ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு 5 நாள் பயணமாகப் புறப்பட்டார் பிரதமர் மோடி. அங்கு நடக்கும் காமென்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் மோடி பங்கேற்கிறார்.

இந்தப் பயணத்தில் இங்கிலாந்து, ஸ்வீடன் நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், மாசில்லா எரிசக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்புடன் செயல்படவும் இந்தப் பயணத்தில் திட்டமிடப்படும்.

ஸ்வீடன் நாட்டுக்கு முதலில் செல்லும் பிரதமர் மோடி, ஸ்டாக்ஹோம் நகருக்குச் செல்கிறார். அங்கு அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வனைச் சந்தித்துப் பேசுகிறார். அதன்பின் அங்கு நடக்கும் இந்தியா-நார்டிக் மாநாட்டில் மோடி பங்கேற்கிறார்.

ஸ்வீடன் புறப்படும் முன் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறுகையில், ”இந்தியாவும், ஸ்வீடனும் நட்பைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும். எங்கள் இருதரப்பு உறவுகள் என்பது ஜனநாயக மதிப்புகளையும், வெளிப்படையான, முழுமையான, சர்வதேச உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு இருக்கும். இந்தியாவின் வளர்ச்சியில் ஸ்வீடன் மதிப்புமிக்க நட்பு நாடாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

ஸ்டாக்ஹோம் நகரில் செவ்வாய்க்கிழமை ஸ்வீடன் பிரதமருடன் மோடி சந்தித்து உரையாடுகிறார். அதன்பின் ஸ்வீடன் மன்னர் 16-ம் கார் குஸ்தாபையும் சந்தித்துப் பேசுகிறார். ஸ்டாக்ஹோமில் நடக்கும் இந்தியா-நார்டிக் மாநாட்டில் பின்லாந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்கள், மோடியோடு இணைந்து பங்கேற்கின்றனர்.

அங்கிருந்து புறப்படும பிரதமர் மோடி இங்கிலாந்து நாட்டுக்குச் செல்கிறார். அங்குநடக்கும் காமென்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். மேலும், பிரதமர் தெரசா மேவையும் சந்தித்து மோடி பேச உள்ளார்.

லண்டனில் ராணி எலிபெத்தையும் சந்தித்து பிரதமர் மோடி பேச உள்ளார். லண்டன் நகரில் ஆயுர்வேதா மையம் அமைப்பது தொடர்பாக அந்நாட்டுப் பிரதமர் தெரசா மேவுடன் மோடி ஒப்பந்தம் செய்ய உள்ளார்.

அதன்பின் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடக்கும் காமென்வெல்த் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாடு முடித்து இந்தியா புறப்படும் மோடி, ஜெர்மனியில் இறங்கி, அந்நாட்டு பிரதமர் ஏஞ்செலா மெர்க்கலுடன் சிறிய உரையாடல் நிகழ்த்திவிட்டுப் புறப்படுவார்.

பகிர்