காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக அனைத்துக் கட்சிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தஞ்சை உண்ணாவிரதத்தில் டிடிவி தினகரன் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தஞ்சை திலகர் திடலில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநிலம் முழுவதும் இருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பெருமளவில் இதில் கலந்து கொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி உண்ணாவிரதத்தில் பலரும் வலியுறுத்தி பேசினர். முன்னதாக டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் மத்திய அரசு செயல்படுத்தாமல் உள்ளது. பிரதமர் சென்னைக்கு வந்தபோது அனைத்து கட்சி தலைவர்களை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினோம். சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். மத்திய அரசு தமிழக மக்களின் நலனை பற்றி கவலைபடாமல் கர்நாடக மாநில தேர்தலை கருத்தில்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

காவிரி மேற்பார்வை குழு அமைக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இது தமிழக விவசாயிகள் மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு ஏமாற்றும் அளிக்கும் தவறான முன் உதாரணமாக உள்ளது. திராவிட கட்சிகளின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கர்நாடக தேர்தல் வரும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது. இதனால் தமிழக மக்கள், விவசாயிகளின் நலன் நசுக்கப்படுகிறது. இந்தியாவில் ஒரே மொழி கொள்கை, ஒரே கட்சி ஆட்சி போன்றவை கொண்டு வர பா.ஜனதா அரசு முயற்சிக்கிறது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா, தமிழ்நாடு , குஜராத், கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்கள் மூலம் மத்திய அரசு அதிக வருமானம் ஈட்டுகிறது. ஆனால் தமிழக அரசுக்கு நிதி கொடுக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. அங்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மற்ற மாநிலங்களில் இருந்து வரும் நிதியை உத்தரபிரதேச அரசுக்கு அளிக்கிறது.

தமிழகத்தில் தற்போது மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஓ.என்.ஜி.சி. போன்றவை விவசாய நிலங்களில் எடுக்கப்பட்டு வருகிறது. சோமாலியா நாட்டில் இதேபோல் எரிவாயு எடுப்பதற்கான நிலம் நிறைந்து இருந்தது. அங்குள்ள ஆட்சியாளர்களின் தவறான கொள்கையால் வெளிநாட்டு கம்பெனிகளை தொழில் தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டது. இதனால் சோமாலிகா முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டு பாதிக்கப்பட்டது.

அதேபோன்ற நிலைமை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஏற்படுத்த இன்று தமிழக ஆட்சியாளர்கள் கொண்டு செல்கிறார்கள். தமிழ்நாட்டை சோமாலியா நாட்டை போல் மாற்ற முயற்சிக்கிறார்கள். நாங்கள் இதை அனுமதிக்க மாட்டோம். தமிழக மக்கள் நலனுக்காக அரசியல் வேறுபாடின்றி அனைத்து கட்சியினரும் ஒண்றாக இணைந்து போராடினால் அபாயகரமான நிலையில் உள்ள தமிழகத்தை மீட்டெடுக்கலாம். இதற்காக அனைத்து கட்சியினரிடம் பேசி அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

டிடிவி தினகரனின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அவரது கட்சியின் மாநில விவசாய பிரிவு தலைவர் துரை கோவிந்தராஜன், கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி, இன்பத்தமிழன், திருச்சி மனோகரன், திருச்சி சாருபாலா தொண்டைமான், மாநில பொருளாளர் ரெங்கசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சேகர், வெற்றிவேல், கதிர்காமு, நாமக்கல் அன்பழகன், தாம்பரம் நாராயணன், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், விவசாய சங்க நிர்வாகி கக்கரை சுகுமாரன், மணிமொழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தை பழ.நெடுமாறன் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்

பகிர்