ஜெயலலிதா என்ன சாப்பிட்டார் என்பது குறித்த தகவலை இப்போது வெளியிட காரணம் தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்பவா என்ற கேள்வி பல தளங்களிலும் எழுந்துள்ளது. ஜெயலலிதா மறைந்த நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அதுபற்றி விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று திடீரென அவர் மருத்துவமனையில் இருந்து பேசியதாக கூறி சில ஒலிப்பதிவுகள் வெளியாகியுள்ளன. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் திடீரென மீடியாக்களுக்கு கசிந்துள்ளன. இதையடுத்து ஊடகங்களின் கவனம் அந்த செய்தி பக்கம் இயல்பாகவே திரும்பியது. இதனிடையே சமூக ஆர்வலர்களோ, இவ்வாறு, ஒரு ஆடியோ இப்போது தேவையில்லாமல் வெளியிட அவசியம் என்ன என்ற கேள்வியை முன் வைக்கிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த நேரத்தில் தனக்கு வேண்டிய உணவு குறித்து கைப்பட எழுதிய பதிவுகள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சையில் உடல் நலம் தேறிவந்த நிலையில் அவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நேரம் அவரை யாரும் சந்திக்கவில்லை என்று ஒரு கருத்தும், சிலர் சந்தித்தார்கள் என்ற கருத்தும் வைக்கப்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக ஓபிஎஸ் உள்ளிட்டோர் பெரிதாக பிரச்சினை கிளப்ப அதுகுறித்து ஒரு நபர் ஆணைய விசாரணை அமைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அதில் பலரும் தங்கள் தரப்பு சாட்சியத்தை அளித்து வருகின்றனர். இடையில் டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ திடீரென ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகளை வெளியிட்டார். ஆறுமுகசாமி ஆணையத்திலும் அதை அளித்தார். ஜெயலலிதா சிகிச்சையில் நன்கு உடல்நிலை தேறி வந்தார், திடீரென ஏற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்திற்கு காரணம் என சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு வலு சேர்க்கும்விதமாக அந்த வீடியோ அமைந்தது. இதற்கிடையே ஆறுமுக சாமி ஆணையத்தில் ஆஜரான ஜெயலலிதா தரப்பு மருத்துவர் சிவகுமார் ஜெயலலிதா பேசிய ஆடியோ தொகுப்பின் பென் டிரைவை அளித்துள்ளார். அதில் தனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட அனுபவத்தை ஜெயலலிதா பேசுவதாக அமைந்துள்ளது. கடந்த 2016-ஆம் தேதி செப்டம்பர் 27-ஆம் தேதி அப்பல்லோவில் ஜெயலலிதா 52 வினாடிகள் பேசிய ஆடியோ இன்று ரிலீஸாகியுள்ளது. அதில் அவருக்கு ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த ஆடியோவில் ஜெயலலிதா அவ்வப்போது இருமுகிறார்.
அப்போது ஜெயலலிதா: எவ்வளவு என்கிறார்
மருத்துவர் : 140
ஜெயலலிதா : பை என்ன இருக்கிறது (டயஸ்டோல் என்ன என்கிறார்)
மருத்துவர்: 80
ஜெ.: 140/80 எனக்கு நார்மல்தான்
மூச்சுதிணறல் எப்படி உள்ளது என்ற கேள்வி,
ஜெ.: திரையரங்கில் முதல்வரிசையில் அமர்ந்திருக்கும் ரசிகன் விசிலடிப்பதை போல் உள்ளது மூச்சுத்திணறல் என்கிறார்.
ஜெ.: எதில் ரெக்கார்ட் செய்கிறீர்கள்
மருத்துவர் சிவக்குமார்: விஎல்சியில் ரெக்கார்ட் செய்கிறேன்
ஜெ.: பதிவு செய்வது சரியாகக் கேட்கிறதா
மருத்துவர் சிவக்குமார்: சிறப்பாக இல்லை
ஜெ.: இதற்காகத்தான் நான் அப்பவே கூப்பிட்டேன். எடுக்க முடியாதுனு சொன்னீங்க
மருத்துவர் சிவக்குமார்: விஎல்சி அப்ளிகேஷன் டவுன்லோடு செய்கிறேன்.
ஜெ.: ஒன்னு கிடக்க ஒன்று நீங்களும் செய்றீங்க ,எடுக்க முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என்கிறார்
மேலும் ஆகஸ்ட் 2, 2016 அன்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட உணவுப் பட்டியலையும் மருத்துவர் சிவக்குமார் அளித்தார். அதில் பச்சை கலர் மையில் தனக்கு வேண்டியதை எழுதியுள்ளார். 02.08.2016ல் ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் என்ற பெயரில் வெளியாகியுள்ள பட்டியலில், காலையில் ஒன்றரை இட்லி, 4 ரொட்டி துண்டுகள், காபி, இளநீர், ஆப்பிள், பிஸ்கட், மதிய உணவாக சாதம், தயிர், முலாம்பழம், இரவு உணவாக உலர் பழங்கள், இட்லி உப்புமா, தோசை, ரொட்டி, பால் சாப்பிடுவதாக ஜெயலலிதா கைப்பட எழுதி வைத்துள்ளதாக அந்த குறிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் டுவிட்டரில் கூறுகையில், ஜெயலலிதா இட்லி, ரொட்டி, ஆப்பிள் கேட்ட குறிப்பும், .அவருடைய குரல் பதிவு ஒன்றும் வெளியாகி உள்ளது. உப்புச் சப்பற்ற இந்தச் செய்திகள் இப்போது ஏன் வெளியிடப்படுகின்றன? யாரும் தூத்துக்குடி பற்றிப் பேசாமல், இது குறித்துப் பேசுங்கள் என்பதற்குத்தான். இவ்வாறு கூறியுள்ளார்.
#ஜெயலலிதா இட்லி, ரொட்டி, ஆப்பிள் கேட்ட குறிப்பும், .அவருடைய குரல் பதிவு ஒன்றும் வெளியாகி உள்ளது. உப்புச் சப்பற்ற இந்தச் செய்திகள் இப்போது ஏன் வெளியிடப்படுகின்றன? யாரும் #தூத்துக்குடி பற்றிப் பேசாமல், இது குறித்துப் பேசுங்கள் என்பதற்குத்தான்.
— SubaVeerapandian (@Suba_Vee) May 26, 2018
வெளி மாநில, வெளிநாடு வாழ் தமிழர்கள் கூட ஸ்டெர்லிட் விவகாரம் பற்றி கொதித்து எழுந்த நிலையில் இந்த கொதிநிலையை அடக்கவும், திசைதிருப்பும் வகையாகவும் ஜெயலலிதா பேசிய ஆடியோ ரிலீஸ்.. ஆஹா என்ன ஒரு திட்டம்! இப்படி கூறுகிறார்கள் நெட்டிசன்ஸ்.