டேராடூன்: ரஜினிகாந்த் முக்கிய விவகாரம் தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க மறுக்கிறார் என குற்றம் சாட்டப்படுகிறது. காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகளில் ரஜினிகாந்த் கருத்து கூறாமல் அமைதியாக இருக்கிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்தார். ரஜினிகாந்த் இப்போது இமயமலையில் பயணம் மேற்கொண்டு உள்ளார். டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இப்போது ஆன்மிகப் பயணமாக இமயமலை வந்து உள்ளேன். நான் ஒரு யாத்ரீகராக இங்கு வந்து உள்ளேன். இதில் அரசியல் பேசுவதற்கு எதுவும் கிடையாது.
அரசியல் பேசமாட்டேன்… ஆனால் பாஜக தலைவர்களை சந்திப்பேன்; அமிதாப் உடல்நிலை பாதிப்புக்கு பிராத்திக்கிறேன்… ஆனால் குரங்கணியில் கருகி மரித்த உயிர்களைப் பற்றியோ திருச்சி உஷா மரணம் குறித்து பேசமாட்டேன் என்பதுதான் ரஜினிகாந்தின் ‘ஸ்டைலிஷ்’ கொள்கை. அரசியலுக்கு வருகிறேன் என இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். எம்ஜிஆர் போல நல்லாட்சி தருவேன் என பிரகடனம் செய்ததும் ரஜினிகாந்த்தான். அதேசமயம், இன்னமும் நான் முழு நேர அரசியல்வாதியாகவில்லை என்று பேசி தெளிவாக குழப்புகிறார் ரஜினி. சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்; வெற்றிடத்தை நிரப்பவே வந்திருக்கிறேன், நல்லாட்சி தருவேன், எம்ஜிஆர் ஆட்சி தருவேன் என்பதெல்லாம் ஒரு அரசியல்வாதியின் பேச்சு இல்லையோ என சாமானிய மக்களுக்கு சத்தியமாக புரியவில்லை.

டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமிதாப்பச்சான் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன்; அவருக்காக பிரார்த்திக்கிறேன் என உருகி இருக்கிறார் ரஜினிகாந்த். ஆனால் குரங்கணியில் மரித்து போன உயிர்களுக்காக ஒரு சிறு இரங்கல் கூட தெரிவிக்க மனசு வரவில்லை ரஜினிக்கு என்பது ஆச்சரியமாக உள்ளது.

அங்கு மீண்டும் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் விரும்பவில்லை. இப்போது வரையில் நான் முழுநேர அரசியல்வாதியாகவில்லை. என்னுடைய அரசியல் கட்சியையும் அறிவிக்கவில்லை,” என கூறினார்.
பகிர்