மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற இடத்தில் சிசிடிவி கேமரா அணைத்து வைக்கப்பட்டிருந்தது என, அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் சி. ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.

அப்போது, ”மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அப்போலோ சிறப்பு கவனம் கொடுத்தது. அபபோலோ மருத்துவர்களும் வெளிநாட்டு மருத்துவர்களும் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சையை அளித்தனர்.

அவர் உடல் நலம் தேறி வருவதற்கு அப்போலோ பல வாரங்களாக சிகிச்சை அளித்தது. அனைத்து தகவல்கள் மற்றும் ஆவணங்களையும் விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளோம்.

சிசிடிவி காட்சிகளை சம்பந்தமில்லாதவர்கள் பார்க்க நேரிடும் என்பதால், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற இடத்தில் சிசிடிவி கேமரா அணைத்து வைக்கப்பட்டது. அதனால், அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பாக எந்தவித சிசிடிவி காட்சிகளும் இல்லை. சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை யார், யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை அவருடன் இருந்தவர்களே முடிவு செய்தனர்.

ஜெயலலலிதாவின் தனிமை மற்றும் பாதுகாப்பு கருதி மற்ற நோயாளிகள் மேறு இடங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர்” என பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த ஆணையத்திடம் சசிகலாவின் வாக்குமூலத்தை அவரது வழக்கறிஞர் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் மருத்துவமனையில் 4 வீடியோக்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரதாப் சி.ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து இவ்வாறு விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது

பகிர்