அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற புதிய கட்சியை தொடங்கியிருக்கும் டிடிவி தினகரன், இந்தப் புதிய கட்சி மூலமாக அதிமுக.வை மீட்கப் போவதாக கூறுவது நடக்குமா?
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை இன்று (மார்ச் 15) மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் அறிவித்தார். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் வழி நடத்தப்பட்ட இயக்கம், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’! அதில் இருந்து அனைத்திந்திய, அண்ணா, திராவிட ஆகிய மூன்று பதங்களை நீக்கிவிட்டு ‘அம்மா’, ‘மக்கள்’ என இரு வார்த்தைகளை கூடுதலாக புதிய கட்சியில் இணைத்திருக்கிறார் டிடிவி தினகரன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடக்க விழா மேடையிலேயே ஆரம்பித்து வைத்தார் தினகரன். இதன் மூலமாக இப்போதைக்கு அதிமுக.வை கைப்பற்றும் திட்டம் சாத்தியமில்லை என்பதை அவரே புரிந்து வைத்திருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது. ஆனாலும் அதிமுக தொண்டர்களை ஈர்க்கவும், ஏற்கனவே அவரது ஆதரவாளர்களாக திரண்டிருப்பவர்களை தக்க வைக்கவுமே புதிய கட்சியை தற்காலிக ஏற்பாடு என்கிறார் அவர்!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எப்படி அதிமுக.வை மீட்க முடியும்? அதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்று கேட்டால், அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு! எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரு அணிகளாக பிரிந்து இயங்கின. 1989 தேர்தலில் ஜெயலலிதா கணிசமான வெற்றிகளைப் பெற்றதும், ஜானகி அரசியலை விட்டு ஒதுங்கிக் கொண்டு கட்சியையும் சின்னத்தையும் ஜெயலலிதாவிடம் விட்டுக் கொடுத்தார். அதனாலேயே கட்சியையும் சின்னத்தையும் சேதாரம் இல்லாமல் ஜெயலலிதாவால் மீட்க முடிந்தது.
தவிர, அப்போது மீட்புப் பணி முடியும் வரை ஒரு அணியாக ஜெயலலிதா இயங்கினாரே தவிர, தனிக் கட்சியை தொடங்கவில்லை. ஆனால் டிடிவி தினகரனுக்கு தொடங்கியிருப்பது தனிக் கட்சி! எடப்பாடி பழனிசாமி மீது டிடிவி ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் நெடுஞ்சாலைத்துறை ஊழல் புகார் கிளப்புகிற வரை அமைச்சர்களில் பலர் டிடிவி தினகரனை தாக்கிப் பேசவில்லை.
ஆனால் அதன்பிறகு முன்பு டிடிவி தினகரனுக்கு நெருக்கமாக இருந்தவர்களான ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோரே டிடிவி தினகரனை நேரடியாக தாக்கிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். எனவே இனி இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு தேர்தலில் தோற்றாலும்கூட டிடிவி தினகரனிடம் கட்சியை விட்டுக் கொடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவு!
தற்போது அதிமுக முழுமையாக இபிஎஸ், ஓபிஎஸ் கைகளில் தேர்தல் ஆணையத்தால் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. எனவே தற்போது கட்சியில் டிடிவி ஆதரவாளர்களை களையெடுக்கும் இபிஎஸ்-ஓபிஎஸ் நடவடிக்கைகளுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும். மாவட்டத்திற்கு சராசரியாக 200 பேர் வீதம் டிடிவி ஆதரவாளர்களை ஏற்கனவே இபிஎஸ்-ஓபிஎஸ் நீக்கிவிட்டனர். இனி அவர்கள் பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர் என கூறிக்கொண்டு அதிமுக.விற்குள் நுழைய முடியாது. அவர்கள் டிடிவி.யின் புதிய கட்சியில் பொறுப்புகளை பெற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டியதுதான்!
இதையெல்லாம் தாண்டி, இன்னொரு கணக்கை டிடிவி தரப்பினர் கூறுகிறார்கள். டிடிவி தினகரனை அதிமுக.வை விட்டு நீக்கிய இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் இன்னும் சசிகலாவை நீக்கவில்லை. காரணம், இபிஎஸ் அணியை சேர்ந்த பலரும் இன்னும் சசிகலா மீது மரியாதை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.
இபிஎஸ்-ஓபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து நீக்கப்பட்ட டிடிவி ஆதரவாளர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை இன்னும் போடவில்லை. இவர்களால் குழப்பமின்றி கட்சியை நடத்த முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஓபிஎஸ் எந்த வேளையிலும் காலை வாருவார் என்பது இபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவருக்கும் தெரியும். எனவே ஆட்சி முடிகிற வேளையில், சசிகலா சிறைத் தண்டனை முடிந்து வெளியே வந்தால் பெரும்பாலான நிர்வாகிகள் அவர் பக்கம் சென்றுவிடுவார்கள்.
அப்போது, ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்’ அவசியம் இருக்காது. ஒரே கட்சியாக, அனைத்திந்திய அண்ணா திமுக இயங்கும். அதுவரை கட்சித் தொண்டர்களை பாதுகாக்கும் பாசறையாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இயங்கும் என்கிறார்கள் டிடிவி தரப்பினர்!
டெல்லியின் அழுத்தங்களால் சிதறிய அதிமுக உள்ளுக்குள்ளேயே அணி மாறுதல்களை எதிர்கொண்டு, இப்போது தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்றிருக்கிறது. மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே எதிர்காலம் நிர்ணயமாகும்.