவும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது கண்டனத்தை ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார். ”அந்த பதிவில் பெரியார் மண்ணிலிருந்து பெரியார் சிலையை அகற்றிவிட முடியுமா? வெறும் சிலை இல்லை, சிங்கம் அவர். சிலையை தொட்டால் ஏற்படும் நிகழ்வுகள் நினைத்துப் பார்க்க முடியாதவை.

இந்திய அளவில் திராவிடம் காத்த ஜெயலலிதாவின் வாரிசு நான் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்.” இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.

பகுத்தறிவு பேசும் கமல்ஹாசன், தலைவர் இல்லாத இடத்தை நிரப்ப வந்த ரஜினிகாந்த், பெரியார் பெயரில் விருது வழங்கும் தமிழக அரசின் முதல்வர் அமைச்சர்கள், விருது பெற்ற வளர்மதி போன்றோர் கருத்து தெரிவிக்காமல் இருக்கையில் ஜெ.தீபாவின் ட்விட்டர் பதிவுக்கு வாசகர்கள் பலரும் பதிலளித்துள்ளனர்.

தீபாவுக்கு இருக்கும் அக்கறையும், பொறுப்பும் கூட ஆளுங்கட்சிக்கு இல்லையே என்று கேட்டுள்ளனர்.

பகிர்