ராகவேந்திரா திருமண மண்டபம் கட்டுவதில் தனது நண்பருக்கும், ரஜினிக்கும் இடையே பிரச்சினை வந்தபோது, ரஜினிக்குத்தான் எம்ஜிஆர் உதவினார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சென்னை தனியார் நிகர்நிலை பல்கலை வளாகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த் தனக்கு எம்ஜிஆர் தனிப்பட்ட முறையில் செய்த உதவிகளைப் பட்டியலிட்டார். அப்போது அவர், ”1984-ல் ராகவேந்திரா திருமண மண்டபம் கட்டுவதற்கு தடையில்லாச் சான்று கேட்டிருந்தேன். அஸ்திவாரம் போட்டு முதல் தளம் வரையில் வேலை நடந்துகொண்டிருந்தபோது, ஒரு நபர் வந்து வேலையை நிறுத்திவிட்டார். என்ன பிரச்சினை என்று பேச அழைத்தபோது, என்னைச் சந்திக்கவே மறுத்துவிட்டார். நானே போனபோதும், எனக்கு அப்பாயின்மென்டே கொடுக்கவும் மறுத்துவிட்டார்.

அப்போது எனது நண்பர்கள் சொன்னார்கள், ‘இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழிதான் இருக்கிறது. நீங்களே போய் முதல்வரைப் பார்த்திடுங்க’ என்றனர். வேறு வழியில்லாமல் நான் முதல்வர் எம்ஜிஆரிடம் அப்பாயின்மென்ட் கேட்டேன். மறுநாளே கொடுத்துவிட்டார். என்ன பிரச்சினை என்று கேட்டார். ‘இந்த மாதிரி கோடம்பாக்கத்தில் ஒரு மண்டபம் கட்டிக்கிட்டு இருக்கேன்’ என்றேன். ‘எல்லாம் சரியாக இருக்கிறதுல்ல பிறகென்ன பிரச்சினை? நாளைக்கு வாங்க’ என்றார். ‘இல்ல நான் மும்பையில 10 நாள் ஷூட்டிங்கல இருக்கேன். இதற்காகத்தான் சென்னை வந்தேன்’ என்று சொன்னதும், ‘ஷூட்டிங் எல்லாம் முடித்துவிட்டு போன் பேசுங்க’ என்றார்.

அதேபோல வேலையை முடித்துவிட்டு சென்னை வந்து போனில் பேசினேன். மறுநாளே அப்பாயின்மென்ட் கொடுத்தாங்க. நான் எம்ஜிஆர் வீட்டுக்குப் போனேன். 6 மாசமாக தேடிக்கிட்டு இருந்த ஆளு, அங்கே கைய கட்டிக்கிட்டு உட்கார்ந்திருந்தார். ‘இது யாரு தெரியுமா?’ என்று எம்ஜிஆர் அந்த நபரிடம் கேட்டார். ‘தெரியும்ணே’ என்றார் அவர். ‘இந்தக் காலத்துல நடிகர்கள் பணம் சம்பாதிக்கிறதே கஷ்டம், அதை காப்பாத்துறது இன்னும் கஷ்டம். தம்பி ஒரு நல்ல காரியம் பண்றாரு. அதுக்கு வந்து தொல்லை கொடுக்கலாமா?’ என்றார். அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த திருநாவுக்கரசருக்குப் போன் போடச் சொன்ன எம்ஜிஆர், ‘உடனே என்.ஓ.சிக்கு ஏற்பாடு செய்யுங்க’ என்றார். 3 நாளில் என்ஓசி (தடையில்லாச் சான்று வந்துவிட்டது). எனது ராகவேந்திரா மண்டபம் கட்ட காரணமே எம்ஜிஆர்தாங்க. இதில் ஊடகங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் திருநாவுக்கரசர் இருக்கிறார். அவரைக் கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க” என்று பேசினார் ரஜினி.

விழாவில் ரஜினி சொல்வது உண்மை தானா? என்று அன்றைய அதிமுக அமைச்சரும், தற்போதைய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திருநாவுக்கரசரைத் தொடர்பு கொண்டு பேசினோம். ”அவர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். ராகவேந்திரா திருமண மண்டபம் கட்டுவதற்கு கட்டிட அனுமதி கேட்டு ரஜினிகாந்த் சார்பில் மனு செய்யப்பட்டிருந்தது. அதே இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு இன்னொரு தொழில் அதிபரும் மனு செய்திருந்தார். ஒரே இடத்துக்கு இருவர் இடையே பிரச்சினை இருந்தது. அந்தத் தொழில் அதிபர் முதல்வர் எம்ஜிஆருக்கு வேண்டியவர்தான். ரஜினியும் பெயர் சொல்லவில்லை. நானும் அவரது பெயரைச் சொல்ல விரும்பவில்லை.

பிரச்சினை அந்தத் துறை அமைச்சரான எனது கவனத்துக்கு வந்தது. உடனே நான் அதை முதல்வர் எம்ஜிஆரின் கவனத்துக்குக் கொண்டு போனேன். ரஜினியிடமும், ‘நீங்க எம்ஜிஆரிடம் பேசுங்க’ என்று சொன்னேன். அவரது மற்ற நண்பர்களும் அதையே சொல்லியிருக்காங்க. இதைத் தொடர்ந்து ரஜினி, எம்ஜிஆரிடம் பேச, ஒரு குறிப்பிட்ட நாளைச் சொல்லி அன்றைய காலை டிபனுக்கு வீட்டுக்கு வாங்க என்று ரஜினியை கூப்பிட்டார் எம்ஜிஆர். அங்கே ரஜினியையும், அந்தத் தொழில் அதிபரையும் உட்கார வைத்து சமரசம் செய்த எம்ஜிஆர், ‘என்ன செய்யலாம்?’ என்று என்னிடமும் கருத்து கேட்டார். ‘தொழில் அதிபர் இந்த பிரச்சினை இல்லையென்றால் இன்னொரு பிரச்சினைக்கு உதவி கேட்டு நம்மிடம் வரத்தான் செய்வார். அவரை அப்போது பார்த்துக் கொள்ளலாம். ரஜினி பக்கம் நியாயம் இருப்பதுபோல் தெரிகிறது. எனவே, அவருக்கே அனுமதி கொடுத்துவிடலாம்’ என்று சொன்னேன். எம்ஜிஆரின் கருத்தும் அதுவாகத்தான் இருந்தது.

எனவே, அவர் சொன்னபடி ரஜினிக்கு கட்டிடம் கட்ட அனுமதி அளித்து அதற்கான ஆணை வழங்கப்பட்டது. அந்த உண்மைச் சம்பவத்தைத்தான் நண்பர் ரஜினிகாந்த் விழாவில் குறிப்பிட்டுள்ளார். விழாவில் அவர் எம்ஜிஆரைப் பாராட்டி பேசியதும், அவர் தொடர்பான நல்ல நினைவுகளை பகிர்ந்துகொண்டதும், ரஜினிகாந்தின் நன்றி உணர்ச்சியையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது” என்றார் திருநாவுக்கரசர்.

”ரஜினியின் திருமணத்துக்கு அவரது மனைவி லதாவின் குடும்பத்தினர் சம்மதிக்க மறுத்தபோது எம்ஜிஆர் உதவினார் என்று ரஜினி சொல்லியிருப்பது உண்மையா?” என்று கேட்டோம்.

”அது குறித்து எனக்குத் தெரியாது. ரஜினியின் திருமண வரவேற்பு சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் நடைபெற்றபோது, தமிழக அரசின் சார்பில் தொழில்துறை அமைச்சராக இருந்த நான் கலந்துகொண்டேன். நான் மணமக்களை வாழ்த்திய புகைப்படம் மறுநாள் நாளிதழ்களில் முதல் பக்கத்தில் வந்திருந்தது” என்றார் திருநாவுக்கரசர்.

”எம்ஜிஆரைப் போல நல்லாட்சியைத் தர தன்னால் முடியும் என்று ரஜினி சொல்லியிருக்கிறாரே, அதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டபோது, ”ஒரு கட்சியை ஆரம்பிக்கிறார் ரஜினி. அப்போது, தன்னாலும் எம்ஜிஆர் போல நல்லாட்சி தர முடியும் என்று தன் விருப்பத்தை, நம்பிக்கையை அவர் சொல்லியிருக்கிறார். தருவாரா தர மாட்டாரா என்பதை இப்போதே எப்படிச் சொல்ல முடியும். பார்க்கலாம்” என்றார் திருநாவுக்கரசர்.

பகிர்