சென்னை: மைதானத்திற்குள் இருப்பது கிரிக்கெட் ரசிகர்களா, அல்லது போராட்டக்காரர்களும் உள்ளனரா என்பது தெரியாமல் போலீசார் திக் திக் என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென செருப்பு வீசப்பட்டதாலும், கருப்பு கொடி காட்டப்பட்டதாலும் பரபரப்பு ஏற்பட்டது. காவிரி பிரச்சினையில் தீர்வு கிடைக்கும் வரை, ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்த கூடாது என வலியுறுத்தி போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

மைதானத்திற்குள் பாம்புகள் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல என வேல்முருகன் எச்சரித்துள்ளார். அண்ணா சாலையில் பெரும் போராட்டங்கள் நடந்து முடிந்தன. இந்த நிலையில் மைதானத்திற்குள் கணிசமான போராட்டக்காரர்களும் ரசிகர்களை போல சென்றிருக்கலாம் என்பதை உளவுத்துறை முன்கூட்டியே சந்தேகித்தது. ஏற்கனவே நூற்றுக்கணக்கான டிக்கெட்டுகளை அவர்கள் வாங்கி வைத்துள்ளதாகவும் சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது.

இதையடுத்தே மைதானத்தில் ரசிகர்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் ஏதாவது ஒரு வகையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவிட்டால் என்ன செய்வது என்ற பரபரப்பில் போலீசார் இருந்தனர். அதேபோல போட்டி ஆரம்பித்த சில நிமிடங்கள் கழித்து மைதானத்திற்குள் காலணி வீசி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதேபோல சேப்பாக்கம் மைதானத்தில் கருப்புக் கொடி காண்பித்தும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

கொல்கத்தா அணி பேட் செய்தபோது, 18வது ஓவரில் கருப்புக் கொடி காட்டி முழக்கம் எழுப்பிய நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்பு கெடுபிடிகளையும் தாண்டி அவர்கள் கருப்பு கொடியுடன் உள்ளே நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் எதிர்பார்த்ததை போலவே ரசிகர்கள் போர்வையில் போராட்டக்காரர்கள் நுழைந்திருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

பகிர்