ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவைப் போல என்னைப் பார்த்தார்கள் என்று டிடிவி தினகரன் அணியில் இருந்து விலகியது குறித்து நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
சமீபத்தில் டி.டி.வி.தினகரன் மதுரையில் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்‘ என்ற புதிய அமைப்பைத் துவக்கி, புதிய கொடியையும் அறிமுகம் செய்தார். ஆனால் அந்த விழாவில் நாஞ்சில் சம்பத் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் சனிக்கிழமையன்று பெயரிலேயே அண்ணா மற்றும் திராவிடம் இரண்டையும் கைவிட்ட டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்தார். அத்துடன் இனி இனி எந்த கட்சியிலும் சேரமாட்டேன். இலக்கிய மேடைகளில் என்னை அதிகம் பார்க்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவைப் போல தினகரன் அணியில் என்னைப் பார்த்தார்கள் என்று டிடிவி தினகரன் அணியில் இருந்து விலகியது குறித்து நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இன்னல் சூழ்ந்த காலகட்டத்தில் டிடிவி தினகரன் அவர்களுக்கு துணை நின்றேன். தோள் கொடுத்தேன். அநியாயமாக அவர் பழி வாங்கப்பட்ட பொழுது அவருக்கு பக்கபலமாகவும், தக்கதுணையாகவும் இருக்க தீர்மானித்தேன்.
அவரை சிகரத்திற்குக் கொண்டுச்செல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் என்னை பார்த்தார்கள்.என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை , அதனால்தான் கவலையோடு வெளியேறினேன்.
தமிழகத்தில் தற்போது கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கி விட்டார். ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதாக கூறி உள்ளார். ஆனால் இவர்கள் இருவரின் அரசியல் பிரவேசத்தால் எந்த மாற்றமும் நிகழப்போவ தில்லை.
தமிழகத்தில் தற்போது தேர்தல் நடந்தால் தி.மு.க. மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரும். மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட் டவர்களை மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார். அவரது பேச்சும், கருத்தும் ராகுல்காந்தியை கோபுரத்தின் உச்சியில் ஏற்றி விட்டது.
மத்தியில் ஆளும் மோடி அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். அடுத்து நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராக நிச்சயம் பதவி ஏற்பார். 3-வது அணி ராகுலின் பின்னால் அணி வகுக்கும்.
அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சராகவும், துணை முதல்-அமைச்சராகவும் இருப்பதால் இ.பி.எஸ் சையும், ஓ.பி.எஸ்சையும் பற்றி வெளியே தெரிகிறது. ஆட்சி இல்லையென்றால் இவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.