ஹெல்மெட் போடாத தம்பதியை போலீஸார் எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணிப் பெண் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் திருச்சி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கர்ப்பிணி பலி
திருச்சி மாவட்டம் முழுவதும் போலீஸார் வாகனச் சோதனை என்கிற பெயரில் பொதுமக்களுக்குத் தொந்தரவுகள் தருவதாகக்  குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி  திருவெறும்பூர்  கணேஷா  ரவுண்டானா  பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதிகளை வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் கையைக் காட்டி நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஹெல்மெட் போடாமல் சென்ற அவர்  நிற்காமல் சென்றதால் போலீஸார், அவர்களை மற்றொரு பைக்கில் பின்தொடர்ந்து சென்று மறித்தனர். அப்போது காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் பைக்கில் சென்ற தம்பதியினரை எட்டி உதைத்துள்ளார். இதனால் பைக்கை ஓட்டி வந்தவர் தடுமாறி சாலையில் கீழே விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் திருச்சி அய்யம்பேட்டை அடுத்த சூழப்பேட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், வாகனத்தை ஓட்டி வந்தவர் ராஜா – என்கிற தர்மராஜ் என்பதும், பின்னால் அமர்ந்திருந்த ராஜாவின் மனைவி உஷா இவர் 3 மாத கர்ப்பிணி எனத் தெரியவந்துள்ளது. அவர்  மேல் வேன் ஏறியதால் சம்பவ இடத்திலேயே உஷா பலியானார்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அந்தப் பகுதியில் திரண்டடு போலீஸுக்கு எதிராக மறியல் போராட்டம் நடத்த தொடங்கினர். சுமார் 3 ஆயிரம் பேர் வரை போராட்டம் நடத்தியதாக தெரிகிறது. மறியலின் போது, போலீஸ் மீது பொதுமக்கள் கல்வீசித் தாக்கியதாக காவல்துறை தரப்பில் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து, பொதுமக்களை கலைக்க போலீஸ் தடியடி நடத்தியது. இதில் ஏரளாமானோருக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, போலீஸ் தடியடியில் பலருக்கு மண்டை உடைந்துள்ளதாக தெரிகிறது.

தடியடி நடைபெற்றபோது, ஏற்பட்ட கலவரத்தில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.  இதனால், அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் மறியலால் திருச்சி தஞ்சை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் நிற்பதால் நிலைமை சீரடைய, சில மணி நேரங்கள் ஆகும். முன்னதாக போராட்டத்தின் போது காவல் ஆய்வாளர் காமராஜ் அங்கிருந்து எஸ்கேப் ஆனார். ஆனால் அவரை கைது செய்துவிட்டதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பத்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியுள்ளார்.

பகிர்