Credit: Shyam Shanmugaam
சேப்பாக்கம் போராட்டத்தில் தாக்கப்பட்ட காவலர்கள் வீடியோவை வெளியிட்டுக் கண்டனம் தெரிவித்துத் தன மறு பக்கத்தைக் காட்டி விட்டார் ரஜினிகாந்த்.
ஆனால் எவ்வளவு பொதுமக்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர்?
பத்திரிகையாளர்களையும், டிவி காமிராமேன்களையும் போலீஸ் விரட்டியடித்ததை நாம் தொலைக்காட்சிகளில் பார்த்தோமே?
அதற்கு ஏன் ரஜினி கண்டனம் தெரிவிக்கவில்லை?
ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவைச் சிலாகித்துப் பாராட்டி இருக்கிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.
அன்புச் சகோதரர் ரஜினிகாந்த் அருமையாகக் கூறினார் என்று சிலாகித்திருக்கிறார்.
ஆனால் ரஜினி மக்கள் மன்றத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனரே?
எல்லாத் தொலைக்காட்சிகளிலும் அது செய்தியாக வெளிவந்ததே?
ரஜினி டிவி பார்ப்பதில்லையோ?
தென் ஆப்ரிக்கா கேப்டவுண் நகரில் குடிநீர்த் தட்டுபாடு ஏற்பட்டு டெஸ்ட் கிரிக்கெட் மைதானத்தில் தண்ணீரைச் சிக்கனப்படுத்த அறிவித்தது அரசு.
இந்திய விளையாட்டு வீரர்கள் தங்களது பேட், மற்றும் சீருடைகளை ஏலம் விட்டு குடிநீருக்காக தொகையை கேப்டவுண் நகர மேயரிடம் அளித்தனர்.
காவிரிப் பிரச்னையில் ஒரு வீரரும் தங்களது தமிழ் ரசிகர்கருக்கு ஆறுதல் கூடச் சொல்லவில்லை.
அவர்கள் விளையாடும் மைதானம் ஒரு நாள் 50,000 லிட்டர் தமிழ் மக்களின் தண்ணீரை குடித்துக் கொண்டிருக்கிறது.
அல்லது தமிழ்த்திரையுலகினர் நடத்திய மவுனப் போராட்டத்தின்போது ரஜினிகாந்த் கூறியவாறு கருப்பு பேட்ஜ் மட்டுமாவது அணிந்திருக்கலாம்.
ஐபிஎல் எதிர்ப்பு என்பது கிரிக்கெட் விளையாட்டை எதிர்ப்பது அல்ல. ஆனால் திமுக அப்படிச் சொல்கிறது.
அல்லது அது சார்ந்த வியாபார நிறுவனம் உரிமை பெற்று இருக்கும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி அப்படிச் சொல்ல வைக்கிறதோ என்னவோ?
ஆனால் மக்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு யார் போராடினாலும் அந்த போராட்ட வடிவங்களையும், உணர்வுகளையும் ஆதரிக்க வேண்டும்.. அரவணைக்க வேண்டும்..
யார் போராடுவது, இப்படியா போராடுவது என்பது முக்கியமல்ல… எதற்காகப் போராடுகிறோம் என்பதே முக்கியம் .
ஸ்பெயின் நாட்டில் இருந்து கேட்டலோனியா தனி நாடாக வேண்டுமென்று கேட்டலோனியா தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்து வந்தது.
அப்போது பார்சிலோனா (கேட்டலோனியா தலைநகர்) மேட்ச் நடக்கும்போது, கேட்டலோனியா கொடி, பதாகை என்று போராட்டக்காரர்கள் அதகளம் செய்தார்கள்.
அணியின் சிறந்த தடுப்பாட்டக்காரரான பிகு போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார்.
நமது சென்னை சி.எஸ்.கே. அணியினர் அந்த முறையைக் கடைப்பிடித்திருந்தால் ஆறுதலாகவாவது இருந்திருக்கும்.
ஈழப்பிரச்சனையின் போது இலங்கை வீரர்களையும் நடுவர்களையும் தமிழகத்தில் அனுமதிக்காது சர்வதேச கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் முடிந்தது.
மத்திய அரசின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவில் நுழைய விடாமல் பல முறை விரட்டியிருக்கிறது சிவசேனா..
ஈழப் படுகொலைகளை காரணம் காட்டி இலங்கையில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை பல ஐரோப்பிய நாடுகள் புறக்கணித்திருக்கின்றன.
தென்னாப்பிரிக்காவில் இனப் போராட்டங்களின் போது பல முறை கிரிக்கெட் தடை செய்யப்பட்டிருக்கிறது..
இங்கிலாந்து, ஜிம்பாப்வே போன்ற நாடுகள் ஆடிய விளையாட்டுகள் கூட நிறுத்தப்பட்டிருக்கின்றன.
மக்களின் உணர்வுகளுக்கும், போராட்டங்களுக்கும், உரிமைகளுக்கும் அந்தந்த அரசுகள் மதிப்பளித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இவை.
இங்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த யோசிக்கும் மத்திய அரசையும், அதை வேடிக்கை பார்க்கும் மாநில அரசையும் ஆதரிக்கும் விதமாக இலவ்ச ஆலோசனை வழங்குகிறார் ரஜினிகாந்த்.
வன்முறை எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்ப்பவர்கள் தான் தமிழர்கள்.
ஆனால் இந்தப் பரிந்துரையை சிவசேனாவுக்கும் மகாராஷ்ட்ராவுக்கும் கூறுவாரா, வேங்கையன் மகனான “காலா” ரஜினி? எத்தனை படங்களில் அவர் சீருடைக் காவலர்களைத் தாக்கி இருக்கிறார்?