பிரதமர் நரேதிர மோடிக்கு கருப்புக் கொடி காட்டியதில் தவறில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் நடப்பது கைப்பாவை ஆட்சி என்று சந்திரபாபு நாயுடு சொன்னது உண்மைதான் எனக் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது டிடிவி தினகரன் கூறுகையில், “ஆந்திர மாநிலத்துக்கு பிரதமர் மோடி வந்தால், தமிழகத்தில் எதிர்ப்புத் தெரிவித்ததை போல் கடுமையாக எதிர்ப்போம். இதில் எந்த  மாற்றமும் இல்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆவேசமாகத் தெரிவித்திருப்பது சரிதான்” எனக் கூறியுள்ளார்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து  முதன்முதலில் தமிழகத்தில் உண்ணாவிரதம் இருந்ததே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான் என்றும், தமிழகம் வந்த பிரதமருக்கு கருப்பு கொடி காட்டியதில் தவறில்லை என்றும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எப்போதும் மதவாத சக்திகளுக்கு ஆதரவு அளிக்காது என தெரிவித்தார். மேலும், தமிழகத்திற்கு மோடி அவர்கள் வந்த போது தற்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் பற்றி எதுவுமே பேசாமல் சென்றுள்ளார் என்றும் தமிழகம் இந்திய வரைபடத்தில் இருந்தே மறைந்து விட்டது போல் அவர் நடந்து கொள்கிறார் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

பகிர்