சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்  பழனிசாமியை எதிர்க்க மாட்டோம் என்று திவாகரன் மகன் ஜெயானந்த் கூறியுள்ளார்.

மேலும், டிடிவி தினகரன், திவாகரன் மோதல் உச்சத்துக்கு வந்த நிலையில் தினகரனை ஜெயானந்த் விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா முதல்வர் ஆகும் முயற்சியில் ஓபிஎஸ்ஸை நீக்க, அவர் தர்மயுத்தம் தொடங்க அதிமுக பிளவுப்பட்டது. சிறைக்குச் செல்லும் முன் டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக சசிகலா அறிவித்துவிட்டுச்செல்ல சிறிது நாளில் தினகரன், சசிகலா இல்லாத அதிமுக என்ற கோஷத்தை வைத்து தினகரனை ஓரங்கட்டினார் எடப்பாடி  பழனிசாமி.

பின்னர் ஓபிஎஸ் எடப்படியுடன் இணைந்தார். இதனிடையே ஜெயா டிவியை யார் வைத்துக்கொள்வது, கட்சி யார் கட்டுப்பாட்டில் என்பதில் திவாகரன், தினகரன் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் சசிகலா இருவரையும் அழைத்து சமாதானப்படுத்தினார். ஆனாலும் மோதல் நீடித்தே வந்தது.

தினகரன் ஆர்.கே.நகரில் வென்றவுடன் அவரது செல்வாக்கு அதிகரித்தது. பொதுமக்கள் மத்தியிலும், மீடியாக்களிலும் தினகரன் அதிமுகவை மீட்பார் என்ற நம்பிக்கை வர ஆரம்பித்த நிலையில் தினகரனுக்கு எதிராக மீண்டும் திவாகரன் போர்க்கொடி தூக்கினார். நடராஜனும் இல்லாத நிலையில் இருபுறமும் வார்த்தைப்போர் உச்சத்தை அடைந்துள்ளது.

சசிகலா சிறைக்கு செல்லவே தினகரன் தான் காரணம். முதல்வர் ஆசைகாட்டி சசிகலா சிறை செல்ல தினகரன் காரணமாக அமைந்தார் என்று திவாகரன் பேட்டி அளிக்க, மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது, சசிகலாவின் தம்பி என்பதைவிட கட்சியில் எந்த தொடர்பும் இல்லாதவர் என தினகரன் பதிலுக்கு தாக்க திவாகரன் தனி அணி தொடங்கிவிட்டார்.

தினகரன் தரப்பிலிருக்கும் முக்கியஸ்தர்களை வளைக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் ஜெயானந்த் கூறியதாவது:

”கட்சியின் மூத்த நிர்வாகிகளை டிடிவி தினகரன் மதிக்கவில்லை. தினகரன் செய்த பிரச்சினையால் தான் தனி அணியாக திவாகரன் செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

சசிகலா விட்டுச் சென்ற அதிமுகவை டிடிவி தினகரனுக்கு காப்பாற்றத் தெரியவில்லை. அதிமுகவை இல்லாமல் செய்துவிட்டு சசிகலாவின் இனிஷியலையே இல்லாமல் செய்துவிட்டார் தினகரன். அமமுக என்ற புதிய கட்சியை தொடங்கி அவரையும் அதில் சேர்த்துள்ளார்.

வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை தர தினகரனுக்கு தெரியவில்லை. மூத்த நிர்வாகிகளை மதிக்கத்தெரியாதவர் எப்படி கட்சியை நடத்தப்போகிறார்.

சசிகலா தான் பழனிசாமியை முதல்வர் என்று அறிவித்துச் சென்றார். அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களை அழைத்து பழனிசாமியை ஆதரிக்கவேண்டும் என்று சத்தியம் வாங்கியுள்ளார். அப்படியானால் பழனிசாமிக்கு ஆதரவாக தானே செயல்பட முடியும். அப்படி எதிர்த்து செயல்பட முடியும். அதிமுக ஆட்சியில் சில குறைபாடுகள் இருந்தாலும் சசிகலாவால் முதல்வராக நியமிக்கப்பட்ட பழனிசாமியை எதிர்க்க முடியாது. ”

இவ்வாறு ஜெயானந்த் தெரிவித்தார்.

பகிர்