நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் கட்சி கட்டமைப்பு தயார் நிலையில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலுக்கு வரப்போவதாக தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31 2017-ல் அறிவித்தார். ஆண்டின் கடைசி நாளில் ஒட்டுமொத்த ஊடகங்களையும் பரபரப்பாகிவிட்டு தன்னை பேசுபொருளாக ஆக்கினார்.
ஆனால், அதன்பின்னர் கமல்ஹாசன் சுறுசுறுப்பாக கட்சிப் பெயர், கட்சியின் கொடி என முன்னேறினார். கமலின் மக்கள் நீதி மய்யம் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்வரை வந்துவிட்ட நிலையில் ரஜினியின் கட்சிக் கட்டமைப்பு தயார் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் 38 மாவட்டங்களுக்கும் சுமார் 7000 நிர்வாகிகளை ரஜினிகாந்த் நியமித்திருக்கிறார். 4 மாதங்களுக்கு முன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தபோதே ரசிகர்களிடம் ரஜினி மக்கள் மன்றத்திற்கான உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்துமாறு அவர் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தது கவனிக்கத்தக்கது.

நிர்வாகிகளுக்கு என்ன வேலை?
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் உள்ள 65,000 வாக்குச்சாவடிகளிலும் ரஜினி மக்கள் மன்ற கிளையைத் தொடங்க வேண்டும் என்ற பணி வழங்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கிளையிலும் தலா 30 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் என்பது ரஜினியின் உத்தரவாம்.
மாவட்ட வாரியாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மாவட்ட செயலாளர், இணை செயலாளர், துணை மாவட்டச் செயலாளர்கள் இருப்பர். வழக்கறிஞர் அணி, விவசாயிகள் அணி, பெண்கள் அணி எனப் பல்வேறு அணிகளும் தயார் நிலையில் உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்துக்கு 15 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என்று தனி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. புதிதாக சேரும் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையும் வழங்கப்படுகின்றன.
ரஜினியின் கட்சியின் பெயர் என்னவாக இருக்கும் என்பது இன்னும் தெரியவில்லை. ரஜினி மக்கள் மன்றமாகவே இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ரசிகர் மன்றங்களை கட்சிக்கான கட்டமைப்பாக மாற்றும் பணியினை லைகா நிறுவனத்தின் முன்னாள் கிரியேடிவ் ஹெட் ராஜூ மகாலிங்கத்திடம் ரஜினி வழங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.

-உத்தவ் நாயக்

பகிர்