தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, 23 ஆண்டுகளாக பல போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தி வந்தபோதும், இந்த அளவுக்கு கொந்தளித்துள்ளதற்கும் காரணம் உள்ளது. உயிர் தியாகம் செய்யும் அளவுக்கு அவர்கள் போராட வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத், மஹாராஷ்டிரா, கோவா உள்பட பல்வேறு மாநிலங்கள் அனுமதி மறுக்கப்பட்டதால், 1995ல் தமிழகத்தின் தூத்துக்குடிக்கு வந்தது ஸ்டெர்லைட் ஆலை. இந்த ஆலையை அமைக்க அனுமதி அளித்ததுடன், உடனடியாக அவசர அவசரமாக சுற்றுச்சூழல் அனுமதியையும் தமிழக அரசு அப்போது அளித்தது. ஆனால், அதன்பிறகு, அங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் கூட இதுவரை இருந்த அரசுகளுக்கு ஏற்படவில்லை. ஆனால், இந்த ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளூர் மக்கள் நேரடியாக ஆளாகினர். பல்வேறு சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர்கள், அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கின. கிட்டத்தட்ட கடந்த, 23 ஆண்டுகளாக, இந்த ஆலையை எதிர்த்து தொடர்ந்து பல்வேறு சட்டப் போராட்டங்களும், அமைதியான போராட்டங்களும் நடந்து வந்துள்ளன. லண்டனைச் சேர்ந்த வேதாந்தா ரிசோர்சஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான அனில் அகர்வாலுக்கு சொந்தமானதுதான் ஸ்டெர்லைட் ஆலை. இந்த நிறுவனம், வேதாந்தா நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தாமிரத் தாதுக்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இருக்கின்றன. அந்தத் தாதுக்களில் இருந்து தாமிரத் தகடுகளை உருவாக்குவதுதான் ஸ்டெர்லைட் ஆலையின் முக்கிய தொழிலாகும். ஆனால், இவ்வாறு தகடுகளாக மாற்றும்போது கிடைக்கும் தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம் ஆகியவற்றின் மூலமும் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பது அவர்களின் கணக்கு. அதே நேரத்தில் இந்த அமிலங்களை முறையாக கையாள விட்டால் அது சுற்றுச்சூழலுக்கும், அருகில் உள்ள பகுதியில் உள்ள மக்களுக்கும் பெரும் ஆபத்தை உருவாக்கும். ஆனால், எந்த ஒரு சுற்றுச்சூழல் கண்காணிப்பும், பொறுப்பும் இல்லாமல், இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட பல வழக்குகளால், சில காலம் மூடப்படுவதும், மீண்டும் திறக்கப்படுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, ரூ.100 கோடியை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதே நேரத்தில் தூத்துக்குடி மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் அமைதியாகவே ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து உடல் நலப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட ஆலையை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு மிகப் பெரிய இடி விழுந்தது. ஆலையை சுற்றியுள்ள சிப்காட் விரிவாக்கப் பகுதியில் தனது 2-வது ஆலையின் விரிவாக்க பணிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்டது. அதையடுத்தே இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போரட்டத்தில் இறங்கினர். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஆலையில், 4 லட்சம் டன் தாமிரத் தகடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிய ஆலையில், அதைவிட நான்கு மடங்கு அதிகம் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவே கிராம மக்கள் கொந்தளித்து எழுந்துள்ளதற்கு காரணம். அதனால் நடந்த போராட்டங்களின்போது துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. தினமும் செத்துப் பிழைக்கும வகையில் வாழ்க்கை அமைந்துவிட்டது. எதிர்கால சந்ததியினர் நிலைமை என்னவாகும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. அதனால் தான், தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து இந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தனை போராட்டங்களுக்குப் பிறகாவது, மத்திய, மாநில அரசுகள் விழித்துக் கொண்டு, அங்குள்ள நிலைமையை புரி்ந்து, உணர்ந்து, பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை தவிர்த்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான நடவடிக்கையே தற்போதைய தேவை. இந்த நிலையில் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு போடப்பட்டதால் பிணங்களை பார்க்க அங்கு செல்ல முடியவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவையில் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தை முடித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதை குறித்து கேள்வியெழுப்பட்டது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஆளும் அரசுக்கு கெட்ட பெயர் உருவாக்க வேண்டும் என்பதால் இது போன்ற சூழல் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சிகள் மற்றும் சில இயக்கங்கள் மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதாக குற்றஞ்சாட்டிய அவர், அப்பாவி மக்கள் தான் இதில் பாதிக்கப்படுவதாக கூறினார். இயல்பு நிலைக்கு திரும்பவே 144 போடப்பட்டது எனவும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் தாம் தூத்துக்குடிக்கு செல்லவில்லை எனவும், காது குத்து, மஞ்சள் நீராட்டு விழா போன்றவற்றிற்கு சென்று இளம் யுவதிகளுக்கு ஹேப்பி ‘வயசுக்கு வந்த-டே’ சொல்லவே நேரம் போதவில்லை என அவர் பதிலளித்தார். மேலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு தொடர் கப்சா முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

பகிர்