காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. உண்ணாவிரதப் போராட்டம் என்றாலும், மாநாடு போல தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவை மாவட்டம் முழுவதும் இருந்து, தனியார் வாகனங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். சிலர் 300 ரூபாய் பணம், மாலை சாப்பாடு என்று சொல்லி அழைத்து வந்ததாகக் கூறினர். வேறு சிலர், “அமெளன்டே சொல்லல… சாயங்காலம் வரைக்கும் உக்காந்தா காசு கொடுப்போம்’னு சொன்னாங்க… சாயங்காலம் போறப்பதான் தெரியும்…” என்றனர். ஆள் காட்ட வேண்டும் என்பதற்காக மனநலம் குன்றியவர், பார்வையற்ற பெண், வட இந்தியர்கள், முதியவர்கள், குழந்தைகள் அழைத்து வரப்பட்டிருந்தனர். இதில், பலருக்கு தாங்கள் எந்த நிகழ்வுக்கு வந்துள்ளோம் என்பதே தெரியவில்லை.

வேலூரில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் நீலோபர் கபில் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. அந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க தொண்டர்கள் கரை வேட்டிகளுடன் காலை முதலே உண்ணாவிரதப் பந்தலுக்குப் பின்புறம் இருக்கும் ஜனனி பிக் பஜார் பகுதியில் இருந்த ஹோட்டல்களில் தஞ்சமடைந்தார்கள். அங்கு இட்லி, பூரி, பொங்கல், டீ, காபி எனப் போராட்டத்தைத்(!?) தொடங்கினார்கள்.

அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவ ஆரம்பித்தது. இந்நிலையில் உண்ணாவிரதப் பந்தலுக்கு அருகே இருக்கும் மீடியா அலுவலகத்தில் மதிய உணவாகத் தயிர், தக்காளி, லெமன் சாதங்கள் மற்றும் வெஜிடபிள் பிரியாணி போன்றவைகள் சூடாக வந்திறங்கின.

பகிர்