நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் பேருக்கு வெளிமாநில தேர்வு மையங்களை ஒதுக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், தமிழக மாணவர்கள் மத்தியில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் கட்டாயமாக்கி 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆண்டு நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வு கிடையாது என்பதால் பல மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு கண்டிப்பாக நீட் தேர்வு நடைபெறும் என்பதால், விருப்பம் உள்ள அனைவருமே விண்ணப்பம் செய்தனர். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை (6ம் தேதி) நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 476 மருத்துவக்கல்லூரிகளில், 60,990 இடங்கள் உள்ளன. இதற்காக 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 2900 இடங்கள் உள்ளன. அதில் 1,07,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்வு எழுத மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை ஒட்டியுள்ள மாநிலங்களுக்கு ஒதுக்கியதையே மாணவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், மகராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மையங்கள் ஒதுக்கியது பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் ரயில்களில் ராஜஸ்தான் செல்ல வேண்டுமானால் 36 மணி நேரம் ஆகும். மேலும் உடனடியாக அவர்களுக்கு இருக்கையும் கிடைக்காது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில்தான் மாணவர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அல்லது ஒரு ஆளுக்கு ரூ.18 ஆயிரம் செலவு செய்து விமானத்தில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர் அல்லது மாணவிகள் தனியாக சென்று எழுத முடியாது. பெற்றோருடன் செல்ல வேண்டும். அப்படி சென்றால் பலருக்கும் செலவு அதிகமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதைத் தவிர தங்கும் வசதி, வாகனச் செலவு என்று பல இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும், வாகன வசதிகள், அதிகாரிகளை உடன் அனுப்புவது போன்ற பணிகளை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வெளிமாநிலங்களில் தேர்வு ஒதுக்கியதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீட் எனும் நாசகார தேர்வே வேண்டாம் என்பதுதான் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கோரிக்கை. இந்த நீட் தேர்வை எதிர்த்துதான் மாணவி அனிதா தூக்கிட்டு மாண்டு போனார். ஆனால் தமிழர்களின் மரணங்களை துச்சமாகத்தான் மத்திய பாஜக அரசு கருதுகிறது. தற்போது நீட்டை திணித்ததுடன் மேலும் கொடூர வஞ்சகத்தை அரங்கேற்றியிருக்கிறது. இதைத் தட்டிக்கேட்க வேண்டிய தமிழ்நாட்டு அரசோ வாய்மூடி மவுனியாக பல்லைக் காட்டிக் கொண்டு ரூ1,000 நிதி உதவி தருகிறதாம். கிராமங்களை விட்டு மாவட்ட தலைநகரங்களைக் கூட எட்டிப்பார்க்காத ஏழை மாணவர்களை அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு துரத்துவதை எப்படி மன்னிக்கத்தான் முடியும்? தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாகத்தான் மத்திய பாஜக அரசு நடத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு எதனையும் சொல்ல முடியாது! இது தமிழ்நாட்டு மக்களின் ஏற்படுத்தப் போகும் எதிர்விளைவுகளுக்கு மத்திய பாஜக அரசுதான் பொறுப்பு! இந்தநிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெளி மாநிலத்திற்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும், அவர்களுடன் செல்லும் நபர் ஒருவருக்கும் பயணப் படியாக இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணமும், (பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு, இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்திற்கு மிகாமலும்), இதர செலவினங்களுக்காக மாணவர் ஒருவருக்கு தலா ரூ.1,000 வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதை அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து முன்பணமாகவே பெற்றுக் கொள்ளலாம் அல்லது தேர்வு எழுதி திரும்பிய பிறகும் பயணம் மேற்கொண்டதற்கான உரிய ரசீதுகளைக் கொடுத்து மேற்படி தொகையை பெற்றுக் கொள்ளலாம். முன்பணம் பெற்றவர்கள் தேர்வு எழுதி திரும்பிய பின், உரிய ரசீதுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும். ஏதேனும் சிரமம் ஏற்படும்பட்சத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டோ அல்லது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லா தகவல் / ஆலோசனை மைய தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ உரிய உதவிகளைப் பெறலாம்’’ என்று கூறியுள்ளார். பின்னர் நமது கப்சா நிருபரிடம் தனிமையில் கூட்டுக்களவாணிகள் ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் அளித்த கப்சா பேட்டியில் “போன வருஷம் அனிதா செத்திச்சு, இந்த வருஷம் டாஸ்மாக் பாதிப்பால் பிளஸ் டூ மாணவன் தினேஷ் தூக்கில் தொங்கினார், ஆனாலும் எங்களுக்கு கல்லா கட்டுவது தான் முக்கியம், தமிழ்நாட்டுக்கு இனி காவிரி வாட்டரும் இல்லை, எம்.பி.பி.எஸ் டாக்டரும் இல்லை ஒன்லி டாஸ்மாக் குவார்ட்டர் மட்டும்தான்” என்று சிரித்தனர்.

பகிர்