குக்கர் சின்னம் மற்றும் அதிமுக அம்மா அணியின் பெயரை டிடிவி தினகரனுக்கு ஒதுக்கி டெல்லி உயர்நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது.

குக்கர் சின்னம் மற்றும் அதிமுக அம்மா அணியின் பெயரை ஒதுக்கக்கோரிய டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று(9.3.18) வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடைப்பெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போது சசிகலா தரப்பைச் சேர்ந்த டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் மற்றும் அதிமுக அம்மா அணி என்று பெயர் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த தொகுதியில் சுயேட்சையாக நின்ற டிடிவி, குக்கர் சின்னத்தை வைத்து வெற்றியும் பெற்றார்.

இந்நிலையில், டிடிவி தினகரன், குக்கர் சின்னத்தை தனது அணி தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது உள்ள அரசியல் சூழலில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால், வருகிற உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னம் மற்றும் அதிமுக அம்மா அணியின் பெயரையே தங்களின் அணி பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று டிடிவி மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையமே நடத்துவதால் சின்னம் குறித்து மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும். எனவே, டிடிவி தினகரன் கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் பதில் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தது.

தினகரன் தரப்பு, முதல்வர் தரப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தின் தரப்பு வாதங்கள் என அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று 10.30 மணியளவில் தீர்ப்பு வெளியாகியது. அதில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க  தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ட்சிக்கு தினகரன் ஒதுக்கக்கோரிய பெயர்களில் ஒன்றை ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனிடையே, இந்த உத்தரவை எதிர்த்து யாராவது மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்கக்கோரிக்கைவிடுத்து தினகரன் சார்பில், டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.

வெற்றிச் சின்னமான குக்கரை வழங்கும்படி டெல்லி உயர் நீதிமன்றமே உத்தரவிட்டதால், தினகரனும் அவரது ஆதரவாளர்களும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்தத் தீர்ப்புபற்றிய செய்தி, தினகரன் மதுரையில் தங்கியிருந்தபோது வந்ததால், ‘மதுரைதான் எனக்கு ராசியான ஊர். என்னுடைய அரசியல் பயணத்தின் ஒவ்வொரு நகர்வும் மதுரையிலிருந்தபோதுதான் நிகழ்ந்துள்ளது” என்று நேற்று கட்சி நிர்வாகிகளுடன் உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டுள்ளார்.இதைப் பற்றி நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர்கள், ‘அண்ணன், முதன் முதலில் பெரியகுளம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, மதுரையில் தங்கியிருந்துதான் பிரச்சாரத்துக்குக் கிளம்புவார். அதில் வெற்றிபெற்றார். அவர் துணைப்பொதுச்செயலாளராக வர வேண்டுமென்ற குரல் மதுரையிலிருந்துதான் கிளம்பியது. பொய் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டபோது, அதை எதிர்த்து முதல் போராட்டம் மதுரையில்தான் நடந்தது. அனைவரும் வியக்கும் வகையில் முதல் அரசியல் பொதுக்கூட்டம் மதுரை மேலூரில்தான் நடத்தப்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிச் செய்தியும்,  அண்ணன் மதுரையிலிருந்தபோதுதான் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக, அனைவரும் எதிர்பார்த்த குக்கர் சின்னமும் அண்ணன் மதுரையிலிருந்தபோதுதான் சட்டபூர்வமாகக் கிடைத்துள்ளது’ என்று பெரிய பட்டியலே இடுகிறார்கள்.

புதிய கட்சியின் பெயர் அறிவிக்கும் விழாவை மதுரை மாவட்டம் மேலூரில் நடத்தபோவதாக டி.டி.வி.தினகரன் நேற்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் உற்சாகமாக அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்கள்.

இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் ஒருவர் பேசுகையில், ’தினகரனின் அடுத்தடுத்த செயல்பாடுகளால் மதுரை மாவட்ட  அதிமுக  அமைச்சர்களான  செல்லூர் ராஜு மற்றும்  ஆர்.பி.உதயகுமார்  ஆடிப்போயுள்ளனர். வருகிற 30ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பிரமாண்ட விழா நடத்தி 70 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகளை அமைச்சர் உதயக்குமார் செய்து வருகிறார். இதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் அந்த விழாவுக்கு முன் தினகரனின் புதிய கட்சி தொடங்கும் விழா நடந்தால், அது தாங்கள் நடத்தவுள்ள விழாவுக்கு சேதாரத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள். அதனால், காவல்துறை மூலம் அனுமதி கொடுக்க தடை செய்ய ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் எதாக இருந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன் என்று தினகரன் உறுதி அளித்ததால் இன்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை மேலூரில் நடத்தினோம். தினகரனை பொறுத்தவரையில் மதுரையை தன்னுடைய அரசியல் வாழக்கைக்கு ஏற்றம் தரும் நகரமாக நம்புகிறார். அவருக்கு ஆதரவாக முதல் ஆர்பாட்டம், முதல் அரசியல் பொதுக்கூட்டம் மதுரையிலேயே நடந்தது. மதுரையை மையமாக வைத்தே பல நிகழ்வுகள் வெற்றியை தந்திருப்பதாக நம்புகிறார். அந்த அடிப்படையில் கட்சி பெயர் அறிவிக்கும் விழாவை, மதுரை மேலூரில் நடத்தப்போவதாக அறிவித்தார். இங்கு நடந்த முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் பெருவாரியாக மக்கள் கலந்து கொண்டனர்.விழாவுக்கான கால்கோல் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. மாநில நிர்வாகி மேலூர் சாமி முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி, உமாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது உடனே ஏற்பாடு செய்த நிகழ்ச்சி என்றாலும் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள்  வந்திருந்தனர். வரும் 15ம் தேதி மிக பிரமாண்டமாக விழாவை நடத்தப்போகிறோம்.  இதை எப்படி எதிர்கொள்வது என்று மதுரை மாவட்ட அ.தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள்  ஆலோசித்து வருகிறார்கள்’ என்றார்.

பகிர்