ரஜினிகாந்த் தனிக் கட்சி தொடங்கப் போவதாகவும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாகவும் ஏற்கனவே அறிவித்தார். கடந்த 5-ம் தேதி சென்னை வேலப்பன்சாவடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, ‘தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவேன். எம்.ஜி.ஆர். அமைத்த ஆட்சியை அமைப்பேன்’ என்றார்.

ரஜினிகாந்த் தனது கட்சி பெயரை அறிவித்து சுற்றுப்பயணம் செல்லும் முன்பாக இமயமலை பயணம் போய்வர முடிவெடுத்தார். இமயமலையில் இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் உள்ள ஆசிரமங்களுக்கும், தியான மையங்களுக்கும் செல்கிறார். 15 நாட்கள் வரை அவர் அங்கு தங்கி இருக்கிறார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று டெல்லி சென்ற ரஜினிகாந்த் அங்கிருந்து மற்றொரு விமானத்தில் இமாச்சலப் பிரதேச தலைநகர் சிம்லா வழியாக தர்மசாலா போய்ச் சேர்ந்தார். இது காஷ்மீர் மற்றும் திபெத் எல்லையை ஒட்டியுள்ள பகுதியாகும். இந்தப் பகுதியில் திபெத்தியர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்.

தர்மசாலாவையொட்டி பனி படர்ந்த மலைப்பிரதேசத்தில் கன்ட்பாடி என்ற சிறிய மலைகிராமம் உள்ளது. அங்கு பாபா ஆசிரமமும், தியான மண்டபமும் உள்ளது. இந்த ஆசிரமத்துக்கு சென்ற ரஜினிகாந்த் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அதன்பிறகு தியான மண்டபத்துக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். ரஜினிகாந்த் திபெத்தியர்கள் அணியும் தொப்பி அணிந்து இருந்தார்.

தியான மண்டபத்தில் இருந்த ரஜினிகாந்தை இமாச்சலப்பிரதேச மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான பிரேம் குமார் துமால் சந்தித்துப் பேசினார். அப்போது ரஜினியின் அரசியல் மற்றும் ஆன்மீக பயணம் குறித்து பேசினார்கள். ரஜினியை ஆசிரம நிர்வாகியும் சாமியாருமான பாபா அமர் ஜோதியும் சந்தித்தார்.

இங்கு சில நாட்கள் இருந்து விட்டு உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள பாபா குகைக்கு சென்று வழிபடுகிறார். அங்கு ரஜினிகாந்த் ஆசிரமம் கட்டியுள்ளார். பல்வேறு பணிகளால் அதன் திறப்பு விழாவுக்கு ரஜினிகாந்த் செல்லவில்லை. இந்தப் பயணத்தின் போது அவர் ஆசிரமத்துக்கு சென்று தங்குகிறார்.

ரஜினிகாந்தை இயக்குவது பாஜக.தான் என்றும், பாஜக.வுடன் கூட்டணி அமைத்து அவர் களம் இறங்குவார் என்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு எதிர்பார்த்த ஆதரவு இல்லை என்பதை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக தலைமை பார்த்துவிட்டது. எனவே ரஜினியை முன்னிறுத்தி தமிழகத்தில் அரசியலை வளர்ப்பதே பாஜக.வின் திட்டம் என கூறப்படுகிறது. அந்தப் பேச்சுக்கு வலு சேர்க்கும் வகையில் பாஜக முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் சந்திப்பு அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

பகிர்