கல்வி போதிக்கும் பேராசிரியை ஒருவரே மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் ஆடியோவும், அதில் சொல்லும் பல்வேறு பயன்களைக் கேட்கும் யாரும் எளிதில் வலையில் வீழ்த்திவிடும் அளவுக்கு பேராசிரியை மாணவிகளுக்கு ஆசை காட்டுவதும் பல்வேறு மர்மங்களுக்கு வித்தாக அமைந்துள்ளது.

மாணவிகளிடம் செல்போனில் பேசும் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பல வகைகளிலும் வளைக்கப் பார்க்கிறார். இதன் மூலம் ஏதோ அனைத்து மாணவிகளையும் தேர்வு செய்தது போல் இல்லை. குறிப்பிட்டு தேர்வு செய்யப்பட்ட நான்கு மாணவிகளை ஒரு மாணவியின் இல்லத்திற்கு வரவழைத்துப் பின்னர் பேசுகிறார். நால்வரிடமும் பேச வசதியாக ஸ்பீக்கர் போனில் பேசுகிறார்.

மாணவிகளை வளைக்க அவர் பேசும் பேச்சுகளுக்கு மாணவிகள் இடம் கொடுக்காமல் எங்களுக்கு அந்த எண்ணமே இல்லை என்கின்றனர். சில மாணவிகள் கேவலம் என்கின்றனர். ஆனால் அதைப்பற்றி கடைசிவரை நிர்மலா தேவி கவலைப்படவில்லை.

இந்த ஆடியோவின் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிறது. மாணவிகளைத் தேர்வு செய்து அதற்காக பேச பெரிய நெட்வொர்க் இயங்குவது தெரியவருகிறது. இதற்காக பேச அனைத்து வகைகளிலும் மாணவிகளை ஆசை காட்டி தயார் செய்ய ஒரு திட்டமே வகுக்கப்பட்டு செயல்படுவதை பேராசிரியை நிர்மலா அவரை அறியாமல் ஆடியோவில் சொல்கிறார்.

இதில் மாணவிகளை அழைக்கப் பேராசிரியை சொல்லும் காரணம் அடுத்த வாரம் முக்கியமான அசைன்மெண்ட் அவர்களுக்கு உள்ளது, அவர்களுக்கு என்று பேராசிரியை சொல்வது ரொம்ப ரொம்ப ஹையர் அஃபிஷியல் என்று கூறுகிறார். ஒவ்வொரு புரோகிராமிலும் என்னை ஏன் தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் கொடுத்து முன்னிலைப்படுத்துகிறார்கள் என்ன காரணம் என்று தெரியுமா என்று மாணவிகளை கேட்கிறார் பேராசிரியை.

110 பேர் அங்கு செயல்படுகிறார்கள், என்னைப்போல் 400 பேர் இதற்காக செயல்படுகிறார்கள் என்கிறார். அப்படியானால் தமிழகம் முழுவதும் செயல்படும் அந்த 400 பேர் யார் என்ற கேள்வியும் எழுகிறது. அதில் முழுமையான கண்காணிப்பில் தான் என்னைத் தயார் செய்துள்ளனர் என்கிறார்.

ஆளுநர் மீட்டிங்கில் நான் எந்த அளவுக்கு அருகில் சென்று வீடியோ பிடிக்கும் அளவுக்கு எனக்கு செல்வாக்கு இருக்கிறது உங்களுக்கு தெரியும் என்கிறார். கவர்னர் லெவல், ஆனால் கவர்னர் இல்லை. அந்த அளவுக்கு என்னால் செல்லக்கூடிய அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்கிறார்.

மேற்படிப்பு படிக்க ஆசையில்லை அரசுத் துறையில் தேர்வு எழுதப்போகிறோம் என்று மாணவிகள் தட்டிக்கழிக்க, “நான் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்து தருகிறேன், இந்த டிஎன்பிஎஸ்சி லொட்டு லொசுக்கு எல்லாம் சாதாரணம்” என்கிற ரீதியில் பேசுகிறார். மாணவிகளுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் படிக்கவும் ஏற்பாடு செய்து தருவதாக ஆசைக்காட்டுகிறார்.

மாணவிகள் ஒத்துக்கொள்ளவில்லை என்றவுடன் பெரிய லெவலில் தொடர்பு உள்ளது, எதிர்காலம் சொர்க்கமாக இருக்கும் என்று ஆசை காட்டுகிறார். நான் சொல்லும் விஐபி பேரைக்கேட்டால் அப்புறம் நீங்களே தானே வந்துவிடுவீர்கள் அப்படி ஒரு ஆள் என்கிறார்.

இதன் மூலம் தான் திட்டமிட்டு மாணவிகளை வளைக்கப் பேராசிரியை நிர்மலா தேவி பிரயோகிக்கும் வார்த்தைகள் அவருக்குப் பின்னால் பெரிய அளவிலான நெட்வொர்க் இயங்குவதை அவர் சொல்லாமலே உணர்த்துகிறது.

தற்போது நிர்மலாவைக் கைது செய்து போலீஸார் சிறையில் அடைக்க உள்ள நிலையில் ஆளுநர் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணையில் பின்னணியில் உள்ள பல்வேறு ஆட்கள் சிக்குவது மட்டுமல்ல அந்த விவிஐபிக்கள் யார் என்பது உலகுக்குத் தெரிய வேண்டும். அது நடக்குமா? என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

Credit: The Hindu

பகிர்