சென்னை: டி.டி.வி.தினகரன் – திவாகரன் இடையே தற்போது ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட மோதலுக்கு காரணம் என்ன என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணிக்கு சென்றதால் ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சி ஆரம்பித்தார். அந்த கட்சிக்கு சசிகலாவே பொதுச்செயலாளராக இருக்கிறார். ஆனால், சசிகலா குடும்பத்தில் வேறு யாருக்கும் பதவி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக சசிகலாவின் குடும்பத்தில் சண்டை விஸ்வரூபம் எடுக்க ெதாடங்கி உள்ளது. தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், ‘‘எங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்தும் நோக்கில் திவாகரன், ஜெய் ஆனந்த் செயல்படுகின்றனர். 21 எம்எல்ஏக்களும் சசிகலா, டி.டி.வி.தினகரன் தலைமையை ஏற்று தான் செயல்பட்டு வருகிறோம்’’ என்று அறிக்கை விடுத்தார்.
நேற்று முன்தினம் மாலை தஞ்சையில் காவிரிக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய டிடிவி.தினகரன் பேசும்போது, “எனக்கு உறவு என்பது வேறு. கட்சி என்பது வேறு, யாராக இருந்தாலும் ஜெயலலிதா வழியில் தூக்கி எறிவேன். யாருக்கும் பயப்பட்டு, பின்வாங்க மாட்டேன். யாரிடமும் மண்டியிட மாட்டேன்’’ என திவாகரன் மீது மேலும் தாக்குதல் நடத்தினார். இதையடுத்து, திவாகரன் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மன்னார்குடி மன்னை நகரில் உள்ள நல்லதங்காள் கோயில் விழாவுக்கு வந்திருந்தார். அப்போது அவர் கூறும்போது, `தினகரன் தொடங்கி உள்ள கட்சி அவரது குடும்ப நலனுக்காக தொடங்கப்பட்டது. தினகரன் கூடாரம் விரைவில் காலியாகும். அதிமுக அம்மா அணி என்ற பெயரில் நாங்கள் செயல்படுவோம். சசிகலா கூறினாலும் தினகரனுடன் இணைந்து செயல்படமாட்டோம். பதவி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் பலர் எனது ஆதரவாளர்கள்’’ என்று கூறினார்.
இதுவரை இலைமறை, காய்மறையாக இருந்த தினகரன், திவாகரன் மோதல் இப்போது வீதிக்கு வந்து விட்டது. இதற்கு காரணம் என்ன என விசாரித்தபோது இருதரப்பு நிர்வாகிகளும் கூறியதாவது: திவாகரன் சசிகலாவின் சொந்த தம்பி. எனவே அவரை கட்சியில் சேர்த்தால், எதிர்காலத்தில் நம்மை கவிழ்த்து விடுவார். சசிகலாவையே தனக்கு எதிராக திருப்பி விடுவார் என்ற அச்சம் ஆரம்பத்தில் இருந்தே தினகரனிடம் இருந்தது. எனவே தான் அவர் தொடங்கிய கட்சியில் திவாகரனுக்கோ, அவரது மகன் ஜெய்ஆனந்துக்கோ, இளவரசி மகன் விவேக்குக்கோ எந்த பதவியும் தரவில்லை. தன் மகனுக்கு மாநில இளைஞரணி செயலாளர் பதவியை திவாகரன் பல முறை கேட்டும் அவர் மறுத்து விட்டார். குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக ஒதுக்கியதே இந்த மோதலுக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த பிரச்னை தொடர்பாக திவாகரன் பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்து புகார் செய்ய இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இன்னும் சில தினங்களில் அவர் பெங்களூரு செல்வார் என கூறுகிறார்கள்.
அதற்கு முன்னதாக பெங்களூரு செல்ல தினகரனும் திட்டமிட்டு இருக்கிறாராம். தூதர்கள் மூலம் சசிகலாவை சந்திக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்களாம். இனி வரும் நாட்களில் டி.டி.வி.தினகரன் – திவாகரன் மோதல் காரணமாக சசிகலாவின் குடும்ப ரகசியங்கள் பல வெளிவரும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதுபோன்ற, குடும்ப சண்டையால் சசிகலா செய்வதறியாது திகைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், சசிகலா கூறுவதை தினகரன் கேட்பதில்லை. இதனால் திவாகரன் மூலம் தினகரனை சசிகலாவே கட்டுப்படுத்த இந்த மோதலை உருவாக்குவதாக தினகரன் ஆதரவாளர்களும், அவரும் சந்தேகப்படுகிறார். இதனால், சசிகலா ஆதரவு யாருக்கு என்பது தெரியாமல், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்தநிலையில், திடீர் திருப்பமாக இளவரசி மகன் விவேக்கும்- ஜெய் ஆனந்தும் இணைந்துள்ளனர். இதனால் தினகரன் மோதல் புதிய பரிமானத்தை எட்டியுள்ளது.
சசிகலாவுக்கு எதிராக டி.டி.வி.தினகரன்
சசிகலா சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டதால், டி.டி.வி.தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்து, தனது ஆலோசனைபடி செயல்பட சசிகலா உத்தரவிட்டிருந்தார். ஆனால் டி.டி.வி.தினகரன் சசிகலா சொன்னதை செய்யாமல், தானே முழு அதிகாரம் படைத்தவர்போல் ஆரம்பத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறார். முதலில், சசிகலா பேச்சை மதிக்காமல் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். பின்னர் ஓட்டுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கி கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து அதிமுக இரட்டை இலை சின்னத்தை மீட்க பணம் கொடுத்த வழக்கில் சிக்கினார்.
சசிகலா விருப்பத்துக்கு மாறாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதுவும் சசிகலாவுக்கு பிடிக்கவில்லை. சசிகலா உறவினர்களை மதிக்காமல் தினகரன் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டது. சிறையில் இருந்து பரோலில் வந்த சசிகலா 2 முறை இதுபற்றி தினகரனிடம் பேசினார். ஆனாலும், குடும்பத்தில் ஒற்றுமையில்லாததால் தற்போது குடும்ப சண்டை வீதிக்கு வந்துள்ளது. இதனால், பல்வேறு சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள சசிகலாவுக்கு இது மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
புதுகை, தஞ்சை மாவட்டத்தில் டிடிவி கூடாரம் காலியாகிறது
புதுக்கோட்டை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளராக பரணி கார்த்திகேயன் உள்ளார். இவர் திவாகரனின் உறவினர். இவர் மட்டுமின்றி திருமயத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், அரசு போக்குவரத்து கழக அதிமுக தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி குணசேகரன் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஏராளமானோர் திவாகரனின் ஆதரவாளர்கள். அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது எந்த அணிக்கும் செல்லாமல் நடுநிலையாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவரது தம்பி பரணி கார்த்திக்கை டிடிவி தினகரன் கட்சியின் மாவட்ட செயலாளராக நியமித்தார். இதனால் ரத்தினசபாபதி டிடிவி அணிக்கு போகும் கட்டாயம் ஏற்பட்டது. அவரும் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் டிடிவி.தினகரனுக்கும், திவாகரனுக்கு இடையேபிளவு ஏற்பட்டுள்ளதால் புதுக்கோட்டை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திவாகரன் பக்கம் சாய்ந்து தினகரன் கூடாரம் இங்கு காலியாகும் நிலையில் உள்ளதாக அந்த கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். அதேபோன்று, டி.டி.வி.தினகரன் ஆதரவு மாவட்டமாக இருந்த தஞ்சாவூர் பகுதியில் உள்ள நிர்வாகிகளும் திவாகரனுக்கு ஆதரவாக செயல்பட தொடங்கி உள்ளதால் டி.டி.வி.தினகரன் கூடாரம் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது