அதிமுக பெண் எம்.பி.யைக் கொல்ல முயன்றதாக பிடித்துக் கொடுக்கப்பட்ட எம்.பி.யின் கணவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு, கோபிசெட்டிப் பாளையம் கச்செரி சாலையில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா தனது மகன் சத்யவசந்துடன் வசித்து வருகிறார். கணவர் வாசுவுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்.

இதனால் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்த கணவர் வாசு சத்யபாமாவைப் பற்றி தனது முகநூலில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவும் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மகன் சத்யவசந்துக்கு சத்யபாமா திருமண ஏற்பாடு செய்து வந்தார்.

திருமணம் நிச்சயமானதை அடுத்து கோவையில் இன்று நிச்சயதார்த்தம் நடப்பதாக இருந்தது. நேற்றிரவு நிச்சயதார்த்த ஏற்பாடு நடந்த நேரத்தில் கத்தியுடன் சத்யபாமா வீட்டுக்கு கணவர் வாசு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்த கத்தியால் சத்யபாமாவைக் குத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன் சத்யவசந்த், மைத்துனர் சண்முக பிரபு ஆகியோர் தடுக்க முயன்றனர். அப்போது அவர்களையும் வாசு தாக்க முயன்றார். இதையடுத்து சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தவர் வாசுவைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மைத்துனர் சண்முக பிரபு புகார் அளித்ததன் பேரில் வாசு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோபிசெட்டிப்பாளையம் மாவட்டச் சிறையில் அடைத்தனர்.

பகிர்