சர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சி.பி.சி.ஐ.டி-யும் ஆளுநர் நியமித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் விசாரணைக் குழுவும் நாளை முதல் விசாரணையைத் தொடங்கும் எனத் தெரிகிறது. தமிழக ஆளுநராகக் கடந்த அக்டோபரில் பதவியேற்ற பன்வாரிலால் புரோஹித், முதன்முறையாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். நிர்மலா தேவி விவகாரம் குறித்து விளக்கமளிப்பதற்காகச் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்று கூறிய அவர், பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைந்ததால் சந்தித்ததாகவும், அடுத்த 6 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்றும் கூறினார். விசாரணைக்காக நிர்மலா தேவி குறித்த ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி சேகரித்து வருகிறது. இதற்கிடையே, இவ்விவகாரத்தில் ஆளுநர்மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பவே, அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நேற்று மாலை ஆளுநர் பன்வாரிலால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “நிர்மலா தேவி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது; அவர் முகத்தைக்கூட நான் பார்த்தது இல்லை. எனக்கு 78 வயது பிறந்துவிட்டது. கொள்ளுப் பேரன் எடுத்துவிட்டேன். நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இணைத்துப் பேசுவது அடிப்படை ஆதாரமற்றது; அபத்தமானது” எனக் கூறினார். செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் பெண் செய்தியாளர் கன்னத்தை ஆளுநர் தட்டிக்கொடுத்தது, அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் சந்திப்பின்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடந்துகொண்ட விதம் குறித்து பெண் நிருபர், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அந்தப் பெண் நிருபர், “ஆளுநரின் செய்தியாளர் சந்திப்பு நிறைவடையும் நிலையில், நான் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன். அந்தக் கேள்விக்குப் பதிலாக, எனது அனுமதியின்றியே அவர் கன்னத்தில் தட்டினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பலமுறை எனது முகத்தைக் கழுவியும் அதிலிருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை. கோபமும் ஆதங்கமும் எனக்கு ஏற்பட்டது. ஆளுநர் அவர்களே… தாத்தா என்கிற முறையில் எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் முறையில் நீங்கள் இதைச் செய்திருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை நீங்கள் செய்தது தவறு!” என்று ட்விட்டரில் கோபமாக ஆதங்கப்பட்டிருந்தார் அவர்.ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துக்கு இந்த விவகாரத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில் இன்று, கன்னத்தில் தட்டிய விவகாரத்திற்கு வருத்தம் தெரிவித்தார் பன்வாரிலால். இது தொடர்பாக மேற்படி பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனுக்கு எழுதிய கடிதத்தில், ‘நாற்பது ஆண்டுகளாக நானும் பத்திரிகையாளராக இருக்கிறேன். எனது பேத்தி போல நினைத்து கன்னத்தை தட்டினேன். அவரது கேள்வியை பாராட்டும் விதமாகவே அப்படிச் செய்தேன். எனினும் தங்களை இது காயப்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார் ஆளுனர். கன்னத்தில் தட்டியது தொடர்பாக ஆளுநரின் மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்டாலும், அவர் அளித்திருக்கும் விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று பத்திரிகையாளர் லக்ஷ்மி தெரிவித்துள்ளார். அந்த பெண் பத்திரிகையாளர் தனது கோப கருத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த நிகழ்வுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டங்களும் நடத்தினர். இதனையடுத்து, பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் மன்னிப்புக் கோரினார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த மன்னிப்பு கடிதத்தில், இந்நிகழ்வு காரணமாக அவரது மனதின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது திறமையைப் பாராட்டும் வகையிலும் அன்பினை வெளிப்படுத்தும் வகையிலும் எனது பேத்தி போல நினைத்துத் தான் கன்னத்தில் தட்டிக் கொடுத்தேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆளுநர் மன்னிப்பு தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொண்டுள்ள பெண் பத்திரிகையாளர், ஆனால் அதற்கான காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மாண்புமிகு ஆளுநருக்கு, உங்களது மன்னிப்பினை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதே சமயம் நான் கேட்ட கேள்விக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக நீங்கள் நடந்து கொண்டதாக கூறுவது சரி இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் உயரிய பொறுப்பில் இருக்கும் ஆளுநர் கேள்விக்கு பதில் அளிக்காமல், உறவு பாராட்டுவது சரியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Your Excellency, I have with me your letter expressing regret at what happened at the press conference in Chennai the previous day. I accept your apology, even though I am not convinced about your contention that you did it to appreciate a question I asked @TheWeekLive pic.twitter.com/JhjPOQy8UW
— Lakshmi Subramanian (@lakhinathan) April 18, 2018
இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் நாளை டெல்லி செல்லவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தன்னைச் சுற்றும் சர்ச்சைகள் குறித்து நாளை மத்திய அரசிடம் ஆளுநர் விளக்கம் அளிப்பார் எனத் தெரிகிறது. மேலும், காவிரி விவகாரம், ஸ்டெர்லைட் போராட்டம் எனத் தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஆளுநர் நிர்மலா தேவி கொடுத்த மாணவிகளின் போட்டோ ஆல்பத்துடன் டெல்லிக்குப் பயணமாவது குறிப்பிடத்தக்கது.