ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் இருவரால் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்ட டிடிவி தினகரன் கடந்த வியாழன் அன்று ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற கட்சியை துவக்கினார். பத்தோடு ஒன்னு பதினொன்னு அத்தோடு இதுவும் ஒன்னு என்று தமிழகத்தில் கைகொள்ளாத கட்சிகளுக்கு நடுவே இந்த புதிய காளான் கட்சி பூத்துள்ளது. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது அண்ணா படத்தை கொடியில் போட்டது போல், தினகரன் ஜெயலலிதாவின் படத்தை கொடியில் இடம்பெற செய்து தான் ஒரு சின்ன எம்.ஜி.ஆர் என காட்டிக்கொண்டுள்ளார். நடப்பு அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றுவதே இந்த புதிய கழகத்தின் நோக்கம் என்று சூளுரைத்தார். ஏற்கனவே ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் தரப்பில் தினகரனின் தாற்காலிக கட்சிக்கும் குக்கர் சின்னத்திற்கும் நீதிமன்றத்தில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தில்லா அம்மா என்ற பெயரை தனது கட்சியில் சேர்த்துள்ளார் தினகரன்.
மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அதிமுகவின் சனியன் என்று தினகரனை பழித்து சனி விலகிவிட்டது என்று கூறியது நினைவிருக்கலாம். ஆனால் சனியன் சகடையாக திரும்பி வந்து குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் தினகரன். இதை கண்டு அதிமுக தரப்பு அரண்டுபோயுள்ளது. சரியாக அதிமுக பட்ஜெட் உரையை பன்னீர்செல்வம் ஆரம்பிப்பதற்கு சில நிமிடம் முன்னதாக புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டு அரசியல் சாணக்கியத்தனத்தை காட்டினார் தினகரன். ஜெயா படம் பொறித்த சூட்கேசில் பட்ஜெட் உரையை கொண்டுவந்த பன்னீர்செல்வம், அம்மாவின் ஆட்சி என்று முழக்கமிடுவது வழக்கம். அதே பாதையில் பயணித்தால் தான் தொண்டர்களை கவர முடியும் என்று தெரிந்து வைத்துள்ளார் தினகரன். 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் அதிமுகவை கைப்பற்றும் கனவில் உள்ளார் தினகரன். எனினும் இந்த ஜெயா படம் பொறித்த கொடி டிராமா என்னவோ தற்காலிக இளைப்பாறுதல் தான் என்கிறார் நமது கப்சா நிருபர்.
தமிழக அரசியல் நிகழ்வுகளுக்கு மையப்புள்ளியாக சமீபத்தில் உருவெடுத்துள்ள மதுரை மேலூரில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது கவனம் பெறுகிறது. தமிழகத்தில் இந்த ஆட்சி நீடிக்கும் வரை ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் இருவரிடமும் ஒட்டிக்கொண்டு இருக்கும் அடிப்பொடிகள் ஆட்சி முடிந்ததும், அல்லது கலைந்ததும், தினகரன் பக்கம் ஒதுங்குவார்கள் என்று கப்சா நிருபர் மேலும் கணிக்கிறார். அதிமுக ஆட்சி கலைக்கப்படும் சூழ்நிலை உருவானால் எடப்பாடி பெரும்பான்மையை நிரூபிப்பது சிரமமாகிவிடும், அதிமுக கட்சியும் தன்வசமாகிவிடும் என நம்புகிறார் தினகரன். ஆட்சி தொடர்ந்தால், 18 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு சில காலம் தனி ஆவர்த்தனம் செய்யவேண்டியது தினகரன் வேலை. தினகரன் தான் ஆரம்பித்திருப்பது தற்காலிக அமைப்பு என்று கூறினாலும் அதுவும் ஒரு கட்சி தான். தேர்தல் வந்தால் ஓட்டுக்கள் கணிசமாக பிரியும் என்பது திண்ணம். இரட்டைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு, பெரா வழக்கு இரண்டும் தினகரன் தலைக்கு மேல் தொங்கும் கத்திகள் என்கிறார் கப்சா நிருபர். ஆர்.கே. நகர் தேர்தல் வெற்றிக்கு பிறகு நன்கு வளர்ந்த்த தினகரன் பிம்பம், சின்னம்மாவுடன் தொடர்பு வைத்தாலோ, வழக்குகளில் தோற்று தண்டனை பெற்றாலோ, அரசியல் அனாதையாகி எதிர்காலம் பாழாகி விடும் என்பது எள்ளளவும் ஐயமில்லை. டாட்.
பகிர்