உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் வகையில் காவிரிக்கான போராட்டத்தைத் தமிழகக் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. வாரியம் அமைக்க வலியுறுத்தி தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக மாநிலங்களவை அ.தி.மு.க எம்.பி. முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, இந்திய நீதித்  துறைக்கும் தமிழக மக்களுக்கும் செய்த துரோகம்” எனக்  கூறப்பட்டுள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 2 -ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும் என துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது இந்த உண்ணாவிரதம் ஏப்ரல் 1 -ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்  போராட்டத்தில்  கட்சியினரும், பொதுமக்களும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்