சென்னை: ஆளுநர் மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் நிருபரின் கன்னத்தில் ஆளுநர் தட்டியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் செய்தியாளர்களை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார்.

அப்போது நிர்மலா தேவி ஆடியோவில் ஆளுநர் என குறிப்பிட்டது உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் காவிரி விவகாரம், சூரப்பா நியமனம் என்ன கேள்விக்கணைகள் ஆளுநரை நோக்கி வந்தன. இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பை நிறைவு செய்யும் போது பெண் நிருபர் ஒருவர் ஆளுநரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். அப்போது ஆளுநரோ நீங்கள் என் பேத்தி மாதிரி என்று கூறிக் கொண்டே நிருபரின் கன்னத்தில் தட்டினார். இந்த சம்பவத்தால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அந்த பெண் நிருபர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் செய்தியாளர் சந்திப்பு முடியும் போது ஆளுநரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்.

ஆனால் என் கேள்விக்கு பதில் அளிக்காமல் என் கன்னத்தில் தட்டி என்னை அமைதிப்படுத்தினார். என்னுடைய அனுமதி இல்லாமல் என் கன்னத்தில் அவர் தட்டுவது சாதாரணமாக இருக்கலாம், ஆனால் அது தவறு. அறிமுகம் இல்லாத ஒரு நபரின் அதுவும் பெண்ணின் கன்னத்தை தொடுவது முறையானது அல்ல. என்னுடைய முகத்தை நான் பலமுறை கழுவிவிட்டேன். இதனால் எனக்கு கோபமும் ஆத்திரமும் வருகிறது என்று அந்த பெண் நிருபர் தெரிவித்துள்ளார்.

பகிர்