எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஓராண்டு நிறைவு செய்ததை அடுத்து இன்று ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து தீபாவின் கணவர் மாதவன் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக அரசியலில் ஜெயலலிதா மரணம், கருணாநிதியின் ஓய்வுக்குப் பிறகு முளைத்த அரசியல் கட்சிகள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. தமிழகத்தின் அரசியலே கேலிக்குரியதாக மாறி வருகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்னை அழைத்து முதல்வர் பதவி அளித்திருக்க வேண்டும் என்று கூறி அவரின் அண்ணன் மகள் தீபா அதிர்ச்சியூட்டினார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் என்று தனி இயக்கம் தொடங்கினார் தீபா. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்றுபெயரிட்ட இயக்கம் சார்பில் இரட்டை இலையைக் கேட்டும் விண்ணப்பித்தார். ஒரு இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில்அந்த இயக்கம் இரண்டாக உடைந்து தீபாவின் கணவர் மாதவன் தனி இயக்கமாகப் பிரிந்தார்.

ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த பின்னர் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். பின்னர் தீபாவுடன்இணைவதாக அறிவித்தார். தற்போது தனி இயக்கம் உள்ளதா? தீபா பேரவையுடன் இணைந்து விட்டாரா? என்ற கேள்விஅனைவர் மனதிலும் இருக்கும் நிலையில், இன்று காலை மாதவன் திடீரென ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறுவதை ஒட்டி இன்று விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி இன்று அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் நிர்வாகிகள் கூடி இருந்தனர். இந்நிலையில் தீபாவின் கணவர் மாதவன் திடீரென அங்கு வந்தார். அவரைப்பார்த்த போலீஸார் அவரை காருக்குள்ளேயே அமர வைத்தனர்.

பின்னர் முதல்வர் வந்தவுடன் அனுமதி பெற்று அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற மாதவன் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு வந்தார்.

மாதவனிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:

இன்று முதல்வருக்கு வாழ்த்து சொல்ல வந்தீர்களா?

முதல்வர், துணை முதல்வர் இருவரையும் ஒன்றாகச் சந்தித்து ஓராண்டு நிறைவுபெற்றது குறித்து வாழ்த்து சொன்னேன்.

திடீர் என்று வாழ்த்து சொல்கிறீர்களே.  ஆச்சர்யமாக இருக்கிறதே?

திடீர் என்று எங்கே வாழ்த்து சொன்னேன்? ஓராண்டு நிறைவுபெற்றது குறித்து வாழ்த்து சொன்னேன். என்ன தப்பு அதில்?

தீபா மாற்றுக் கருத்தில் இருக்கிறார். அவர்கள் எதிர்க்கும்போது  நீங்கள் வாழ்த்துகிறீர்களே?

நீங்கள் ஒன்று அரசியல் என்றால் அரசியலாகப் பேசுங்கள், கணவன் மனைவி என்றால் அது பற்றி பேசுங்கள். இரண்டையும் போட்டு குழப்பாதீர்கள்.

அரசியலாகவே கேட்கிறேன்?

அரசியலாகப் பேசுவது என்றால் அவர்கள் வேறு, நான் வேறு. அப்புறம் ஏன் அதுபற்றி என்னிடம் கேட்கிறீர்கள்.

அப்படியானால் உங்கள் இயக்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்தீர்களா?

நான் தனிப்பட்ட முறையிலும், என் இயக்கம் சார்பிலும் வாழ்த்து தெரிவித்தேன்.

உங்களை உள்ளே அனுமதிக்கவில்லை, திருப்பி அனுப்பி விட்டதாகக் கூறுகிறார்களே?

நேரில் பார்த்து அவர்கள் முன்னாடி உட்கார்ந்து தான் வாழ்த்து சொல்லிவிட்டு வருகிறேன், யார் சொன்னது அனுமதிக்கவில்லை என்று?, நான் போன போது முதல்வர் வரவில்லை. அவர் வரும் வரை என்னை காரிலேயேஅமரச்சொன்னார்கள்.

ஏனென்றால் பொதுமக்கள் கூடிவிடுவார்கள், மீடியா சுற்றிக்கொள்கிறார்கள் என்பதால் சொன்னார்கள். நானும் எதற்கு அவர்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று காரிலேயே அமர்ந்திருந்தேன்.

பின்னர் முதல்வர் வந்தவுடன் அழைத்துச்சென்றார்கள். நீங்கள் அங்குள்ள அதிகாரிகளை வேண்டுமானால் கேட்டுப் பாருங்களேன்.

வாழ்த்து தெரிவித்ததற்கு முதல்வர், துணை முதல்வர் ரியாக்‌ஷன் எப்படி இருந்தது?

நிறைய சந்தோஷப்பட்டார்கள்.

வரும் காலங்களில் உங்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தருமா? உள்ளாட்சித் தேர்தல் வருகிறதே?

அதுபற்றி எதுவும் பேசுகிற மாதிரி இல்லை. ஒரு ஆண்டு நிறைவு பெற்றது குறித்து வாழ்த்து சொன்னேன். ஆதரவு பற்றி எல்லாம் இப்போது முடிவு செய்யவில்லை.

வாழ்த்து தெரிவித்ததை தீபா எப்படி எடுத்துக்கொள்வார்?

அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். என்னை ஏன் கேட்கிறீர்கள்.

நான் அரசியலாகக் கேட்கவில்லை, தனிப்பட்ட முறையில் எப்படி எடுத்துக்கொள்வார்கள்?

பெர்சனலாக ஏன் கேட்கிறீர்கள், அது பற்றி கேட்க வேண்டாமே. அரசியலாகவே பேசிவிட்டுப் போவோம்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

பகிர்