பா.ஜ.கவை வீழ்த்துவதற்கு அகில இந்திய அளவில் கூட்டணியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது காங்கிரஸ் கட்சி. ‘ தி.மு.க கூட்டணிக்குள் தினகரன் வந்துவிட்டால், பா.ஜ.கவை முழுமையாக வீழ்த்திவிட முடியும்’ என மன்னார்குடி தரப்பிடம் தூது சென்றிருக்கிறார் திராவிடக் கட்சித் தலைவர் ஒருவர்.

காவிரி விவகாரத்தை மையமாக வைத்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்துள்ளன. கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா நிகழ்வையொட்டி, தேசிய கட்சிகளை மேடையேற்றினார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். ‘ பா.ஜ.கவுக்கு எதிராக அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் அனைத்தும் திரள வேண்டும்’ என்ற முழக்கத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி. தமிழகத்திலும் மத்திய அரசுக்கு எதிரான அணியைக் கட்டமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் மு.க.ஸ்டாலின். இதன் ஓர் அங்கமாக தினகரனைத் தி.மு.க அணிக்குள் கொண்டு வரும் வேலைகள் தீவிரம் அடைந்து வருகின்றன. ‘ கூட்டணிக்குள் நீங்கள் வந்தால், காங்கிரஸ் கட்சியை மூன்றாவது இடத்தில் வைத்துவிடலாம். மோடி எதிர்ப்பு வாக்குகளை உங்களால் மிக எளிதாகப் பிரிக்க முடியும். நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான வெற்றியைப் பெறலாம்’ என தினகரன் தரப்பிடமே சிலர் தகவல் சொல்லி அனுப்பியுள்ளனர். இதற்கு தினகரன் தரப்பினர் எந்தப் பதிலும் சொல்லவில்லை.

ராணுவக் கண்காட்சி நிகழ்வுக்கு பிரதமர் வந்தபோது, கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டு வலுவான எதிர்ப்பைக் காட்டியது தி.மு.க. இந்தப் போராட்டம் குறித்துப் பேசிய தினகரன், ‘ என்னதான் இருந்தாலும் அவர் இந்த தேசத்தின் பிரதமர். அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது சரியானதல்ல’ எனப் பேசினார். இப்படியொரு கருத்தை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்பார்க்கவில்லை. தினகரன் பேசிய அதேநாளில், இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் நேரடியாக ஆஜராவதில் இருந்து தினகரனுக்கு விலக்கு அளித்தது டெல்லி, பாட்டியாலா நீதிமன்றம். இந்த இரண்டு விஷயங்களையும் முடிச்சுப் போட்டுப் பேசும் பா.ஜ.க-வினர், ‘ தி.மு.க-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்குள் தினகரன் வந்துவிட்டால், மோடிக்கு அது சிக்கலை ஏற்படுத்தும். அதுவே, தினகரன் தனித்துப் போட்டியிட்டால் மோடி எதிர்ப்பு சிறுபான்மை வாக்குகள் அனைத்தும் சசிகலா தரப்புக்குச் சென்றுவிடும். இதன்மூலம் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க அணி வெல்லும். இதனையொட்டியே மன்னார்குடி தரப்பினர் சிலர் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதன் நீட்சியாகத்தான் கறுப்புக் கொடி காட்டுவது தவறு என தினகரன் பேசினார். பா.ஜ.க-வின் முயற்சிகளுக்கு மன்னார்குடி தரப்பினரும் அனுசரித்துச் செல்கின்றனர்’ என்கின்றனர்.

ஸ்டாலின்பா.ஜ.க தரப்பில் இப்படியொரு முயற்சி நடப்பதை அறிந்த திராவிடக் கட்சித் தலைவர் ஒருவர், சசிகலா உறவுகளிடம் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். இந்த சந்திப்பில் பேசிய அந்தத் தலைவர், ‘ தி.மு.க அணிக்குள் நீங்கள் வருவதுதான் சரியான முடிவாக இருக்க முடியும். நாடாளுமன்றத் தேர்தலில் மோடியைத் தோற்கடிக்க வேண்டியது அவசியம். மோடியை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. ஆர்.கே.நகரில் உங்களுக்கு வந்த வாக்குகள் அனைத்தும் பா.ஜ.க எதிர்ப்பினால் வந்தவைதான். ‘அண்ணா தி.மு.க வாக்குகள் உங்கள் பக்கம் இருக்கின்றன’ என நினைக்க வேண்டாம். நான் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து கொண்டு வருகிறேன். மாநிலம் முழுவதும் உங்களுக்குப் பரவலாக செல்வாக்கு கிடையாது. சமுதாய வாக்குகள் இருக்கும் பகுதியில் உங்களுக்கு அடர்த்தியான செல்வாக்கு உள்ளது. இதுதவிர, கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளில் கணிசமானவை, உங்கள் பக்கம் வருவதற்கு வாய்ப்பு அதிகம். மாநிலம் முழுவதும் உங்களுக்கு நிர்வாகிகள் இருக்கலாமே தவிர, பரவலாக வாக்கு வங்கி கிடையாது.

தி.மு.கவைவிட்டு வெளியே வரும்போது எனக்குக் கிடைத்த ஆதரவு வளையம் என்பது வேறு. பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.கவைத் தோற்கடித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தேன். கருணாநிதி இருக்கும்போதே இரண்டாம் இடம் வந்தவன் நான். அப்படியிருந்தும், அடுத்துவந்த பெருந்துறை சட்டமன்றத் தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு வாக்குகள்தான் எனக்குக் கிடைத்தன. இதுதான் எதார்த்தம். இப்போதும் மாநிலம் முழுவதும் என்னால் போராட்டம் நடத்த முடியும். அரசியலில் நான் செய்த தவறுகளை, நீங்களும் செய்துவிட வேண்டாம். மோடி எதிர்ப்பு வாக்குகளை நீங்கள் பிரிப்பதால், பா.ஜ.கவுக்குத்தான் லாபம். இதைத்தான் அமித் ஷா-மோடி கூட்டணி விரும்புகிறது. உங்களைத் தனித்துப் போட்டியிட வைக்கும் இந்த முயற்சிக்கு நீங்கள் பலியாகிவிட வேண்டாம். மோடியின் முயற்சிக்கு நீங்கள் செவிசாய்த்தால், 15 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணிக்கு லாபம் கிடைக்கும். தமிழகத்தில் பா.ஜ.கவைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், நீங்கள் தி.மு.க கூட்டணிக்குள் வர வேண்டும். உங்களுக்குப் போதுமான இடங்களை வாங்கித் தருவது குறித்துப் பேசுகிறேன். செயல் தலைவரிடமும் இதுகுறித்து விவாதிக்கிறேன்’ எனப் பேசியிருக்கிறார். இதற்குப் பதில் அளித்த மன்னார்குடி தரப்பினர், ‘ சின்னம்மாவிடம் பேசுகிறோம்’ என ஒற்றை வரியில் பதில் தெரிவித்துள்ளனர்.

‘ தி.மு.க  அணிக்குள் தினகரன் வருவது குறித்த பேச்சுவார்த்தைகள் களைகட்டத் தொடங்கியிருக்கின்றன. நாடாளுமன்றப் பிரசார மேடை அமைக்கப்படும்போது, தி.மு.க மேடையில் தினகரன் அமர்வாரா…அப்படி ஒருவேளை அமர்ந்தால், இத்தனை ஆண்டுகாலம் ஜெயலலிதா உருவாக்கி வைத்த தி.மு.க எதிர்ப்பு வாக்கு என்பது எடப்பாடி பழனிசாமி அணிக்கே சாதகமாகும். அ.தி.மு.கவின் அடிப்படை வாக்குகளை தினகரனால் கவர முடியாது. இந்த உண்மையை சசிகலா தரப்பினரும் உணர்ந்து வைத்துள்ளனர்’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Credit: Vikatan

பகிர்